ஈராக்கில் இறந்த கணவரின் உடலை கொண்டு வர நடவடிக்கை: நத்தம் பெண் கலெக்டருக்கு மனு

 

திண்டுக்கல், ஆக. 23: நத்தம் அருகே மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு 14, 11 வயதில் இரு மகன்கள், 5 வயதில் ஒரு மகள் உள்ளனர். சின்னையா கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த ஆக.1ம் தேதி ஈராக் நாட்டில்
சின்னையா தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கோகிலாவிற்கு தகவல் வந்தது.

இதையடுத்து தனது கணவர் உடலை ஈராக் நாட்டில் இருந்து மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என நத்தம் தாசில்தார் மற்றும் கலெக்டரிடம் ஏற்கனவே இரண்டு முறை கோகிலா மனு அளித்திருந்தார். இந்நிலையில் தனது கணவர் உயிரிழந்து 22 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் ஈராக் நாட்டில் இருந்து சின்னையா உடல் இந்தியா கொண்டு வரப்படவில்லை.

எனவே மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தலையிட்டு உடலை இந்தியா கொண்டு வர வேண்டும் என நேற்று கோகிலா தனது உறவினர்களுடன் வந்து மூன்றாவது முறையாக கலெக்டர் பூங்கொடியிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர், இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாகவும், விரைந்து நடவடிக்கை எடுத்து உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு