இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் கட்டுமாவடி மீன் மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல்

அறந்தாங்கி, ஆக.15: அறந்தாங்கி பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதால் கட்டுமாவடி மீன் மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கட்டுமாவடி மீன் மார்க்கெட், பெரிய மீன் மார்கெட்டாக இருந்து வருகிறது. இந்த மீன் மார்கெட்டுக்கு மணமேல்குடி, கோட்டைபட்டிம், ராமநாதபுரம், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்களை விற்பனை செய்வதற்கும், மீன்களை வாங்குவதற்கும் கனரக வாகனங்களில் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். மேலும் வியாபாரிகள் மட்டும் இல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் வந்து மீன் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் மீன் மார்கெட் அருகே செல்லும் அறந்தாங்கி சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையின் வழியே செல்லக்கூடிய இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மீன் மார்க்கெட் பரபரப்புடன் காணப்படுவதால் அந்த நேரத்தில் அலுவலக பணி நேரம் என்பதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். மேலும் இந்த வழியாக அந்த நேரத்தில் செல்லும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’