இலங்கையில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே அதிபராக பதவியேற்றார் ரணில்: புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன இன்று பதவியேற்பு?

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால், அதிபராக இருந்த கோத்தபய உயிருக்கு பயந்து, குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடி சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இலங்கை நாடாளுமன்றம் நேற்று முன்தினம்  கூடியது. இத்தேர்தலில் மொத்த வாக்குகளான 225ல் 223 வாக்குகள் பதிவாகின. எம்பி.க்கள் ஜிஜி பொன்னம்பலம், செல்வராஜ கஜேந்திரம் வாக்களிக்கவில்லை. 4 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனால், 219 வாக்குகள் மட்டும் எண்ணப்பட்டது. இதில், ரணில் 134 வாக்குகளும், டல்லாஸ் அழகப்பெருமா 82 வாக்குகளும், அனுராகுமார திசநாயகே 3 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் இலங்கையின் 9வது அதிபராக ரணில் தேர்வு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் ரணில் ஆவர். பின்னர், கொழும்புவில் உள்ள பழமை வாய்ந்த கங்காராமா கோயிலுக்கு சென்று வழிபட்டார். ரணிலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், அவர் உடனே அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி, அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடாளுமன்றம் ஒரு வாரத்துக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் நடந்த எளிமையான விழாவில் இலங்கையின் 9வது அதிபராக ரணில் நேற்று பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  6 முறை பிரதமராக இருந்த ரணில், முதல் முறையாக அதிபராக பதவியேற்று உள்ளார். அவருக்கு பல்வேறு பொருளாதார சவால்கள் காத்திருக்கிறது. ரணிலின் கீழ் பணியாற்றுவதற்கு 20-25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என்றும், புதிய பிரதமராக இலங்கை பொதுஜன பெரமுனவை சேர்ந்த தினேஷ் குணவர்தன, இன்று பதவியேற்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.ராஜபக்சேக்களின் நண்பன் அல்ல புதிய அதிபராக பொறுப்பேற்ற ரணில் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் இத்தனை காலம் ராஜபக்சேக்களை எதிர்த்து வருகிறேன். நான் ராஜபக்சேக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன். அவர்கள் விரும்பும் மிகவும் தேவையான அமைப்பு மாற்றத்தை கொண்டு வருவேன். அமைதியான எதிர்ப்பில் ஈடுபடுபவர்களை நாம் அனுமதிக்க வேண்டும். நாமும் அவர்களுக்கு பதில் சொல்லலாம். இருப்பினும், அரசுகளை கவிழ்க்கவோ, வீடுகளை எரிக்கவோ அல்லது முக்கிய அலுவலகங்களை ஆக்கிரமிக்கவோ போராட்டம் பயன்படுத்தக் கூடாது. அது ஜனநாயகம் அல்ல, அவை சட்ட விரோத செயல்கள்’ என்று தெரிவித்தார்.பதவியேற்பின்போது மின்தடைஅதிபர் ரணிலின் பதவியேற்பு நிகழ்ச்சியை இலங்கை அரசு ஒளிபரப்பு நிறுவனமான ரூபவாகினி தொலைகாட்சியும், இதர தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாடாளுமன்றத்துக்கு வந்த ரணிலுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த காட்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தபோது, திடீரென மின்தடை ஏற்பட்டது. 10 நிமிடம் மின்தடை நீடித்தது. மீண்டும் மின்சாரம் வருவதற்குள், பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து விட்டது. இதனால், நேரடி ஒளிப்பரப்பு தடைபட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்