இலை கட்சிக்காரர்களின் சிபாரிசு இருந்தால் விவசாயிகளுக்கு லோன் கிடைக்கும் விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘திருடர்கள் திருந்தும் இடம்தான் சிறைன்னு சொல்றாங்க… ஆனால் அதிகாரிகளே திருடினா என்ன சொல்றது…’’ என்று தலையில் அடித்துக் கொண்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் உள்ள 9 சென்ட்ரல் ஜெயில்களிலும் அதிரடியாக ஆடிட்டிங் நடக்குதாம். சென்ட்ரல் ஜெயில்களை பொறுத்தவரையில் அங்கு கைதிகளுக்கு தொழிலை கற்றுக் கொடுக்கும் வகையில் தொழிற்சாலைகள் இருக்கு. சேலத்தில் இரும்பு கட்டில்கள், கோவையில் காக்கி துணிகள் இதுபோல அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு பொருட்கள் தயாரிக்கப்படுது. சமீபத்தில் தென்னகத்தின் மத்திய மாவட்ட சென்ட்ரல் ஜெயிலில் நடந்த ஊழல், அதிகாரிகளை அதிர்ச்சியில ஆழ்த்தியிருக்காம். வாயை பிளக்கும் வகையில் நடந்த மோசடியின் தொகை ஒரு ‘சி’யை தாண்டுமாம். இது புதுசா போன அந்த அதிகாரியின் ஆய்வுல தெரியவந்ததாம். அக்கவுண்ட்ஸ் சரியில்ல, பணத்தை கட்டலன்னா மேல் அதிகாரிகளுக்கு லட்டர் எழுதிருவேன்னு சொல்லியிருக்காரு. இதனால ஷாக்கான பழைய அதிகாரி நகைகளை விற்று சில லகரங்கள கட்டினதா பேசிக்கிறாங்க.இதனை தெரிஞ்சுக்கிட்ட சென்னை ஆபீசர்ஸ், ஆடிட் குழுவை அனுப்பியிருக்காங்களாம். அனைத்து சென்ட்ரல் ஜெயில்களிலும் இந்த தணிக்கை குழு ஆய்வுல குதிச்சிருக்கு. ஆய்வு முடிவுகள், யாருக்கும் தெரியாம சீலிடப்பட்ட கவரில் வந்து சேரணும்னு மேலிட உத்தரவாம். இந்த ஆடிட்டுல சில சிறைகள் சிக்கப்போகுதாம். இதனால் சென்ட்ரல் ஜெயில் அதிகாரிகள் பதட்டத்துல இருக்காங்களாம்… திருடர்களை திருத்த சம்பளம் வாங்கும் அதிகாரிகளே பணத் திருட்டில் ஈடுபட்டால் அவர்களை யார் திருத்துவார்கள் என்று கைதிகள் கமென்ட் அடிக்கும் நிலைதான் சிறைகளில் நிலவுகிறது…’’ என்று வேதனை தெரிவித்தார் விக்கியானந்தா.‘‘சேற்றில் கால் வைத்து சோற்றுக்கு வழி வகுக்கும் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க விதித்து இருக்கும் நிபந்தனையை கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மக்களால் ஓரங்கட்டப்பட்டாலும் மாங்கனி மாவட்டத்தில் அதிகாரம் இன்னும் மப்பு குறையாமல் தான் இருக்கு.  அவர்களில் முதல் இடத்தில் இருப்பது இலை கட்சியின் கூட்டுறவு சங்க தலைவர்கள் தானாம். தமிழகத்தில் உதித்துள்ள  புதிய ஆட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் கடந்த ஆட்சியின்போது கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்வு பெற்று தலைவராக இருக்கும் இலைக்கட்சியை சேர்ந்தவர்களின் அடவாடிதனத்துக்கு அளவே இல்லாமல் போச்சு. குறிப்பாக புதிதாக விவசாய கடன் கேட்டு வருபவர்களுக்கு ஒப்புதல் வழங்க இலைகட்சியின் தலைவர்கள்  மறுத்து விடுகிறார்களாம். ஆனால், தங்களது கட்சி நிர்வாகிகளின் சிபாரிசோடு வருபவர்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து விடுகிறார்களாம். லோன் வேண்டுமானால் இலை கட்சி நிர்வாகி ஒருவரை உங்கள் பகுதியில் இருந்து அழைத்து வந்தால் தருகிறோம் என்று சொல்றாங்களாம். இதனால பல விவசாயிகள் இலை கட்சி நிர்வாகிகள் வீட்டில் கால் கடுக்க காத்திருக்கிறார்களாம். இன்னும் சில கூட்டுறவு சங்க செயலாளர்களும் பழைய ஆட்சி மீதான பாசத்தில் இருப்பதால் இது போன்ற தலைவர்களுக்கு துணையாக ஒத்து ஊதுறாங்களாம். இது விவசாய சங்கங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்காம். இது போன்ற தலைவர்கள் மீதும், உடந்தையாக இருக்கும் செயலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு புகார்கள் பறக்க ஆரம்பிச்சிருக்காம். விரைவில் இதற்கு முடிவு கட்டப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்களாம் மாங்கனி மாவட்ட விவசாயிகள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சிவகங்கையில ஒரு ஒன்றியத்துல இருக்கிற தலைவர்களே ஒட்டுமொத்தமாக கட்சி மாறப்போறதா பேசிக்கிறாங்க… உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி  தேர்தல் நடைபெற்ற 12 ஒன்றியங்களில், 2 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை  கைப்பற்றும் அளவிற்கு மட்டுமே இலைக்கட்சி வென்றது. ஆனால் அப்போது ஆளும்கட்சி என்பதால், குறுக்கு வழியில் தடலாடி நடவடிக்கைகளால் 7  ஒன்றியக்குழுத்தலைவர் பதவிகள் கைப்பற்றப்பட்டனவாம். உலகம் என்ற ெபாருள் படும் ஒன்றியத்தில் திமுக கூட்டணிக்கே அதிக கவுன்சிலர்கள் இருந்தும் தேர்தல்  நடத்தவிடாமல் பல்வேறு காரணங்களைக் காட்டி இலைக்கட்சி அரசு  தள்ளி வைத்தது.  திமுக மூன்று ஒன்றியங்களிலும், பரிசுப்பெட்டி கட்சி ஒரு ஒன்றியத்திலும்  தலைவர் பதவியை கைப்பற்றின. இந்நிலையில் இலைக்கட்சி அரசு முடிவுக்கு வந்ததும், முதல் நபராக இக்கட்சியைச் சேர்ந்த ‘‘வடமாநில நதி பெயரிலான’’நகரின் ஒன்றியக்குழுத்தலைவர் திமுகவில் சேர்ந்தார். அடுத்ததாக இந்நகரத்து அருகாமையில் இருக்கும் ‘‘ஊர்ப்பெயரில் கோவில்’’கொண்ட ஒன்றியத் தலைவரும்  திமுகவில் சேர ரெடியாகி வருகிறாராம். இதுபோலவே மற்ற ஒன்றிய தலைவர்களும்  இலைக்கட்சி நிர்வாகிகளோடு பெரிய அளவில் தொடர்பின்றி, ஆளும்கட்சிக்கு சென்று  விடுவார்கள் என அதிமுகவிற்குள் பேச்சு நடக்கிறதாம்… ஆக மொத்தம் தங்களை காப்பாறிக் கொள்ள பல தலைவர்கள் கட்சி மாற இப்போதே தயாராகி வருவதாக இலை கட்சி நிர்வாகிகளே பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா