இலங்கையில் பிரதமர் அலுவலகம் எதிரே குவிக்கப்பட்ட போலீசை விரட்டிய போராட்டக் குழு

கொழும்பு: இலங்கையில் பிரதமர் அலுவலகம் எதிரே போராட்டத்தை ஒடுக்க போலீசாரும், சிறப்பு அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர், போலீசாரை அங்கிருந்து விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலகக் கோரி பொதுமக்கள் கடந்த மாதம் 10ம் தேதி முதல் கொழும்பு காலே முகத்திடல் பகுதியில் பிரமாண்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அங்குள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக தற்காலிக முகாம்களை அமைத்து, 24 மணி நேரமும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்போராட்டத்தை ஒடுக்க நேற்று காலை கூடுதல் போலீசாரும், வன்முறையை தடுப்பதற்கான சிறப்பு அதிரடிப் படை போலீசாரும் போராட்ட களத்தில் குவிக்கப்பட்டனர். 2 லாரிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டதற்கு, போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் லத்தி உள்ளிட்ட உபகரணங்களுடன் போராட்ட களத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிரதமர் அலுவலகத்தில் நுழைவதை தடுப்பதற்காக போலீஸ் படை அதிகரிக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தங்களின் போராட்டம் அமைதியான முறையில் நடப்பதாகவும், போலீஸ் படையை குவித்து கலவரத்தை தூண்டக் கூடாது எனவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் வேறு வழியின்றி போலீசார் அங்கிருந்து, வந்த லாரிகளிலேயே ஏறி திரும்பிச் சென்றனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் மே தின பேரணியில் பங்கேற்ற முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா பேசுகையில், ‘‘இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிய அரசு அமைய வேண்டும். இதற்காக விரைவில் தேர்தல் நடத்தி புதிய அரசை மக்கள் தேர்வு செய்ய வழிவகுக்க வேண்டும்’’ என்றார். முன்னாள் பிரதமர் விக்ரமசிங்கே  பேசுகையில், ‘‘அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை  பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, இந்திய மற்றும் சீனா உள்ளிட்ட  அண்டை நாடுகளிடும் நிதியுதவியை கேட்கலாம். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு  தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதற்கு முன்னுரிமை  அளிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதனால், கோத்தபய, மகிந்தா ராஜபக்சேவுக்கு நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.இந்தியா மீண்டும் உதவி: பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு இந்தியா இதுவரை சுமார் ரூ.15 ஆயிரம் கோடி வரை கடன் உதவி வழங்கி உள்ளது. இந்நிலையில் மேலும் கடன் உதவியை இலங்கை கோரியுள்ளதாக அந்நாட்டின் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜயசேகரா கூறுகையில், ‘‘அவசரகால எரிபொருள் இருப்புக்கு கொள்முதல் செய்வதற்கான இந்தியாவுடனான கடன் வரம்பு ரூ.1530 கோடி  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிடம் கூடுதலாக ரூ.3825 கோடி கடன் உதவியை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது’’ என்றார்….

Related posts

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி