இலை தொகுதியை கூட்டணிக்கு தாரைவார்க்கும் ‘ராயப்பேட்டை’ தந்திரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஊராட்சியில் நடந்த ஊழலை கீழ்நிலையில் உள்ள ஊழியர்களின் தலையில் கட்டச் சொன்ன உள்ளாட்சி துறை மேலிடம் குறித்துச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுக்கோட்டை, பெரம்பலூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஊராட்சிகளுக்காக வாங்கப்பட்டதாக கூறி, நீர்மூழ்கி மோட்டார்களையும், தானியங்கி சுவிட்ச் உட்பட குடிநீர் சப்ளைக்கான உதிரி பாகங்களையும் ஊராட்சி நிர்வாகத்தின் தலையில் கட்டாயப்படுத்தி கட்டியுள்ளார்களாம். மேலும் அதற்கான பில்லை மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து வழங்கும் வகையில் ‘செக்’ போட்டுத்தரும்படி ஊராட்சி செயலாளர்களை மிரட்டுகிறார்களாம் அதிகாரிகள். மாநில நிதிக்குழு மானியத்தை பொறுத்தவரை குடிநீர் வினியோக பணிகளுக்காக என்றாலும், அதனை பைப் லைன் உடைப்பு, மோட்டார் பழுது, தெருவிளக்கு உட்பட பணிகளுக்கே பயன்படுத்த வேண்டும். அதோடு ஏற்கனவே ஊராட்சிகளிடம் 100 சதவீதம் நீர்மூழ்கி மோட்டார்கள், தானியங்கி சுவிட்ச்களுடன் உள்ளது. அப்படி இருக்கும்போது, எங்கள் மீது அதை திணித்து ‘செக்’ கட்டாயப்படுத்தி கேட்பது என்ன நியாயம்… பின்னாளில் ஏதாவது பிரச்னை என்றால் நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று புலம்பினாலும் மேலிடத்தில் உள்ள அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை என்கிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த காலங்களில் மேற்கண்ட பொருட்கள் வேலூரில்தான் வாங்கப்பட்டதாம். ஆனால் இப்போது ஒரு மோட்டார் ரூ.70 ஆயிரம் வரை விலை வைத்து வாங்கியதாக பில்லை காட்டுகிறார்களாம். இது கலெக்டருக்கு தெரிந்துதான் நடக்கிறதா.. இல்லை அவருக்கு தெரியவில்லையா.. என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பதுதான் ஊராட்சி செயலாளர்கள், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ்நிலை அதிகாரிகளின் குமுறலாக உள்ளது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு கேள்விப்பட்டு இருப்போம்… ஆனால் ஒரே தொகுதிக்கு 3 பேர் அடித்து கொண்டால் கட்சி தலைமைக்கு திண்டாட்டம்னு சொல்றாங்களே…  அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை வடக்கு தொகுதியின் இலை கட்சி மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் மூன்றெழுத்துகாரர். தேனிக்காரரின் தீவிர ஆதரவாளர். நம்பிக்கை தீர்மானம் நடந்த நாளில், கூவத்தூரிலிருந்து சுவர் ஏறி குதித்து அங்கிருந்து எஸ்கேப் ஆனதாக பலரும் இன்றுவரை பேசி வர்றாங்க. அதனால், இவரை வடக்கில் இருந்து கழற்றிவிட்டு, அவருடைய சொந்த தொகுதியான கவுண்டம்பாளையத்தில் நிறுத்த, இலை. தலைமை விரும்புகிறதாம். இதற்கிடையில், அந்த தொகுதியை அதே கட்சியை சேர்ந்த வடவள்ளியை சேர்ந்த ‘மூன்’ என்பவர் தன் மனைவிக்காக முயற்சி செய்து வர்றாராம். இதற்காக அவர் அந்த பகுதியில் எக்கச்சக்கமாக வேலை செய்து வாக்காளர்களை தன் பக்கம் வைத்துள்ளாராம். அதேநேரத்தில், இத்தொகுதியில் தற்போதுள்ள மக்கள் பிரதிநிதி ‘சிக்ஸ் ஸ்மால்’ என்பவரும் விடுவதாக இல்லையாம். அவர், நான்தான் மீண்டும் போட்டியிடுவேன் என்கிறார். இந்த மூன்று பேரின் சண்டையை பார்த்து தொகுதியில் தோல்வி ஏற்படுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாம் இலையின் தலைமைக்கு.. அதனால், யாருக்கும் மனவருத்தம் இல்லாமல், இத்தொகுதியை தாமரைக்கு விட்டுக்கொடுத்து விடலாம் என இலை தலைமை. கணக்கு போடுகிறது. இதேபோல், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் காரணமாக, இத்தொகுதி மக்கள் பிரதிநிதியானவர், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறிச்செல்கிறார். இலை சார்பில் பொள்ளாச்சியில் யார் நிறுத்தப்பட்டாலும் தேறுவது கஷ்டமென்பதால், அந்த தொகுதியையும், கூட்டணி கட்சிக்கு தள்ளிவிட இலை தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் இறக்கை கட்டி பறக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தோல்வியில் முடிந்த தூது பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘துணையானவரின் இளைய மகன், தூங்கா நகரில் இரு நாட்கள் முகாமிட்டு தென்மாவட்டத்தில் சில சமுதாய தலைவர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஒரு சொகுசு ஓட்டலில் இந்த ரகசிய சந்திப்பு நடந்ததாம். ஏற்கனவே, ஒரு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு அறிவிப்பால், துணையானவரின் சொந்த ‘இரண்டெழுத்து’ மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் மற்ற பிரிவினர் தீவிரமாக களமிறங்கி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மக்கள் காலில் விழுந்து அதிமுகவுக்கு ஓட்டுப் போட வேண்டாமென கேட்குமளவுக்கு நிலைமை படுமோசமாகி வருகிறது. இதனால் துணையானவரும், அவரது வாரிசுகளும் திகிலடைந்துள்ளனர். இதையடுத்தே இந்த ரகசிய சந்திப்பு நடந்ததாம்… சந்திப்பு பேச்சுவார்த்தையின் போதே அரசின் இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து சிலர் எழுந்து போய் விட்டனராம்… எதிர்ப்பை சரிக்கட்ட துணையானவர் தரப்பிலிருந்து சமரச முயற்சிகள் தொடர்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரசு கஜானா காலியாக உள்ளதால் பயிற்சி டாக்டர்கள் சம்பளம் இல்லாமல் அவஸ்தைபடறாங்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் சம்பளம் தராததால் 5 மாதமாக ஸ்டிரைக்கில் இருக்காங்க. இது பற்றி மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால், தமிழ்நாடு அரசிடம் பணம் இல்லை. அதனால் உங்களுக்கு சம்பளம் வழங்காமல் இருக்கிறார்கள் என்று ஒரே போடு போடுகிறார்களாம். நிர்வாகத்தின் அலட்சிய பதில் காரணமாக கடந்த 4 நாட்களாக பயிற்சி டாக்டர்கள் பணிக்கு வரலையாம். இதனால் காலையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் இல்லை. நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் சமயத்தில் இந்த வேலை நிறுத்தம், தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்காம். சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளருக்கும் இந்த பிரச்னை சென்றும் தீர்வு தான் வராமல் இருக்காம்… ’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

பிரசாரத்தில் வலிய வந்து வம்பில் சிக்கிய பெண் வேட்பாளர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

இதுதானா உங்க டக்கு என சேலம்காரரின் முடிவை கிண்டல் செய்யும் தேனிக்காரரின் அணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா