இலைகட்சி மக்கள் பிரதிநிதியின் பின்னால் பதுங்கி பாதுகாப்பை தேடும் பாலியல் குற்றவாளி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பாலியல் குற்றவாளி ஒருவரை இலை கட்சி எம்எல்ஏ ஒருவர்தான் காப்பாற்றி வருகிறாராமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவை அரசு கலைக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஒரு பேராசிரியர் செந்தமிழில் பேசுவதில் வல்லவர். இவர், சக பேராசிரியை மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். உயர்கல்வித்துறை மேலதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினாலும், இவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். காரணம் இவர், கோவையை சேர்ந்த ஒரு இலைக்கட்சி எம்எல்ஏவுக்கு நெருக்கமானவராம். அதனால பாலியல் புகாரில் சிக்கிய குற்றவாளியான பேராசிரியர் இலை எம்எல்ஏ பின்னால் பதுங்கி உள்ளாராம். இவரை எம்எல்ஏ தான் காப்பாற்றி கொண்டு செல்கிறாராம். இதுகுறித்த விசாரணையில் உளவுத்துறை இறங்கி இருப்பதாக பேசிக்கிறாங்க. இதே கல்லூரியில், இதற்கு முன்பு ஒரு புரபொசர் மீது மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த புரபொசர் மட்டும் வெளியில் தெம்பாக நடமாடுவது எப்படி என்ற கேள்விக்கு எல்லாம் இலை தரும் நிழலில்தான் பேராசிரியர் தெம்பாக உலா வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தவறு செய்தவர்கள் எங்கே ஒளிந்து இருந்தாலும் சட்டத்தின் முன்பாக நிற்க வேண்டும் என்கின்றனர் பெண் பேராசிரியர்கள் குழுவினர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கிரிவலம் வந்தா மட்டும் போதாது அங்குள்ள ஸ்டேஷனில் இருந்தாலே பணமழை கொட்டும் என்கிறார்களே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டம் பட்டு நகர் சப்-டிவிஷன்ல டவுன், தாலுகா காவல் நிலையங்கள் இருக்குது. இந்த காவல்நிலையங்கள்ல தனிப்பிரிவு காக்கிகளாக, தமிழ்கடவுள் பெயரை கொண்டவரும், பெயரில் மகிழ்ச்சியை கொண்ட 2 காக்கிகள் கடந்த 15 ஆண்டுகளாக அதே சப்-டிவிஷன்ல ஆணி அடித்தார்போல இருக்காங்களாம். இவங்க, அந்த எல்லைக்குட்பட்ட தகவல்களை மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதில் பாரபட்சம் காட்டுகிறார்களாம். காரணம் கரன்சி கொடுத்தால் ரிப்போர்ட் கரெக்ட் செய்து செல்கிறதாம். இல்லையென்றால் கைது செய்யும் அளவுக்கு காரசாரமாக செல்லுமாம். காவல்நிலையங்கள்லயே உட்கார்ந்துகிட்டு, ஆட்டோ டிரைவர்களை பிஏவாக வெஞ்சிக்கிட்டு, மாமூல் வசூல் செய்து செழிப்பா இருக்காங்களாம். இதனால, பட்டு நகர் சப்-டிவிஷன்ல புரோக்கர்களும், ஆட்டோ டிரைவர்களும் தான் தனிப்பிரிவு காக்கிகளாக செயல்படுறாங்களாம். இவங்கமேல, புகார்களும் மேலிடத்துக்கு போயிருக்குதாம். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம். ரெண்டு பேரும் மாசத்துக்கு லட்சக்கணக்குல வசூலிக்குறாங்களாம். அதுல, மாவட்டத்துல இருக்குற 3 ஸ்டார் காக்கியை தவறாம கவனிச்சிடுறாங்களாம். இதனால, எந்த பிரச்னையும் இல்லாம அந்த 3 ஸ்டார் காக்கி பாத்துக்குறாராம். இதனால இந்த 2 காக்கிகளும் வசூல் வேலைய கண்ணும் கருத்துமா செஞ்சி வர்றாங்களாம். அதுமட்டுமில்லாம, குடும்பத்தார் பெயர்கள்ல, வீடு, நிலம், வீட்டு மனைகள்னு கோடிக்கணக்குல சொத்துகளை வாங்கி குவிச்சிருக்காங்களாம். இதனால, ஒரே இடத்துல பல ஆண்டுகளாக பணிபுரியுற தனிப்பிரிவு காக்கிகளை உடனடியாக பணிமாற்றம் செஞ்சாத்தான், குற்றங்கள் குறையும், மக்கள் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்து தீர்வு கிடைக்கும்னு காக்கிகள் வட்டாரத்துல இருந்தே புகார்கள் வரத்தொடங்கியிருக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கரன்சியின் மழையில் புரளும் விவகாரம் வெளியில் கசிந்ததால் யாரு பயத்துல இருக்கா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தில் 109 டாஸ்மாக் கடைகள் உள்ளது. கடந்த ஆட்சியில் 40 கடைகளில் மட்டும் உரிமம் பெற்ற பார்கள் இயங்கி வந்தது. மீதமுள்ள கடைகளில் பார்கள் அனைத்தும் இலைகட்சியை சேர்ந்த பிரமுகர்கள் உரிமம் பெறாமல் நடத்தி கோடியில் புரண்டனர். ஆட்சி மாற்றத்தால் உரிமம் பெற்ற பார்கள் மட்டுமே இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதால் மாவட்டத்தில் உரிமம் இல்லாத பார்கள் அனைத்தும் கடந்த மாதம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதில் பூட்டி சீல் வைக்கப்பட்ட பார்கள் மீண்டும் மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. மீண்டும் திறக்கப்பட்ட ஒவ்வொரு பாரில் இருந்தும் மாதந்தோறும் ‘வைட்டமின் ப’ மாவட்ட அதிகாரியான முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் சக்தியானவருக்கு சென்று விடுகிறதாம். இந்த விவகாரம் தற்போது வெளியில் கசிந்ததால் அதிகாரி ரொம்பவே பீதியில் இருந்து வருவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்கும் பதக்கம்… கொந்தளிக்கும் காவலர்களை பற்றி சொல்லுங்க…’’என்றார் பீட்டா மாமா. ‘‘காஞ்சிபுரத்தில் 2019ல் அத்திவரதர் தரிசனம் கொடுத்தார். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதன் பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து போலீசார் காஞ்சிபுரம் சென்று இருந்தனர். குமரி மாவட்டத்தில் இருந்தும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிக்கு போய் இருந்தனர். இவ்வாறு பாதுகாப்பு பணிக்கு சென்றவர்களுக்கு அத்திவரதர் தனி பதக்கம் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட போலீசாருக்கும் இந்த பதக்கம் பல மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டதாம். எஸ்.பி. ஆபீசிலேயே இந்த பதக்கம் அப்படியே கிடப்பில் போட்டுள்ளார்களாம். மற்ற மாவட்டங்களில் இந்த பதக்கம் வழங்கப்பட்டு விட்டதாம். குமரி மாவட்டத்தில் மட்டும் இந்த பதக்கம் தொடர்பாக மாவட்ட உயரதிகாரி கவனத்துக்கே தெரிவிக்காமல் கீழ் நிலையில் உள்ள காவலர்கள் உள்ளார்களாம்… உழைத்தும் பயனில்லாமல் போவதா என்று காக்கிகள் புலம்புறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா