இறை பணிக்கும், சமூக வளர்ச்சிக்கும், அக்கறையுடன் தொண்டாற்றுபவர்களுக்கு அங்கீகாரம் தருகின்றவர் நமது முதலமைச்சர்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7A –ன் கீழ், சென்னை வருவாய் மாவட்ட எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii) –ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை(Non Hereditary Trustees) நியமனம் செய்திட தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, இன்று பூங்காநகர், கந்தக்கோட்டம் வசந்த மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், உறுப்பினர்களாக ஆர்.வெற்றிவீரன், வி.சாவித்திரிதேவி, வி.விஜய வெங்கடேசன், பி.ஜெ.பாஸ்கர் ஆகியோரும் பதவியேற்கும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாவட்ட அறங்காவலர்கள் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து  பேசியதாவது; சென்னை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி ஒரு பெரிய அரங்கத்திலே நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி என்றாலும், தெய்வ சன்னிதானத்தில் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அரங்கத்தை தேர்வு செய்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம். மூர்த்தி சிறிதென்றாலும், கீர்த்தி பெரிது என்பது போல இந்த அரங்கம் சிறிதாக இருந்தாலும், கந்தகோட்டம் முருகப்பெருமான் திருக்கோயிலுக்கு சொந்தமான வசந்த மண்டபத்தில் நடைபெறுவது சிறப்பானது, பெருமைக்குரியது. இறைபக்தி உள்ளவர்களை ஆன்மீகத்தில் முழுமையாக நாட்டம் உள்ளவர்களை, சமூக நலனோடு மக்களின் வாழ்வில் அக்கறை கொண்டவர்களை, இந்த மாவட்ட அறங்காவலர் குழுவிற்கு நியமித்த தமிழ்நாடு முதலமைச்சர் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குழுவின் தலைவராக ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, எளிய எளியவர்களுக்கு சட்டத்தை நிலை நாட்டுகின்ற பொறுப்பிலிருந்து வழுவாமல் மக்கள் பணியை திறப்பட செய்யக்கூடிய ஒரு நல்லவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மிகுந்த இறைபக்தி கொண்டவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். முதலமைச்சர் பொறுத்தளவில் இன்னார் இனியவர் என்ற பாகுபாடு இல்லாமல் யாரெல்லாம் சமூக வளர்ச்சிக்கும், இறை பணிக்கும்,  அக்கறையுடன் தொண்டாற்ற விரும்பினார்களோ அவர்களுக்கெல்லாம் அங்கீகாரம் தருகின்ற முதல்வராக நமது முதல்வர்  திகழ்கின்றார் என்பதற்கு இந்த நியமனம் ஒரு   அடையாளமாகும்.  இத்துறையின் அமைச்சராகிய நானும், செயலர் மற்றும் ஆணையரும்  ஒட்டுமொத்தமாக தமிழகத்திலுள்ள 509 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க ஆணை வெளியிட முடியும். ஆனால் இன்று பதவியேற்றுக் கொண்டிருக்கின்ற அறங்காவலர்கள் குழு சென்னை மாவட்டத்தில் உள்ள 854 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கின்ற பொறுப்பில் இருக்கின்றார்கள். முதல்வர் உங்கள் மீதான நம்பிக்கையின்பால் அறங்காவலராக நியமித்தாரோ, அதேபோல  நீங்களும் மாவட்டத்திலுள்ள திருக்கோயிலுக்கு அறங்காவலர்களை நியமிக்கின்ற போது இறைவனுக்கு முழுமையாக பணியாற்றுகின்றவர்களை சமூக அக்கறை கொண்டவர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பணி ஒரு மகத்தான பணி. அதனை திறம்பட செய்திட வேண்டும்.  திருக்கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருக்கின்ற சொத்துக்களை மீட்பது, வருமானத்தை பெருக்குவது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றை நிறைவேற்றிட நீங்கள் உறுதி எடுத்துக் கொள்ளும் ஒரு நல்ல நிகழ்வாக இந்த நிகழ்வு அமைய வேண்டும்.  முதல்வர் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் உங்கள் பணிகள் அமைந்திட வேண்டும் என தெரிவித்து, பதவியேற்றுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன்’ என அமைச்சர் சேகர்பாபு பேசினார்.இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, சென்னை மண்டல இணை ஆணையர்கள் முனைவர் ந.தனபால், கே.ரேணுகாதேவி, உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பி.ஸ்ரீராமுலு, கூ.பி.ஜெயின், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் பரிமளம், ஆசாத்,  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்