இலங்கையில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை அனைத்து தரப்பு மக்களும் போராட்டம்: ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக கொந்தளிப்பு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி உச்சமடைந்துள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்ததோடு, உணவுப் பொருட்கள், எரிவாயு, பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்து பொருட்கள் பற்றாக்குறையால், பல மருத்துவமனைகள் இழுத்து மூடப்பட்டு நோயாளிகள் தவிக்கின்றனர். இதற்கிடையே இந்தியா தந்த கடனும் தீர்ந்து போய், இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.இதனால், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், தற்போது அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் கொழும்பு காலே முகத்திடல் பகுதியில் நேற்று நடந்த போராட்டத்தில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள், நர்ஸ்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர். இப்பகுதி அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்திற்கு அருகில் உள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், நாட்டை சர்வநாசம் செய்த ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பமும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக வேண்டுமென பதாகைகளை ஏந்தியிருந்தனர்.பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டின் அருகிலும் போராட்டங்கள் நடந்தன. பல இடங்களில் போலீசார் தடையை மீறி பொதுமக்கள் ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே நாட்டை மீட்க முடியாமல் இலங்கை அரசு தவித்து வரும் நிலையில், பணவீக்கத்தை சமாளிக்க அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. இதனால், அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.* மேலும் ரூ.3,750 கோடி தந்து இந்தியா உதவ வேண்டும்இலங்கையில் நிலைமையை சமாளிக்க கடந்த 3 மாதமாக இந்தியா சுமார் ரூ.19,000 கோடி வரை நிதி உதவி வழங்கி உள்ளது. எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக ரூ.3,750 கோடி கடன் உதவி வழங்கி உள்ளது. இந்நிலையில், இலங்கையின் புதிய நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள அலி சப்ரி, நேற்று அளித்த பேட்டியில், ‘‘எரிபொருளுக்காக இந்தியா மேலும் ரூ.3,750 கோடி கடன் வழங்கி உதவ வேண்டும். இதன் மூலம் 5 வார எரிபொருள் தேவையை எங்களால் சமாளிக்க முடியும். அதே போல் அடுத்த 6 மாதத்திற்கு எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க எங்களுக்கு ரூ.22,500 கோடி வெளிநாட்டு உதவி தேவை’’ என்றார்….

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது