இலங்கை அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கை அரசுடமையாகாத விசைப்படகுகளும் ஏலம்

* தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பு * பாம்பன் கடலில் இறங்கி போராட்டம்ராமேஸ்வரம்: மீன்பிடி தடைச்சட்டப்படி அரசுடமையாகாத தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் ஏலம் விட்டுள்ளனர். நேற்று மேலும் 5 படகுகளை ஏலம் விட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பாம்பன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.இலங்கையில் கடந்த 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய மீன்பிடி தடை சட்டத்தின் அடிப்படையில், படகுகள் சிறை பிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசுடைமையாகி விடும். இச்சட்டத்தின் அடிப்படையில் தற்போது இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படும் படகுகள் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசுடைமையாக்கப்பட்டு வருகின்றன.கடந்த மாதம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஜெகதாபட்டினத்தை சேர்ந்த தமிழக மீனவரின் படகை அரசுடமையாக்கி இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 135 படகுகளை நேற்று முன்தினம் இலங்கை அரசு ஏலம் விட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மீன்பிடி படகுகள், இலங்கை பணமதிப்பில் ரூ.53 லட்சத்திற்கு அதிகாரிகளால் ஏலம் விடப்பட்டுள்ளன. இதனால் தமிழக மீனவர்கள் கடுமையாக நஷ்டமடைந்துள்ளனர்.இலங்கை அரசின் மீன்பிடி தடை சட்டம் 2018ன் கீழ் கைப்பற்றப்படாத, அதற்கு முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை, இந்திய படகு உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015 முதல் 2018 வரை இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகள் அரசுடமையாக்கப்படாமல் உள்ளன. தற்போது அந்த படகுகளும் அதிகாரிகளால் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இது சட்டவிரோதம் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, அரசுடமையாக்கப்படாத இந்த படகுகள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதில் கிடைத்த தொகை குறித்து, இலங்கை அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனிடையே, இலங்கை காங்கேசன்துறையில்  நேற்று தமிழக மீனவர்களின் 5 படகுகள் ரூ.4.31 லட்சத்திற்கு இலங்கை  அதிகாரிகளால் ஏலம் விடப்பட்டன. நாளை கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 14 படகுகள் ஏலம் விடப்பட  உள்ளன. இதனால் தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்து  நேற்று பாரம்பரிய மீனவர் சங்கத்தினர் பாம்பன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்  செய்தனர். பின்னர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில் மீனவ  பிரதிநிதிகளின் அவசர கூட்டம் கெம்ப்ளஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்,  படகுகள் ஏலம் விடும் நடவடிக்கையை முற்றாக தடுக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட 3 படகுகள், 11  ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 11ம் தேதி ராமேஸ்வரத்தில் ரயில் மறியல்  நடத்திடவும், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும்  முடிவு செய்யப்பட்டது.11 மீனவர்கள் சிறைபிடிப்பு; 3 விசைப்படகுகள் பறிமுதல்ராமேஸ்வரத்தில்  இருந்து நேற்று முன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்  மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலுக்கு சென்றனர். மீன்  பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து கப்பலில் வந்த இலங்கை  கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் 3 விசைப்படகுகளில் இருந்த தங்கதுரை, லிங்கம், ஜெயகிருஷ்ணன், மணிகண்டன் உட்பட 11  மீனவர்களை சிறைபிடித்தனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 11 பேரையும் 22ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே நேற்று காலை கரை திரும்பிய மீனவர்களது படகுகளில் மீன்வரத்து மிகவும் குறைவாக இருந்தது….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை