ஈரோடு காவிரி ஆற்றில் சாய துணிகள் அலசும் கும்பல் தப்பி ஓட்டம்

ஈரோடு :  ஈரோடு காவிரி ஆற்றில் சாய துணிகள் அலசும் கும்பல் அதிகாரிகளை  கண்டதும் 2வது முறையாக தப்பி சென்றனர். அவர்கள் விட்டு சென்ற சாய துணிகள்,  வாகனத்தை பறிமுதல் செய்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட  கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் மர்மநபர்கள் இரவு நேரங்களில் சாய  துணிகளை வாகனங்களில் எடுத்து வந்து நேரடியாக ஆற்றில் அலசி மாசு ஏற்படுத்தி  வருவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு  மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காவிரி ஆற்றங்கரையில் இரவு நேரத்தில்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சாய துணிகளை அலசி வந்த கும்பல்  அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து சாய  துணிகளையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில்,  கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் இரவு சாய துணிகளை  அலசி வருவதாக வந்த தகவலின்பேரில், ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  அதிகாரிகளும், கருங்கல்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்தனர். ஆனால், அதிகாரிகள் வருவதற்குள் சாய துணிகளை அலசி வந்த கும்பல்,  அங்கேயே துணிகளை போட்டுவிட்டு தப்பி சென்றனர். அதன்பிறகு சாய துணிகளையும்,  சரக்கு வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சாய துணிகள் எந்த  ஆலையில் இருந்து கொண்டு வரப்பட்டது, வாகன உரிமையாளர் யார்? என்பது குறித்து  அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் இச்சம்பவத்தால்  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து சமூக  ஆர்வலர்கள் கூறுகையில், சாய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல்  நீர்நிலைகளில் திறந்துவிடப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. ஆனால்,  தற்போது காவிரி ஆற்றிலேயே நேரடியாக சாய துணிகளை அலசுவது அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. குடிநீருக்கும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்படும்  காவிரி ஆற்றில் சாய துணிகள் அலசுவதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்….

Related posts

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்

சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?