இலங்கை அகதிக்கு இழப்பீடு தராத வழக்கில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சொத்தை ஜப்தி செய்ய எதிர்ப்பு

புதுச்சேரி, ஏப். 29: புதுச்சேரியில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிக்கு இழப்பீடு தராத வழக்கில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் நேற்று சென்றனர். ஆனால், அவர்களை தனியார் நிறுவன ஊழியர்கள் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி திருபுவனை அடுத்த சிலோன் குடியிருப்பை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (27). இலங்கை அகதியான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 12.6.2019 அன்று இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றபோது திருபுவனை அருகே கார் மோதி படுகாயமடைந்தார். விபத்தினால் அவரது நரம்பு பாதிக்கப்பட்டு இரண்டு பாதங்களும் முழுமையாக செயல்பட முடியாமல் போனது.

இதனால் மனுதாரருக்கு ரூ.30 லட்சத்து 53 ஆயிரம் இழப்பீடு வழங்க கார் காப்பீடு செய்யப்பட்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கூடுதல் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் நீதிபதி சிவக்குமார் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கூடுதல் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் சார்பு நீதிபதி முத்துமுருகன் கடந்த 12.4.23ல் காப்பீட்டு நிறுவன சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ஜீவரத்தினம், அவரது வழக்கறிஞர் அய்யப்பன், நீதிமன்ற அமீனா வெங்கட் ஆகியோர் 45 அடி சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நேற்று வந்தனர். அங்கு, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஒருவாரம் அவகாசம் கேட்டனர். நீதிமன்ற உத்தரவு என்பதால் அவ்வாறு அவகாசம் தர இயலாது என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜப்தி செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களை அலுவலகத்துக்கு அனுமதிக்காததால் அமீனா வெங்கட், ஜப்தி செய்ய அனுமதிக்காததால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போலீஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு