இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை விவகாரம்: சட்டத்திற்கு உட்பட்டே முடிவெடுக்க முடியும்: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு தகவல்

மதுரை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டே முடிவெடுக்க முடியும் என ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் ஏற்கனவே மனு செய்திருந்தனர். மனுவில், ‘‘நாங்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எங்களின் மூதாதையர்கள் இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களுக்கு கூலி தொழிலாளர்களாக சென்றனர். 1983ல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால், உயிருக்கு பயந்து தமிழகம் வந்தோம். எங்களை அகதிகளாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாக கருதி இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தனர்.இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, ‘‘மனுதாரர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர்கள் இந்த விண்ணப்பங்களை தாமதமின்றி ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்க வேண்டும். ஒன்றிய அரசு அந்த விண்ணப்பங்கள் மீது 16 வாரத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப காரணங்களைக் கூறி நிராகரிக்க நினைக்க கூடாது’’ என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை செயலர், உள்துறை செயலர் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை கமிஷனர் ஆகியோர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. அதில், ‘‘சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்தவர்கள், குடியுரிமை சட்டம் 1955ன் படி சட்டரீதியான குடியுரிமை அந்தஸ்து ேகார முடியாது’’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைச்சுவாமி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசுத் தரப்பில், ‘‘இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்க முடியாது. சட்டத்திற்கு உட்பட்டே எந்த முடிவையும் எடுக்க முடியும்’’ என கூறப்பட்டது.  இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர். …

Related posts

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளது: சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி

சிக்னல் கோளாறு: ரயில் பயணிகள் பாதிப்பு

மதுரையில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த 106 பயணிகள் வெளியேற்றம்: அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக கூறி மோசடி