இலங்கை, பாக்.கை கழற்றி விடும் சீனா: திவாலாகி வருவதால் மீண்டும் கடன் கொடுக்க தயக்கம்

கொழும்பு: உலகில் உள்ள வளரும் நாடுகள் தனது நாட்டை சார்ந்திருப்பதற்கான சூழலை உருவாக்க, கடன் வழங்கும் தந்திரத்தை சீனா பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த கடன் வலையில் விழுந்து, தற்போது பொருளாதாரத்தில் வீழ்ந்துள்ள நாடுகளுக்கு இலங்கை, பாகிஸ்தான் மிக சிறந்த எடுத்துக்காட்டு. இந்த 2 நாடுகளிலும் தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவதால், நட்பு நாடுகளாக இருந்த போதிலும், மீண்டும் கடன் கொடுக்க சீனா தயங்குகிறது. அதனால்தான், மார்ச் மாத இறுதியில் பாகிஸ்தான் திருப்பிச் செலுத்திய ரூ.30,400 கோடி கடனை திருப்பி வழங்கும் உறுதிமொழியை சீனா இன்னும் நிறைவேற்றவில்லை. அதே போல், ஜூலையில் செலுத்த வேண்டிய கடனுக்காக இலங்கை கேட்ட ரூ.19,000 கோடி கடன் உதவிக்கும் இதுவரை பதிலளிக்கவில்லை.அண்மை காலங்களில், வளரும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியை காட்டிலும் சீனா, அதன் பட்டுப்பாதை திட்டத்தை கருத்தில் கொண்டு, அதிகமாக கடன் அளித்து வருகிறது. கடன் வழங்குவதில், கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச நிதி அமைப்புகளையே சீனா மிஞ்சி உள்ளது. கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்கனவே, நிறைய கடன் கொடுத்திருப்பதால், கடந்த 2 ஆண்டுகளாக சீனா வெளிநாடுகளுக்கு கடன் வழங்குவதை மறுபரிசீலனை செய்து வருகிறது.இதனிடையே, இலங்கையும் வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவித்தது. அடுத்த வட்டி செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 18ம் தேதி முடிகிறது. இதனை செலுத்த தவறினால், இலங்கை கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இருப்பினும், வரும் ஜூலையில் சீனாவுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7,600 கோடியை திருப்பிச் செலுத்த, சீனா கடன் உதவி அளிக்கும் என்று இலங்கை அரசு தற்போது வரை நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், கொரோனா ஊரடங்கினால் சீனாவும் தற்போது பொருளாதார பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. எனவே, கடனை திரும்ப செலுத்தும் இலங்கை, பாகிஸ்தானின் ஒத்திவைப்புக் கோரிக்கைகளை வெகு எளிதாக ஏற்றுக்கொள்வது கடினம் என்று கூறப்படுகிறது.* அதிபர் மாளிகை முன் தமிழ் புத்தாண்டு தினம்இலங்கையில் அரசு பதவி விலக வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அதிபர் கோத்தபய மாளிகையின் முன்பு அடுப்பை பற்ற வைத்து புத்த பிட்சுகள் வேத மந்திரங்களை வாசிக்க, பட்டாசு வெடிக்கும் ஓசையுடன் பொங்கலிட்டு, நேற்று தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடினர்.* ஜெவிபி 3 நாள் பேரணிஇலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜெவிபி) பொது செயலாளர் டில்வின் சில்வா, `மக்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காமல், ஆட்சியை தக்க வைக்க நினைக்கும் ராஜபக்சே அரசுக்கு எதிராக 3 நாள் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் கலுத்தரவில் உள்ள பெருவல பகுதியில் வரும் 17ம் தேதி தொடங்கி முதல் 19ம் தேதி தலைநகர் கொழும்புவில் முடியும்,’ என்று நேற்று அறிவித்தார்….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு