இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இன்று காலை சென்னை வந்தனர்; மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊர் அழைத்து சென்றனர்

மீனம்பாக்கம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட  ராமேஸ்வரம் மீனவர்கள்  7 பேர் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை வரவேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வைத்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 15 பேர், 2 படகுகளில் இம்மாதம் 5ம் தேதி நள்ளிரவில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இலங்கை கடற்படையினர் வந்து, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் 2 படகுகளுடன் கைது செய்து, இலங்கைக்கு அழைத்து சென்றனர். அதன்பின்பு  மீன்களையும், படகுகளையும் பறிமுதல் செய்துவிட்டு, 15 தமிழக மீனவர்களையும் இலங்கை சிறையில் அடைத்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை  விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மற்றும் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதினார். இதனால்  இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம்  பேசினர்.இதையடுத்து இலங்கை நீதிமன்றம், இம்மாதம் 17ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் விடுதலை செய்து  உத்தரவிட்டது. அதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் தூதரகத்தின்  பராமரிப்பில்  இருந்தனர். அவர்களுக்கு முறையான கொரோனா பரிசோதனை உட்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர்.  விடுவிக்கப்பட்ட 15 பேரில்  7 பேர் இன்று அதிகாலை இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்‌. அதன்பிறகு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் அவர்களை சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அழைத்து சென்றனர். விடுவிக்கப்பட்ட மற்ற மீனவர்கள் அடுத்த ஓரிரு தினங்களில் வருவார்கள் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை