ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்

மதுரை, மார்ச் 31: இயேசு உயிர்த்தெழுந்ததை நிகழ்வை நினைவு கூர்ந்து ஈஸ்டர் பண்டிகையாக இன்று கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் ஆராதனைகள், திருப்பலிகள் நடைபெற்றது. சாம்பல் புதனில் துவங்கிய தவக்காலத்தில் கிறிஸ்துவர்கள் விரதம் இருந்து வந்தனர். புனித வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறுவாக கிறிஸ்துவர்கள் மகிழ்ந்து சிறப்பித்தனர். மதுரை சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி ஆராதனைகள் நடந்தன. இந்நிலையில் இயேசு கிறிஸ்து மரிக்கும் நாளைக்கு முந்தைய நாள் பெரிய வியாழன் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்ச் 28 அன்று பெரிய வியாழனில் இயேசு தனது சீடர்களுடன் உணவு அருந்தி அவர்களின் பாதங்களை கழுவிடுவதை நினைவு கூறும் வகையில் பாதம் கழுவுதல் நிகழ்வு நடந்தது. இயேசு சிலுவையில் உயிர் விடும் நாளான மார்ச் 29ல் புனித வெள்ளியாக அனுஷ்டிக்கப்பட்டது.

அன்று கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் நடந்த சிலுவைப்பாடு நிகழ்வில் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையாக இன்று மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமையை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். மதுரையில் உள்ள கீழவாசல் புனித மேரி திருத்தலம், கோ.புதூரில் உள்ள புனித லூர்தன்னை திருத்தலம், ஆரப்பாளையத்தில் உள்ள புனித வளனார் ஆலயம், அண்ணாநகரில் உள்ள அன்னைவேளாங்கண்ணி ஆலயம், நரிமேட்டில் உள்ள கதிட்ரல் சர்ச், ஜான்சிராணி பூங்கா எதிரில் உள்ள பரிசுத்தஜார்ஜ் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள், திருப்பலிகள் நடக்கின்றன. நேற்று இரவு 12 மணியை கடந்த பின்னர் ஈஸ்டர் பண்டிகையை தேவாலயங்களில் கிறிஸ்துவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை