இலுப்பநத்தம் ஊராட்சியில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே இலுப்பநத்தம் ஊராட்சியில் 70 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் 4 கிலோ மீட்டர் நடந்து செல்லும் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இலுப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், அம்மன் புதூர், காரனூர், இலுப்பநத்தம், பழைய சாலை, இடுகம்பாளையம், பகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 6வது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே கிராம பகுதியில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே இப்பகுதியில் இருந்து சென்று வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள், ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு மனுவாக வழங்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை இப்பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் தினசரி 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. இதில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் போதிய வசதி இல்லாததால் ஆட்டோவில் கூட செல்ல முடியாமல் நடந்தே செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து கிராம பகுதிகளில் இருந்து எஸ்.புங்கம்பாளையம் அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து 6வது வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி கூறுகையில், ‘‘எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக பள்ளி செயல்பட்டு வருகிறது. எனது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு இப்பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு தொடங்கப்பட்டது. அதன் பின் 2012 ஆம் ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு  நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பள்ளியில் இப்பகுதி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் பேருந்து வசதியில்லாததால் தினசரி 4  கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி நிர்வாக,ம் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு சார்பில் இக்கிராமத்திற்கு பேருந்துகள் வழங்கப்படாமல் உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறுமுகை வழியாக தினசரி புளியம்பட்டி, அன்னூர் பகுதிகளுக்கு எஸ்.புங்கம்பாளையம் பகுதிக்கு 10 ஏ, 16, 24, 10சி, 10இ உள்ளிட்ட பேருந்துகள் சென்று வருகின்றன. இதில் ஏதாவது ஒரு பேருந்தை காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் சென்று வரும் வகையில் மாற்றிவிட வேண்டும்’’, என கூறினார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில்,‘‘எங்கள் பகுதியில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் தான் அதிகளவில் உள்ளனர். இதனால் எங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இதனிடையே அரசு பள்ளிக்கு எங்களது குழந்தைகள் சென்று கல்வி கற்று வருகின்றனர். இவர்கள் சென்று வருவதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகளாக இங்கிருந்து சென்று வரும் மாணவர்கள் 4 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்று வருகின்றனர். இதிலும் மழைக்காலங்களில்  குழந்தைகள் மழையில் நனைந்தபடி 4 கிலோமீட்டர் சென்று வருவதால் அவர்களுக்கு எளிதாக காய்ச்சல் சளி இருமல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு அவர்கள் விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றன. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எங்கள் கிராமத்தின் வழியாக அரசு பேருந்துகளை இயக்கி மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கூறினர்….

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா ஏற்பு

நெய்வேலி என்.எல்.சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் உயிரிழப்பு