இரவு நேர ஊரடங்கு தேவையா? மருத்துவ நிபுணர்களுடன் 31ம் தேதி ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து வருகிற 31ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் புதிய தரவு அலகு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஓமியோபதி, யுனானி, சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவமுறையின் மூலம் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து முதல்வர் அறிவுறுத்தலின்படி ஆய்வு செய்தோம். அந்த வகையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சுமார் 1,542 மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் 1,710 நிரந்தர படுக்கை வசதி உள்ளது. மேலும், 77 இடங்களில் கடந்த மே மாதம் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, அதில், 1800 புதிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அதை மேம்படுத்தி, தயார்படுத்த புதிய தரவு அலகு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், முதல்முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்காக ஆரம்பகட்ட செலவாக ரூ.2 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது. மாதவரம் பால்பண்ணை அருகே 19.6 ஏக்கரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையும். பல்கலைக்கழகத்தின் தரைத்தளம் அமைக்கப்பட்டு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்கலையை துவக்கி வைக்கிறார். அடுத்த 18 மாதங்களுக்குள் மருத்துவ பல்கலைக்கழகம் பயன்பாட்டிற்கு வரும்.நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 97 பேருக்கு ‘எஸ் ஜீன் டிராப்’ வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 34 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் குணமாகியுள்ளனர்; 16 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகளுக்காக நீண்டநாள் காத்திருக்க வேண்டியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பிறகும் கூட பரிசோதனை முடிவுகள் வரவில்லை. கோவையில் திமுக கூட்டம் உள்ளரங்கில் நடைபெற்றது. பொது வெளியில் ஊர்வலம், மாநாடு நடத்த மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தனியாக வந்து அஞ்சலி செலுத்த அனுமதி வாங்கி ஊர்வலம் சென்ற ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆகிய அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் அமமுக வெளி இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள், அதனால் தான் அனுமதி கிடைக்கவில்லை. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எத்தனை நாட்களுக்கு பிறகு போடவேண்டும், எந்த தடுப்பூசி போட வேண்டும் என ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை இன்னும் வழங்கவில்லை. சென்னை போரூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், 15- 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைக்கிறார். 15- 18 வயது சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த இருக்கிறோம். இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதா என்று அதற்கான விதிமுறைகளை பின்பற்றி வருகிறோம், வரும் 31ம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், 15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைக்கிறார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை