இளைஞர்கள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சாத்தான்குளம் பகுதியில் தொழிற்சாலைகள் அமையுமா?: பல்வேறு தரப்பினர் எதிர்பார்ப்பு

சாத்தான்குளம்:  சாத்தான்குளம் பகுதியில் இளைஞர்கள், பொறியியல், ஐடிஐ படித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். சாத்தான்குளம் தாலுகா பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் இங்கு குளம், கிணற்று பாசனத்தைக் கொண்டு விவசாயம் நடந்து வருகிறது. சமீபகாலமாக போதிய மழை இல்லாத நிலை உள்ளதால் விவசாயமும் ஓரளவுதான் நடந்து வருகிறது. சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மாணவ – மாணவிகள், பொறியியல் மற்றும் ஐடிஐ தொழிற்படிப்புகளை நெல்லை, தூத்துக்குடி, நாசரேத் பகுதியில் படிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு இப்பகுதியில் இல்லை. இதனால் சாத்தான்குளம் மற்றும் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு தேடி கோவை, சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு முதலில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே தொழிற்கல்வி வேலைவாய்ப்புகள், சாத்தான்குளம் பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் கிடைத்தால் இப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறுவது தடுக்கப்படுவதுடன், பொருளாதார வளர்ச்சியும் இருக்குமென எதிர்பார்க்கின்றனர்.சாத்தான்குளம் யூனியன் பிடாநேரி பஞ். பகுதியில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் சிட்கோ தொழிற்பேட்டை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த தொழிற்பேட்டைக்காக மொத்தம் 108 ஏக்கர் பரப்பளவு இடத்தை அரசு கையகப்படுத்தியது. இங்கு 92 தொழிற்சாலைகளுக்கு தேவையான மனை பிரிவுகள், உட்கட்டமைப்பு வசதி அமைக்கப்பட்டு தொழில் முனைவோருக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ள மனைப் பிரிவுகளில் 18 மனைகள் தொழிற்சாலைகளுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு தொழிற்சாலைக்கு தேவையான மனைப்பிரிவு 60 சென்ட் முதல் 80 சென்ட் வரை பரப்பளவும், ஒரு மனை பிரிவு ரூ.7.30 லட்சம் என சிட்கோ நிர்வாகத்தால் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விற்பனையான மனைகளில் மூன்றில் மட்டும் அந்நிறுவனத்தினர் தொழில் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட கட்டுமானப் பணிகளை தொடங்கி பணி உள்ளனர். பொதுவாக ஒரு தொழிற்சாலை அமையும்போது சாலை வசதி, ரயில், கப்பல், விமான போக்குவரத்து, தேவையான தொழிலாளர்கள் உள்ளிட்ட வசதிகளை பொறுத்து தான் தொழிற்சாலை அமையும். இதன் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கும், உள்நாட்டு வணிகத்திற்கு கொண்டு சொல்வதற்கும் எளிதாக இருக்க வேண்டும். அதன்படி பிடாநேரி சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து சுற்றுவட்டார பெரு நகரங்களை இணைப்பதற்கான நல்ல சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்பேட்டையில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் மற்றும் விமான நிலையம் 50 கிமீ தூரத்திலும், நெல்லை 40 கிமீ தூரத்திலும், திருச்செந்தூர் 30 கிமீ தூரத்திலும், 4 கிலோ மீட்டர் தொலைவில் நாசரேத் ரயில் நிலையமும் உள்ளது. இந்த நகரங்களை இணைப்பதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் சிட்கோ நிறுவனத்தின் சார்பில் சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு, சாலை வசதி உள்ளிட்டவைகள் சரிவர அமைக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு பெரு நிறுவனங்கள் தூத்துக்குடியில்தான் தங்கள் தொழிலை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.தூத்துக்குடியில் துவங்கப்பட உள்ள பர்னிச்சர் பார்க் போன்று பல்வேறு பர்னிச்சர் பூங்காக்கள் மற்றும் சிறுதொழில் மற்றும் பெரு நிறுவனங்களை பிடாநேரி சிட்கோ தொழிற்பேட்டையில் நிறுவினால் இப்பகுதியைச் சுற்றியுள்ள சாத்தான்குளம், நாசரேத், மெஞ்ஞானபுரம், உடன்குடி, பேய்க்குளம், பிரகாசபுரம், குரும்பூர், நாலுமாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும். வியாபாரம் உள்ளிட்ட மற்ற தொழில்கள் பெருகுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.எனவே பிடாநேரி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் துவங்குவதற்கு தொழில் முனைவோர்களை தமிழக அரசு ஊக்குவித்து தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் சாத்தான்குளம் அந்தோனிராஜ் கூறுகையில், இப்பகுதியில் தொழிற்படிப்புகள் படித்த பட்டதாரிகள் இங்கு முறையான வேலைவாய்ப்பு கிடைக்காமல் வெளியூர் சென்று குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வீட்டு வாடகை, சாப்பாடு செலவு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக பெற்றோரிடம் பணம் வாங்கும் நிலையும் உள்ளது. இங்குள்ள பலர், ஐடி கம்பெனிகளில் வேலை பார்த்து வருகின்றனர். அதே வேலை இங்கு அமையுமானால் உள்ளூரில் வேலைவாய்ப்பு பெறும் மகிழ்ச்சி அடைவர். எனவே சாத்தான்குளம் பகுதி வளம் பெறவும், பொருளாதாரத்தில் உயரவும் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளை சாத்தான்குளம் பகுதியில் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்….

Related posts

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!