ஈரோட்டில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

 

ஈரோடு, அக்.9: ஈரோட்டில் தகவல் அறியும் சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் பேரணி நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு வாரம் அக்டோபர் மாதத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பிரச்சார மாரத்தான் நேற்று காலை நடைபெற்றது. மாராத்தானை மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மாரத்தான் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை தீயணைப்பு நிலையத்தில் இருந்து துவங்கி, காளைமாட்டு சிலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, சென்னிமலை சாலை வழியாக காசிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்று, பின்னர், அங்கிருந்து மீண்டும் ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் நிறைவடைந்தது. இந்த மாரத்தானில் உதவி மாவட்ட அலுவலர்கள் முருகேசன், கலைச்செல்வன், தீயணைப்பு துறையை சார்ந்த வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி ஊழியர்கள் பேரணி: ஈரோடு மாநகராட்சி மற்றும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி இணைந்து நேற்று வ.உ.சி. மைதானத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் துவக்கி வைத்து, பேரணியில் பங்கேற்றார். ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் துவங்கி, ஸ்வஸ்திக் கார்னர், மேட்டூர் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, பெருந்துறை சாலை வழியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. பேரணியில், மாநகராட்சி ஊழியர்கள், சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முபாரக் அலி, திவ்யா, குருசாமி மற்றும் மாணவ-மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை