ஈரோடு மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

 

ஈரோடு, ஆக. 23: ஈரோடு மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.

அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளில், 15வது நிதிக்குழு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், அம்ரூத் 2.0, நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு நகர்ப்புறு சாலை மேம்பாட்டு திட்டம், சீர்மிகு நகர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, தெரு விளக்கு, பாதாள சாக்கடை உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி, துணை கலெக்டர் (பயிற்சி) காயத்ரி, அத்திக்கடவு அவிநாசி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை