ஈரோடு சோலார் அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இறுதி கட்ட பணிகள் தீவிரம்: ஆணையாளர் தகவல்

ஈரோடு: ஈரோடு அடுத்த சோலாரில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு  மாநகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அடிக்கடி  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாநகரின் மையப்பகுதியில்  சுதந்திர தின வெள்ளி விழா பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது தான் காரணமாக  கூறப்பட்டு வருகிறது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக  முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக 23 ஏக்கர் பரப்பளவில்  ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியினை தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி அடிக்கல் நாட்டி, துவக்கி  வைத்தார். அதேபகுதியில் தற்போது தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிக்காக  ரூ.5.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தற்காலிக பஸ்  ஸ்டாண்ட் அமைக்கும்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள்  நடக்கிறது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைய உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறியதாவது: சோலார்  புதிய பஸ் ஸ்டாண்டில் கரூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில்  போன்ற தென் மாவட்ட பஸ்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட உள்ளது. இந்த பஸ்  ஸ்டாண்ட் விமான நிலையத்தின் தோற்றத்தை போல அமைக்கப்படுகிறது. அதற்கான  மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே டவுன் பஸ் ஸ்டாண்ட்  அமைக்கப்படும். புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடத்திற்கு அருகிலேயே  தற்காலிக பஸ் ஸ்டாண்ட் 2.50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.  இதற்காக நிலம் சமன்படுத்தப்பட்டு பஸ்கள் வந்து நிற்க ரேக், பயணிகள் நிற்க  நிழற்கூடை, குடிநீர் வசதி, போதிய கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளது.  தற்போது தார் சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த தற்காலிக பஸ்  ஸ்டாண்டில் கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்ட  பஸ்கள் மட்டும் இயக்கப்படும். புதிய பஸ் ஸ்டாண்ட் அமைத்த உடன், தற்காலிக  பஸ் ஸ்டாண்ட் அகற்றப்படும். தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்துவது  மாநகராட்சி மட்டும் அல்லாது, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, வட்டார  போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து  ஆலோசித்த பின் பயன்பாட்டிற்கு வரும். தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இறுதி கட்ட  பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூலை 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர்

இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி