இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை அதிகரிப்பு: நேற்று நள்ளிரவில் 18 பேர் வந்தனர்

ராமேஸ்வரம்: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இலங்கையில் இருந்து அகதிகளாக 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேர், நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி வந்தனர். அவர்களிடம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூபிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக  பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் கொழும்புவில் உள்ள காலி  முகத்திடலில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோத்தபய  ராஜபக்சே கூறுகையில், ‘‘கொரோனா பரவல், கடன் சுமை மற்றும் எனது அரசின் தவறுகளால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது சரிசெய்யப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடி, இதையடுத்து உருவான அரசியல் நெருக்கடி ஆகியவற்றுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். இலங்கையில் முழுமையாக இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வகையில் ரசாயன உரத்தை தடை செய்திருக்க கூடாது. பொருளாதார நெருக்கடியால் இன்று மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்க வேண்டும்’’ என்றார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழலில் இலங்கையில் உள்ள தமிழர்கள், அகதிகளாக தொடர்ந்து தமிழகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் தனது 11 வயது மற்றும் 7 வயது குழந்தைகளுடன் தனியாக இளம்பெண் ஒருவர், தனுஷ்கோடிக்கு வந்தார். இந்நிலையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் வசித்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேர், நேற்று இரவு இலங்கையில் இருந்து 2 படகுகளில் புறப்பட்டு, நள்ளிரவில் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர்.  இலங்கை மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதி வண்ணாங்குளத்தை சேர்ந்த உணவு விடுதி உரிமையாளர் நகுலேஸ்வரன்(48), அவரது மனைவி ஈஸ்வரி(41) மகன்கள் தனுஷ்(17), பனுஷன்(15), மகள் யதுர்ஷிகா(12), மகன்கள் மிதுலன்(8) மற்றும் வினு(17). மற்றும் அதே பகுதியை சேர்ந்த நதுசன்(21), அவரது மனைவி பியோனா(21), மன்னார் உயிலங்குளத்தை சேர்ந்த பிரதீப்(30), அவரது மனைவி கஸ்தூரி(29) இவர்களது மகள்கள் சஸ்மிட்ரா(2) மற்றும் சுஸ்மிட்ரா(4) ஆகிய 13 பேர் நேற்று இரவு 7 மணியளவில் பைபர் கிளாஸ் படகில் மன்னாரில் இருந்து புறப்பட்டுள்ளனர். இரவு 11 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் வந்திறங்கினர். இரவுப்பணியில் இருந்த போலீசார் அவர்களை ராமேஸ்வரம் அழைத்து வந்து, விசாரணை நடத்தினர். இதில் படகில் தனுஷ்கோடி வருவதற்கு ரூ.4 லட்சம் கட்டணமாக கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் நீர்வேலி வடக்கு பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி(58) இவரது தாயார் கிட்ணம்மாள்(81), மனைவி மகேஸ்வரி(53), மகன் பிரவீன் டேனியல்(19) மற்றும் இதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்(72) ஆகியோர் நேற்று இரவு 10 மணிக்கு மேல் மன்னார் கடற்கரையில் இருந்து படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அருகிலுள்ள சேரான்கோட்டை கடற்கரையில் வந்திறங்கினர். படகு கட்டணமாக ரூ.70 ஆயிரம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரிடமும் ராமேஸ்வரம் போலீசார் இன்று காலை விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடம்பனை சேர்ந்த நகுலேஸ்வரன் கூறுகையில், ‘அடம்பனில் உணவு விடுதி நடத்தி வந்தேன். தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் உணவு விடுதிக்கு யாரும் சாப்பிட வருவதில்லை. மக்களிடம் பணம் இருந்தால்தானே வருவார்கள். வேறு வேலையும் கிடைக்கவில்லை. குடும்பத்தை காப்பாற்ற வழியில்லாததால் அகதிகளாக இங்கு வந்து விட்டோம்’’ என்று வேதனையுடன் தெரிவித்தார். ஏற்கனவே இலங்கையில் இருந்து 42 பேர் அகதிகளாக தனுஷ்கோடி மற்றும் மண்டபத்திற்கு வந்துள்ளனர்.  இந்த எண்ணிக்கை தற்போது 60 ஆக அதிகரித்துள்ளது.ஒரு படகு வரவில்லை?இலங்கை மன்னார் கடற்கரை பகுதியிலிருந்து நேற்று இரவில் 3 படகுகளில் தமிழர்கள் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து இலங்கை கடற்படையினர் மற்றும் புலனாய்வு துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இன்று காலை வரை 2 படகுகளில் 18 பேர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளனர். ஒரு படகு வந்து சேரவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் மற்ற கடலோர மாவட்டங்களில் படகு எதுவும் வந்ததா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இன்று காலை 9 மணி வரை எந்த கடலோர பகுதியிலும் இருந்து இலங்கை அகதிகளுடன் படகு வந்ததாக தகவல் இல்லை. இதனால் மன்னார் கடற்கரையில் புறப்பட்ட 3வது படகு எங்கே சென்றது? எத்தனை பேர் வந்தனர்? அவர்களது நிலை என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இலங்கை கடற்படையினரும், போலீசாரும் இது குறித்து விசாரித்து வருவதுடன், கடல் பகுதியிலும் தேடி வருகின்றனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை