இளையரசனேந்தல் பிர்கா விவகாரம் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை விவசாயிகள் முக்காடு போட்டு முற்றுகை

கோவில்பட்டி, செப். 9: இளையரசனேந்தல் பிர்கா 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு முக்காடு போட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இளையரசனேந்தல் கிளை தலைவர் பாண்டியன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள், கோட்டாட்சியர் உதவியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களை 2008ம் ஆண்டு கோவில்பட்டி தாலுகா, தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு தற்போது வரை மேற்படி 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அடிப்படை வசதிகளான குடிநீர், ரேஷன் பொருள்கள், சுகாதாரம், நீர்நிலை பராமரிப்பு, ஓடை சுத்தப்படுத்தல், பாதை சீர் அமைத்தல், தெரு விளக்குகள் ஆகியவற்றை பெறமுடியாத நிலை உள்ளது. ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களில் தென்காசி மாவட்டம் என்று வருவதால் ஒன்றிய அரசின் கிசான் திட்டம் ரூ.6000 பெற முடியாமல் புதிதாக மனு செய்ய முடியாத அளவுக்கு தடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இளையரசனேந்தல் கிராமத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு 6 வார காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை