Monday, July 1, 2024
Home » உக்ரைனில் 6 வது நாளாக போர் ரஷ்யா குண்டு வீச்சில் இந்திய மாணவன் பலி: உணவு வாங்க வரிசையில் நின்றவர் உயிரிழந்த சோகம்

உக்ரைனில் 6 வது நாளாக போர் ரஷ்யா குண்டு வீச்சில் இந்திய மாணவன் பலி: உணவு வாங்க வரிசையில் நின்றவர் உயிரிழந்த சோகம்

by kannappan

கார்கிவ்: உக்ரைனில் 6வது நாளாக நேற்றும் போர் நடந்தது. இதில், உணவு வாங்க வரிசையில் நின்றிருந்த போது, ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சில் இந்திய மாணவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவதை தடுக்க அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. பல நகரங்களை கைப்பற்றி உள்ள ரஷ்ய ராணுவம், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் ஆகிய இடங்களில் தற்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, உக்ரைனில் சிக்கி உள்ள இந்திய மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேரை மீட்க ஒன்றிய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற மீட்பு திட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது. போர் தொடங்கி 5 நாளில் 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் ரயில் மூலம் அண்டை நாடுகளின் எல்லை நகரங்களுக்கு செல்லுமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டது. இதற்காக உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் ரயில் நிலையத்தில் ஏராளமான இந்திய மாணவ, மாணவிகள் தஞ்சமடைந்துள்ளனர்.இந்நிலையில், 6ம் நாளாக நேற்று கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் உச்சகட்ட தாக்குதலை அரங்கேற்றியது. நகரின் மைய பகுதியில் உள்ள பிரமாண்டமான அரசு கட்டிடத்தின் மீது ராக்கெட் வெடிகுண்டு வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. அப்போது ஏராளமான மக்கள் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் உணவு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. குண்டுவீச்சில் கட்டிடம் சுக்குநூறாக சிதறியது. இதில், இந்தியாவை சேர்ந்த மாணவர் எஸ்.ஜி. நவீன் என்பவர் பலியாகி உள்ளார். உக்ரைன் போரில் பலியாகும் முதல் இந்திய மாணவர் இவர். கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் தாலுகா, சவுகிரி கிராமத்தை சேர்ந்த 21 வயதான இந்த மாணவர் குண்டுவீச்சில் பலியான தகவலை ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் உறுதி செய்தது. மாணவன் இறந்த தகவல் கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பிரதமர் மோடி, மாணவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவும், உக்ரைன் ராணுவமும் தான் பொறுப்பு என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் பத்திரமாக வெளியேற ரஷ்யா, உக்ரைன் நாடுகள் வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, மாணவர்களை மீட்கும் பணி  தொடர்பாக பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து  தகவல்களை விளக்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தலைநகர் கீவ்வில் சிக்கி உள்ள இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் நேற்று அறிவுறுத்தியது. இந்த நகரத்தின் மீது ரஷ்ய படைகள் பயங்கர தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் தகவல் கிடைத்து இருப்பதால், இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சக மாணவி பரபரப்பு பேட்டி: கார்கிவ் மருத்துவ பல்கலையில் படிக்கும் 1200 இந்திய மாணவர்களின் ஒருங்கிணைப்பாளரான முதுகலை மருத்துவ மாணவி பூஜா பிரகாராஜ் கூறுகையில், ‘‘கார்கிவ் நகரில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தான் நவீன் தங்கியிருந்தார். காலையில் சிட்டி சென்டர் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் உணவு வாங்க அவர் சென்றிருந்தார். அப்போது கவர்னர் மாளிகை அருகே பயங்கர வெடிகுண்டு வெடித்து சிதறியது. அதன் பின் சிறிது நேரம் கழித்து நவீன் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில்  உக்ரைனை சேர்ந்த பெண் ஒருவர் ரஷ்ய மொழியில் பேசினார். குண்டுவெடிப்பில் நவீன் இறந்து விட்டதாகவும் அவரது உடல் பிணவறைக்கு வந்திருப்பதாகவும் கூறினார். உடலையும், அவரது செல்போன் உள்ளிட்ட உடைமைகளை பெற்றுச் செல்லுமாறு அவர் எங்களை அழைத்தார்’’ என்றார்.* பிரதமர் மோடி அவசர ஆலோசனைஉக்ரைனில் நிலைமை மிக மோசமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நேற்று மீண்டும் நடத்தப்பட்டது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். உக்ரைன் விவகாரத்தில் கடந்த 27ம் தேதியிலிருந்து பிரதமர் மோடி நடத்திய 4வது அவசர ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.* எங்கள் கனவு நாசமாகி விட்டதே: நவீனின் தந்தை கதறல்நவீன் பலியாகிய தகவல் கேட்டதும், கர்நாடகாவில் அவருடைய சொந்த ஊரில் பெற்றோர், உறவினர்கள், கிராமத்தினர் கதறி அழுதனர். கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. ஹாவேரி மாவட்டத்தில் உள்ள நவீன் நண்பர்கள், அவரது பெற்றோர்கள் நவீன் வீட்டிற்கு வந்து பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். கிராமத்தில் கூடியவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகிறார்கள். இதனால், அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். நவீனின் பெற்றோருக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாநில தலைவர்கள் ஆறுதல் கூறினர்.மாணவர் நவீனின் தந்தை சேகரப்பா கியான கவுடா கதறியபடி கூறுகையில், ‘‘உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் போர் தொடுத்த நாளில் அங்கு தங்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்துவரும் முயற்சியை இந்திய வெளியுறவு துறை மேற்கொண்டிருந்தால், என் மகன் பலியாகி இருக்க மாட்டார். ஒன்றிய அரசின் மெத்தன போக்கு எனது மகன் உயிரிழப்புக்கு காரணம். எங்கள் வலிக்கு யார் ஆறுதல் கூறுவது? எங்கள் வேதனையை யாரிடம் முறையிடுவது? எங்கள் கனவுகள் அனைத்தும் நாசமாகி விட்டதே. என் மகனை நான் இழந்தது போல், உக்ரைனில் பரிதவித்து வரும் மற்ற மாணவர்களை அவர்கள் பெற்றோர் இழக்காமல் இருக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.சேகரப்பாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஹரிஷ் பெங்களூருவில் கல்லூரி ஒன்றில் பிஎச்டி படித்து வருகிறார். 2வது மகன் நவீன். உக்ரைனின் கார்கிவ் மாநகரில் உள்ள நேஷனல் மருத்துவ கல்லூரியில் 4வது ஆண்டு படித்து வந்தார். அவர் படிப்பு முடித்ததும் சொந்த கிராமத்தில் மருத்துவமனை கட்டி, அதில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் சேகரப்பாவுக்கு இருந்தது. அதற்காக பணம் திரட்டுவதற்காக சவுதி அரேபியாக்கு சென்று சில ஆண்டுகள் வேலை செய்து வந்தார்.* ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றதுகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த துயரச் செய்தி கிடைத்தது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், உக்ரைனில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்திற்கான ஒரு உறுதியான திட்டம் இந்திய அரசுக்கு தேவை. ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது” என்று கூறி உள்ளார்.* பிரான்ஸ் தூதரகம் மூடல்உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால், பிரான்ஸ் தூதரகத்தை தலைநகரில் இருந்து மாற்றப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் யூவ்ஸ் லி டிரைன் கூறுகையில், ‘போருக்கு மத்தியில் கீவ்வில் இருந்த பிரான்ஸ் தூதரகம் மேற்கு நகரமான லிவிவ் நகருக்கு மாற்றப்படுகிறது. தூதர் எட்டியென் டி பொன்சின்ஸ் உக்ரைனில் இருப்பார்’ என்று கூறி உள்ளார். * ஊடகங்கள் மூலம் போலி செய்திகள்ஐரோப்பாவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்யாவின் ஆர்டி, ஸ்புட்னிக் ஊடகங்கள் (அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை) தவறான தகவல், பொய் பிரசாரத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்று பேஸ்புக்கும், இன்ஸ்டாகிராமும் அவற்றுக்கு தடை விதித்துள்ளன….

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi