இறச்சகுளம் அருகே லாரியில் இருந்து நடுரோட்டில் விழுந்த காங்கிரீட் கட்டை அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

பூதப்பாண்டி, ஜூலை 30: குமரி மாவட்டம் வழியாக ஏராளமான டாரஸ் லாரிகளில் கேரளாவிற்கு இரவு-பகலாக கனிம வளங்கள், கல் மற்றும் ஜல்லி போன்றவை அதிகளவில் கடத்தப்படுகின்றன.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அனுமதி சீட்டு இருக்கிறதா? என்று சோதனை செய்வதோடு, அதிக பாரம் ஏற்றி வந்தால் அபராதமும் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால் அதனையும் மீறி திருட்டுத்தனமாக லாரிகள் செல்கின்றன. நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் சாலையில் ஒரு லாரியில் அதிக அளவில் கான்கிரீட் தூண்கள் கொண்டு செல்லப்பட்டன.

அதிவேகமாக சென்றதால் லாரியில் இருந்த சிமெண்ட் கட்டை ஒன்று திடீரென்று நடுரோட்டில் விழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிக போக்குவரத்துள்ள அந்த சாலையில் யாரும் லாரியை பின் தொடர்ந்து வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுபோல் இறச்சகுளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிவேகமாக அதிக பாரத்துடன் சென்ற லாரியால் மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இந்த வழியாக வரும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் அச்சத்துடனே பயணிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து