Sunday, October 6, 2024
Home » ஈஸ்வரபுரத்து சிவாலயத்தில் பேயாரும் பெருங்காடும்

ஈஸ்வரபுரத்து சிவாலயத்தில் பேயாரும் பெருங்காடும்

by kannappan
Published: Last Updated on

*கம்போடியாகம்போடிய நாட்டு அங்கோர் நகரிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் குலேன் மலைப்பகுதியை ஒட்டி பென்தே எனும் சிவாலயம் உள்ளது. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கெமர் அரசன் இராஜேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் அம்மன்னவனின் அறங்கூர் அவயத்து ஆலோசகராக விளங்கிய யக்ஞவராகர் என்பவரால் இவ்வாலயம் எடுக்கப்பெற்றது என்பதையும், கி.பி. 967 ஏப்ரல் 22ஆம் நாளில் கடவுள் மங்கலம் செய்யப்பெற்றது என்பதையும் இங்குள்ள கெமர் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. இராஜேந்திரவர்மனுக்குப் பின்பு அரியணை அமர்ந்த ஐந்தாம் ஜெயவர்மன் என்ற அரசனுக்கு யக்ஞவராகரே குலகுருவாக விளங்கினார் என்ற செய்தி குறிப்பிடத்தக்கதாகும்.மேல்சியாம் ஆற்றின்கரையில் ராஜேந்திரவர்மனால் வழங்கப்பெற்ற ஒரு பரந்த நிலப்பரப்பில் இவ்வாலயம் எடுக்கப்பெற்றது. இதனை யக்ஞவராகரின் உடன் பிறந்தவர்கள் கண்காணித்து கட்டடம் எழுப்ப இராஜேந்திரவர்மன் இறப்பதற்கு ஓராண்டு முன்பாகவே பணி நிறைவுற்று வழிபாட்டுக்குரியதாயிற்று. இக்கோயிலை நடுவணாகக் கொண்டு அங்கு மக்கள் குடியேற்றம் ஏற்பட்டு அப்பகுதி நகரமாக மாறியது. அந்நகரம் ஈஸ்வரபுரம் என்ற பெயரில் விளங்கிற்று. கம்போடிய நாட்டு ஆலயங்கள் நிர்மாணம் பெற தமிழ்நாட்டிலிருந்து (காஞ்சிபுரத்திலிருந்து) சென்ற சிற்பிகளும், குருமார்களும், கோயில் சார்ந்த கலைஞர்களும் அந்நாட்டினர்க்கு உதவினர் என்பதை பல கெமர் கல்வெட்டுச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.மேலும், இவ்வாலய அமைப்பு தமிழக கோயிற் கலையை அடிப்படையாகக் கொண்டு கெமர் கலை மரபில் எடுக்கப்பெற்றுள்ளது. இவ்வாலயத்து சிற்பங்களைக் கூர்ந்து நோக்கும்போது தமிழ்நாட்டுக் கோயிற் சிற்பக்கலையின் தாக்கம் மிக்கோங்கி இருப்பதைக் காணலாம்.பென்தே என்ற கெமர்மொழிச் சொல் அழகின் இருப்பிடம் என்பதைக் குறிப்பதாகும். உண்மையிலேயே இவ்வாலயம் கட்டடக் கலை நுட்பங்களாலும், அங்கு இடம்பெற்றுள்ள பேரழகு வாய்ந்த நுட்பமிகு சிற்பங்களாலும் அப்பெயருக்கு பொருத்தமுடையதாகவே திகழ்கின்றது.அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சில இடிபாடுகளுடன் மறைந்து திகழ்ந்த இவ்வாலயத்தை 1914ஆம் ஆண்டில் பிரெஞ்சு நாட்டு வல்லுநர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தினர். பின்னர் அவ்வாலயத்திலிருந்த சில சிற்பப் பலகைகளை உள்நாட்டுக் கொள்ளையர்கள் அகற்றி விற்க முற்பட்டபோது 1923 ஆண்டு காலத்தில் அவை கண்டுபிடிக்கப்பெற்று மீட்கப்பெற்றன.1931ஆம் ஆண்டில் அரசு இவ்வாலயத்தின் இடிபாடுகளை அகற்றி முழுவதுமாக செப்பம் செய்து மீண்டும் பொலிவுடையதாக மாற்றி அமைத்தது.ஒரு அழகிய நீர்நிலை, அதில் ரம்மியமாகப் பூத்துத் திகழும் அல்லிமலர்கள் அலங்கரிக்க அதன் நடுவுள் கிழக்கு நோக்கியவண்ணம் ஆலயம் அமைந்துள்ளது.நீரின் நடுவே திட்டில் திகழும் ஆலயத்திற்குச் செல்ல கிழக்கிலும் மேற்கிலும் இணைப்பு வழித்தடங்கள் உள்ளன. மூன்று ஆலய விமானங்கள் மையப்பகுதியில் திகழ நடுவண் அமைந்த சிவனார்க்குரிய கருவறைக்கு முன்பாக அதனுடன் இணைந்து அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் ஆகிய மூன்றுவித கட்டடப் பகுதிகளுடன் மூலவர் திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையுள் லிங்கப்பெருமான் திருவுருவம் இடம்பெற்றுள்ளது. நடுவண் அமைந்த மூலவர் விமானத்திற்கு ஒருபுறம் திருமாலின் கருவறையும் ஒருபுறம் பிரமனுக்குரிய கருவறையும் விமானங்களுடன் அமைந்துள்ளன. மூலவர் கோயில் மகாமண்டபத்தின் பக்கவாட்டில் இருபுறமும் வாயில்களும், முகமண்டபத்தின் முன்புறம் பிரதான வாயிலும், பக்கவாட்டில் இரண்டு பெரிய சாளரங்களும் (ஜன்னல்) உள்ளன. மூன்று திசை வாயில்களை அழகிய படிக்கட்டுகளும், அமர்ந்த கோல காவல் தெய்வங்களும் அலங்கரிக்கின்றன.பென்தே யின் மூவர் கோயில் தமிழகத்து கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயிலின் அமைப்பையே முழுதும் ஒத்துத் திகழ்கின்றது. இம்மூவர் கோயில்களுக்கு முன்புறம் முதல் திருச்சுற்றில் வடகிழக்குப் பகுதியிலும், தென்கிழக்குப் பகுதியிலும் இரண்டு நூலகக் கட்டடங்கள் உள்ளன. இத்தகைய நூலகக் கட்டட அமைப்புக்களை கம்போடிய நாட்டுச் சிவாலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் காண முடிகிறது. முதல் திருச்சுற்றின் மதில் செங்கற் கட்டுமானமாய் அமைந்துள்ளது. இதன் மேற்குத் திசையில் ஒரு சிற்றாலயமும் கிழக்கில்பிரதான வாயிலும் அதில் சிறு நுழைவாயிற் கோபுரமும் அமைந்துள்ளன.இரண்டாம் திருச்சுற்று மதில் லாட்ரைட் எனப்பெறும் செம்பாறாங்கல் (செம்புறாங்கல்) கொண்டு எடுக்கப்பெற்றதாகும். இதன் கிழக்குச் சுவரிலும், மேற்குச் சுவரிலும் இரண்டு கோபுர வாயில்கள் அழகிய கட்டுமானங்களுடன் திகழ்கின்றன. இத்திருச்சுற்றில் ஆறு நீண்ட மண்டபங்கள் உள்ளன. மதிலுக்கு வெளிப்புறம் புல்வெளியாகத் திகழ்வதோடு, செம்புறாங்கற்களால் அமைந்த அகழியின் திண்ணிய உட்புறக் கறையுடன் காணப்பெறுகின்றது. அகழியின் வெளி விளிம்பிலும் அதனை ஒத்த செம்புறாங்கல் கட்டுமானங்களே உள்ளன.அகழியைச் சுற்றி மூன்றாம் திருச்சுற்றும் மதிலும் அமைந்துள்ளன. அம்மதிலில் மேற்கிலும், கிழக்கிலும் திருவாயில்கள் அமைந்துள்ளன. கிழக்கு வாயிலில் கூட்டல் குறி அமைப்பில் அமைந்த தரைத்தளத்தின்மேல் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இது வெளியிலிருந்து பார்க்கும்போது 67 மீட்டர் நீளமுள்ள நீண்ட நடைபாதையும் இருபுறங்களிலும் நீண்ட மண்டபங்களும் அணி செய்ய தலைவாயில் கிழக்கு நோக்கித் திகழ்கின்றது. திருமதில்களிலும் மண்டபச் சுவர்களிலும் எழிலுடைய பலகணிகள் (ஜன்னல்கள்) இடம்பெற்றுள்ளன. கல்லாலேயே அமைந்த அந்த பலகணிகளின் விளிம்புச் சட்டக் கோர்வைகள் கோடிமுட்டு இணைப்பு என்ற தொழில்நுட்ப அமைப்புடன் உள்ளன. அவைபோலவே உட்பகுதியில் காணப்பெறும் கம்பி போன்றவை மரத்தைக் கடைசல் பிடித்து செய்தவை போன்று கல்லாலேயே அமைக்கப் பெற்றுள்ளன. அழகுக்கு அழகூட்ட அவை பல்வேறு வண்ணக்கற்களால், காட்சி நல்கும் பாங்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும்.கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தடாகமே இங்கு சிவகங்கையாகப் போற்றப் பெறுகின்றது. கோபுர வாயிலிலிருந்து கருவறை செல்லும் நேர்த்தடத்தில் பலிபீடமும், ரிஷபமும் தனித்தனி மேடைகள்மீது காணப்பெறுகின்றன. எட்டு இதழ்களுடன் அலர்ந்த தாமரை மலராக பத்மபீடம் திகழ்கின்றது. கலையறிவற்றோரால் பிற்காலத்தில் உடைக்கப்பெற்றதாலும், படுத்த நிலையில் மடித்த கால்களுடனும், வாலுடனும் காளையின் அழகிய எஞ்சிய உருவம் மட்டும் அங்கு காணப்பெறுகின்றது. இது தமிழகத்தின் கோயில் இடபங்கள் போன்றே உள்ளது.இவ்வாலயத்து வாயில்களில் அமைந்துள்ள தோரணங்களிலும் கட்டடப் பகுதிகளின் சுவர்களிலும் சிவபெருமான் குறித்த சிற்பங்களும், மகாபாரதம், இராமாயணம் போன்ற இந்திய இதிகாசங்களின் கதைகளை விளக்கிடும் காட்சிகளும் ஆங்காங்கு இடம்பெற்று இக்கோயிலினைச் சிற்பக் களஞ்சியமாகவே மாற்றியுள்ளன. இடபத்தின் முதுகின்மீது உமாதேவியோடு அமர்ந்து திகழும் சிவபெருமான் சிற்பம் ஒருபுறம் திகழ மற்றொருபுறம் கோபுர வாயிலின் மேல்நிலையில் எட்டுக் கரங்களுடன் நடனமாடும் ஆடல்வல்லானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.அப்பெருமானுக்கு வலப்புறம் காரைக்காலம்மையார் பேயாராக அமர்ந்து வெண்கலத்தாளங்களை இசைப்பதும், எதிர்புறம் வாணன் குடமுழவம் இசைப்பதுமாகிய காட்சிகள் இடம் பெற்றுள்ள இப்படைப்பு உலக கலை வல்லோரால் பெரிதும் போற்றப் பெறுவதாகும். இக்காட்சிதான் தமிழகக் கலைஞர்களின் நட்புறவால் கெமர் கலை மேன்மை பெற்றது என்பதைக் காட்டிடும் எவராலும் மறுக்க இயலாத சான்றாக விளங்குகின்றது. தஞ்சைப் பெரியகோயில், கங்கைகொண்ட சோழீச்சரம் போன்ற ஆலயங்களில் திகழும் பேயார் காண ஆடும் அழகனின் சிற்பக்காட்சிகளை ஒத்தே இப்படைப்பு உள்ளது.ஓரிடத்தில் சிவனும் அர்ஜுனனும் சமர் புரியும் காட்சி காணப்பெறுகின்றது. இராமனும் இலக்குவனும் தாக்க எத்தனிக்க விராடனால் கவரப்பெற்ற சீதை, ரணியனின் மார்பினைப் பிளக்கும் நரசிங்கம், குபேரன், இரண்டானைகள் கலச நீர் சொரிய தாமரைமீது அமர்ந்துள்ள திருமகள், சிம்மத்துடன் சென்று மகிடனை வதம் செய்யும் துர்க்காதேவி, கம்சனை வதம் செய்யும் கண்ணன், எருமையுடன் திகழும் இயமன், தாடகையை வதம் செய்யும் ராமன், வருணன், இராவணன் சீதையைக் கவர்ந்து தூக்கிச் செல்லுதல், சுந்தன், உபசுந்தன் திகழ அங்கு திலோத்தமை போன்றோரின் சிற்பக் காட்சிகள் செவ்வண்ண கற்களில் வடிக்கப்பெற்று நம்மைக் கவர்ந்து நிற்கின்றன. ஆங்காங்கு சுவர்களில் இடம்பெற்றுள்ள அப்சரஸ் சிற்பங்கள் இவ்வாலயத்துக்கு மேலும் மெருக்கூட்டி நிற்கின்றன.ஒரு வாயிலின்மேல் நிலையில் வாலி சுக்ரீவன் சண்டையும், பின்புறம் மறைந்திருந்து இலக்குவனுடன் திகழும் இராமபிரான் வாலிமீது அம்பு எய்துவதும், அந்த அம்பு மார்பில் துளைக்க கீழே விழும் வாலி இராம பாணத்தை மார்பிலிருந்து எடுக்க முயல்வதுமாகிய காட்சிகள் தொடர் சிற்பப் படைப்புகளாகக் காட்சி நல்குகின்றன. ராமபிரானின் தெய்வீக முகப்பொலிவும் இலக்குவனின் பணிவுடைய திருமுகமும், வானரங்களின் ஆக்ரோஷமான முகப் பாவங்களும், வீழ்ந்து கிடக்கும் வாலியின் திருமுகக் காட்சியும் பார்ப்போரை உலுக்கிடும் பாங்கு பெற்றவையாகும்.ஒருபுறம் சிவபெருமான் உமாதேவியோடு கயிலை மலையில் அமர்ந்திருக்க, இருடிகளும், அடியார்களும் வாலி, அனுமன், கணபதி போன்றோரும் சூழ்ந்து அமர்ந்து பரமனை வணங்குகின்றனர். அப்போது தசமுகனாகிய ராவணன் கயிலை மலையைப் பெயர்த்துத் தூக்க முற்படுகிறான். கயிலை மலை அதிர்வடைய யானைகள், மான்கள், சிங்கங்கள், புலிகள் என அனைத்தும் பயந்து ஓட, அஞ்சியதேவி அண்ணலின் மார்பினைப் பற்றியவாறு ஒடுங்குகிறாள். பெருமானாரின் அருகே அற்புத விருட்சங்கள் அலங்கரித்து நிற்கின்றன. ஆர்த்தெடுத்த மலை குலுங்கியும் அசையாத பெருமானார் கால் விரலை தரையில் ஊன்றி அழுத்துகின்றார்.இக்காட்சியினைக் கண்ணுறும் நாம்,தருக்கு மிகுத்துத் தன்தோள்வலி உன்னித் தடவரையைவரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப மலை மகள் கோன் சிரித்துஅரக்கன் மணிமுடி பத்தும் – அணிதில்லை அம்பலவன்நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே?என்ற பாடலின் காட்சி இதுதான் என மெய்மறந்து நிற்போம்.பென்தே ஆலயத்தின் மற்றொருபுறம் கயிலாய மலைமீது கல்லால மரத்தின்கீழ் சிவபெருமான் கணங்களுடன் அமர்ந்திருக்க அவரை நோக்கி காமன் மலரம்பு தொடுப்பதும், பின் எரிதழலால் சாம்பராகிய காமதேவனுக்கு உயிர் வேண்டி இறைஞ்சிய ரதிதேவிக்கு அக்கமாலை கொடுத்து அவளுக்கு அருளுவதுமாகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இவ்வாலயத்தில் காணப்பெறும் சிற்பப் படைப்புகளிலேயே உன்னதமானதாக விளங்கும் ஒரு படைப்பு மகாபாரதத்தின் ஆதிபர்வதத்து இருநூற்று நாற்பத்தெட்டாவது அத்தியாயத்தில் தொடங்கி இருநூற்று ஐம்பத்து மூன்றாவது அத்தியாயம் ஈறாகவுள்ள, “காண்டவ தாஹ பர்வம்” என்ற பகுதியினை காட்சிப்படுத்துவதாகும். காண்டவ வனம் அக்னிதேவனால் அனல்பட்டு சாம்பலாகிய புராண வரலாற்றை இது விவரிப்பதாகும்.அப்புராண வரலாறு அறிந்தால்தான் பென்தே ஆலயத்துச் சிற்பப் படைப்பு நமக்குப் புரிந்த ஒன்றாகத் திகழும். அதன் மேன்மையும் புலப்படும்.இருநூற்று நாற்பத்தெட்டாவது அத்தியாயத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காண்டவ வனம் சென்று அங்கு உல்லாசமாக மகிழ்ந்திருந்தபோது அக்னியானவன் ஒரு பிராம்மணோத்தமன் வடிவெடுத்து அவர்கள் முன்பு தோன்றினான் என்றும், அக்னியைக் கண்ட அவ்விருவரும் எழுந்து நின்றனர் என்றும் கூறப்பெற்றுள்ளது.இப்பகுதியில் யமுனை நதிக்கரையோரம் திகழ்ந்த காண்டவ பிரஸ்தத்தில் எத்தகைய விலங்குகளும், பாம்புகளும், பறவைகளும், மரங்களும் இருந்தன என்பது விவரிக்கப்பெற்றுள்ளது. அவ்வனத்தில் நாகங்களின் ராஜாவான தட்சகனின் இருப்பிடம் இருந்ததோடு மூங்கில், இலவு, வில்வம், குருக்கத்தி நாவல், மா, சண்பகம், அங்கோலம், பலா, அரசு, பனை, எலுமிச்சை, மகிழ், ஏகபத்மகம், தாளிப்பனை, சந்தனம் ஆகிய மரங்களும், கொண்டை முசுறுகள் (குரங்கு), நரிகள், புலிகள், செந்நாய்கள், மான்கள், குரங்குகள், யானைகள், சிறுத்தைகள் முதலிய அநேக மிருகங்களும், கிளிகள், மயில்கள், காலகண்ட பட்சிகள், ஹம்ஸ பட்சிகள், ஸாரஸ பட்சிகள் முதலியன இருந்தன என்றும் கூறப்பெற்றுள்ளது.அடுத்த அத்தியாயத்தில் சுவேதகி ராஜன் என்ற ஒரு அரசன் தொடர்ந்து வேள்வி செய்து ஒருமுறை உருத்திரன் அருள்பெற்று மேலும் வேள்விப் பயன் எய்த, பன்னிரண்டு ஆண்டு தொடர்ந்து நிறுத்தாமல் தாராபாத்திரம் மூலம் வேள்வியில் நெய் சொரிந்தான். தொடர்ந்து நெய் தாரை பெற்று எரிந்தமையால் அக்னி செயல் இழந்து, ஔி மங்கி சோர்வுற்றான். பிரம்மனிடம் உபாயம்வேண்டினான். பன்னிரு ஆண்டு நெய்யாலும் அன்னத்தாலும் செயலிழந்த நீ சத்ருக்களின் இருப்பிடமாகவும், கொடியதாகவும் விளங்கும் காண்டவ வனத்தை எரியூட்டச் செய்து அங்கு எரிபடும் உயிரினங்களின் கொழுப்பினால் திருப்தி அடைந்து வலிமை பெறுவாய் என்றார். அதற்குரிய காலத்தையும் பிரம்மனே வகுத்துத் தந்தார்.காண்டவ வனத்தை எரித்து சாம்பலாக்குவதற்கு இந்திரன் தடையாக இருந்தான். நாகராஜனாகிய தட்சகனைக் காப்பதற்காக எத்தனை முறை அக்னி தன் தீயால் காண்டவ வனத்தை அழிக்க முற்பட்டாலும் இந்திரன் மூன்று யானைகள் இணைந்த ஐராவதத்தின்மேல் ஏறி விண்ணகம் சென்று கடும் மழையைப் பொழிந்து தீச்சுவாலைகளை அவித்து நெருப்பைச் செயலிழக்கச் செய்தான்.பிரம்மனின் வழிகாட்டலின்படி அக்னி நரநாராயணர்கள் எனும் அர்ஜுனன், கிருஷ்ணன் ஆகியோரிடம் சென்று அர்ஜுனனுக்குத் தேரினையும், வில்லோடு எடுக்க எடுக்க குறையாத பாணங்களுடன் கூடிய அம்புராத் தூணிகளையும் கொடுத்ததோடு கிருஷ்ணனுக்குச் சக்கரத்தையும் கதையையும் அளித்தான். காண்டவ வனத்தை தான் எரிகொள்ளும்போது இந்திரனால் தடை ஏற்படாதவாறு காத்தருள வேண்டினான். பின்பு தன் ஆற்றல் முழுவதையும் கொண்டு காண்டவ வனத்தினை ஏழு ஜுவாலைகளுடன் தீ கொளுவுமாறு செய்தான்.அப்போது காண்டவ வனத்து பாம்பு களும், பறவைகளும், விலங்குகளும் தப்பியோட முயற்சித்தன. தேர்களில் ஏறிய அர்ச்சுனன் தன் வில் மழையாலும், கிருஷ்ணன் எரிகொள் சக்கரத்தாலும் கதையாலும் எவையும் தப்பிடாதவாறு தடுத்து நிறுத்தினர். அவ்வமயம் இந்திரன் தன் யானை மீதேறி அமர்ந்தவாறு வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்தவாறு தனது ஆட்களுடன் மழை வெள்ளத்தை வானில் நிரம்பச் செய்து காட்டுத் தீயினை அணைக்க முற்பட்டான்.நரநாராயணர்கள் இருவரும் தாங்கள் எய்யும் கணைகளால் கானகத்திற்கு மேலாக நெருக்கமுடைய அம்புகளால் ஆன சாய்வுக் கூரையினை அமைத்தனர். இந்திரன் உண்டாக்கிய ஜலவெள்ளம் காண்டவ வனத்தின்மீது விழவில்லை. நரநாராயணர்தம் அம்புகளும் சக்கரமும் கதையும் காட்டு உயிர்கள் எதுவும் அங்கிருந்து தப்பாது தடுத்து நிறுத்தின. இறுதியில் காண்டவ வனம் அழல் வயப்பட்டு எரிந்து சாம்பலாயிற்று. அக்னி அவ்வுணவால் மீண்டும் பொலிவும், ஔியும் பூரண பலமும் பெற்றான்.காண்டவ தாஹபர்வம் என பாரதம் கூறும் இப்புராணக் காட்சிதான் இக்கோயிலில் அற்புதக் கலைப்படைப்பாக விளங்குகின்றது. மூன்று யானை இணைந்த ஐராவதத்தின்மேல் அமர்ந்து இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை மேலுயர்த்தி தாக்க முற்படுகிறான். அவனுக்கு இருபுறமும் பத்து தேவர்கள் தங்கள் கரங்களை மேலுயர்த்தி அவனைக் கும்பிட்டு நிற்கின்றனர். இக்காட்சிக்குக் கீழாக வானத்தில் அலை அலையாக நீர் குளமாகத் தேங்கி நிற்கிறது.அதற்குக் கீழ் இரண்டு நீண்ட வரிசையில் நரநாராயணர்கள் எய்த அம்புகள் சாய்வுக் கூரையாக அமைந்து மழைநீர் கானகத்தின்மீது வீழாவண்ணம் தடுத்து நிற்கின்றன. அதற்குக் கீழாக காண்டவ வனம் பல்வகை மரங்களோடு திகழ்கின்றது. முத்தலைப் பாம்புகள், பறவைகள், விலங்குகள் என அனைத்தும் கானகத்தில் காணப்பெறுகின்றன. குதிரை பூட்டிய தேர்களில் வில் ஏந்திய அர்ஜுனனும் ஆழி ஏந்திய கிருஷ்ணனும் அக்காட்டில் உள்ள எந்த உயிரும் வெளியேறாதவாறு அக்னி தந்த அஸ்திரங்களால் தடுத்து நிறுத்தினர். காண்டவ வனம் தீயால் சாம்பலாகும் முன்பு இருந்த கடைசி நேரக் காட்சியைத்தான் இங்கு சிற்பக் காட்சியாக்கியுள்ளனர்.இவை அனைத்தையும் கண்டு சிவகங்கை நீர் சூழ்ந்த இவ்வாலயத்தை மீண்டும் ஒருமுறை நாம் வலம் வரும்போது உண்மையிலேயே இவ்வாலயம் நமது கொடும்பாளூர் மூவர்கோயில் போன்றே உச்சக்கட்ட அழகின் இருப்பிடம் (பென்தே) தான் என்பதை உணர்வோம். காரைக்காலம்மையாரின் வரலாறு, சிவபுராணம், இராமாயணம், மகாபாரதம் போன்றவை தமிழ்க் கலையோடு கடல் கடந்து கெமர் கலைவண்ணத்தில் சங்கமித்துள்ள விந்தையை இங்கு நாம் காண்கிறோம். குறிப்பாக வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத அரிதினும் அரிய காண்டவ வனக்காட்சிச் சிற்பம் ஒன்றே இந்த ஆலயத்தின் ஒருதனிப் பெருமைக்குக் காரணமாகத் திகழ்கின்றது. இங்கு திகழும் பேயாரையும் பெருங்காட்டையும் வாழ்வில் ஒருமுறையேனும் கண்டு இன்புறுவோம்.முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்…

You may also like

Leave a Comment

20 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi