இளம் வேளாண் பட்டதாரிகள் தொழில் முனைவோராகலாம்: இணை இயக்குநர் தகவல்

 

மதுரை, பிப். 18: மதுரை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் படித்த பட்டதாரிகளை, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவிட தொழில் முனைவோராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: இத்திட்டத்தில் இளம் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக்கி காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரிப்பு,

வேளாண் கருவிகள் வாடகை மையம், இயற்கை பூஞ்சான கொல்லிகள் தயாரித்தல், காய்கறிகள் பழங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வேன் மூலம் விற்பனை செய்தல், உரம், பூச்சிக் கொல்லிகள் விநியோகம், மண், தண்ணீர் பரிசோதனை மையம் அமைப்பதற்கு விண்ணப்பம் பெறப்பட்டு ஆட்சியர் தலைமையிலான தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கு 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை பட்டப்படிப்பை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்திருக்க வேண்டும். நடப்பாண்டில் வங்கிக் கடன் உதவி பெற்று தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு மட்டுமே, திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். தகுதியானவர்கள் www.agrinet. என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு