Sunday, June 30, 2024
Home » இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும்: கொரோனா 2-வது அலையை சமாளிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்..தமிழக அரசு எச்சரிக்கை.!!!

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும்: கொரோனா 2-வது அலையை சமாளிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்..தமிழக அரசு எச்சரிக்கை.!!!

by kannappan

சென்னை: தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை பற்றியும், அதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, 8.4.2021 அன்று அனைத்து மாநிலங்களோடு காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பாக தலைமைச் செயலாளர் முவீவைர் ராஜீவ் ரஞ்சன், மாநில காவல் துறை தலைவர் திரிபாதி, கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணீந்திர ரெட்டி, முதன்மைச் செயலாளர் பொதுத் துறை முனைவர் பி. செந்தில் குமார், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற குறிப்பிட்ட மாநிலங்களின் நிலைமை குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாண்புமிகு பாரதப் பிரதமர் பேசுகையில், தற்பொழுது கொரோனா உச்சநிலை அடைவது மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாக்கிக் கொண்டு வருகிறது.  இதில் குறிப்பிட்ட மாநிலங்களில் கடந்தாண்டு தொட்ட உச்சத்தை ஏற்கனவே தாண்டி உள்ளது.  மேலும் கொரோனா வளர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும் பலரிடம் கோவிட் தொய்வு காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நிர்வாகத்தில் அனைத்து துறையினரும் எவ்வாறு ஒருங்கிணைந்து கொரோனா தொற்று பரவலை சமாளித்தோமோ அதே வேகத்தில் தற்போதும் செயல்பட்டு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  நிர்வாகத்தில் சுனக்கம் இருக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு கடந்தாண்டு பெற்ற அனுபவம் மற்றும் தற்பொழுது நம்மிடம் உள்ள கூடுதல் படுக்கைகள் வசதிகள், உயிர்காக்கும் கருவிகள் மற்றும் தடுப்பூசிகளை பயன்படுத்தவேண்டும் என குறிப்பிட்டார்.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை மிகவும் எச்சரிக்கையாகவும் கடுமையாகவும் பராமரிக்கவேண்டும் என்றும், அங்குள்ள அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டார். நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் உடனிருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சோதனை செய்வதன் மூலம் கூடுதலான சோதனைகள் செய்யப்பட்டு நோயுள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதுதான் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி என குறிப்பிட்டார்.  மேலும், அண்மை காலங்களில் நோய் அறிகுறி இல்லாதவர்கள் அவர்களுக்கு நோய் உள்ளதை அறியாமலும் தன்னை சோதனைக்கு உட்படுத்தாமலும் இருக்கின்ற காரணத்தினால் வீட்டில் உள்ள பலருக்கு நோய் பரவ காரணமாகிறார்கள் என குறிப்பிட்டார்.  சோதனை அதிகபடுத்தி கூடுதல் எண்ணிக்கை வந்த போதிலும் இந்த முறையை பின்பற்றவில்லை என்றால் இந்த நோயை கட்டுபடுத்த முடியாது என அறிவுறுத்தினார்.  அதுமட்டுமின்றி, தடுப்பூசி குறித்து இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.  தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று விகிதம் (Positivity Rate) மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2021 வரை தொடர்ந்து குறைந்து வந்தது.  தற்போது ஏப்ரல் 2021-இல் சராசரியாக தினமும் 3900 அதிகமான நபர்களுக்கு புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.  மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், நடமாடும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு, நோய் உறுதி செய்யப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், கோவிட் கவனிப்பு மையங்களில் அனுமதிக்கவும் அல்லது வீட்டில் தனிமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவிட் சார்ந்த பழக்கங்களான (COVID Appropriate Behaviour) முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவைகளை மீண்டும் கடைபிடிக்க வலியுறுத்தப்படுவதோடு, இதனை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.  16.3.2021 முதல் இதுவரை, விதிகளை மீறியதாக 1,36,667 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து 2,88,90,600 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.8.4.2021 வரை, 4,58,969 சுகாதாரப் பணியாளர்கள், 5,61,531 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 9,21,050 நபர்கள், 45-59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 70,216 நபர்கள்,  60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 11,14,270 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 2,12,517 சுகாதாரப் பணியாளர்கள், 81,685 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 25,804 நபர்கள் 45-59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 100 நபர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 40,894 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.  இதுவரை 31,26,036 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி, 3,61,000 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 34,87,036 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, நோய் தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்டுபிடித்து பரிசோதனை செய்தல், நோய்த் தொற்றுப் பகுதிகளில் கண்டிப்பான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்தல், நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தொடக்க நிலையிலிருந்த கவனம் செலுத்தல் மற்றும் தமிழ்நாடு மட்டுமே அனைத்து மாவட்டங்களிலும் RT-PCR பரிசோதனையை செய்து வருகிறது.  இதுவரை 2.01 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன, மாநிலம் முழுவதும் வீடு வீடாக சென்று கண்காணித்தல், நடமாடும் காய்ச்சல் முகாம்கள் (Field Fever Camps) உட்பட தினமும் 3000 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முகக்கவசம் அணிதல், சோப்பு போட்டு அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், வீட்டில் தனிமைப்படுத்தும் முறை போன்ற கோவிட் சார்ந்த பழக்கங்கள் (Covid Appropriate Behavior) பற்றி தீவிரமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா நோய் குணப்படுத்தும் முறையில் இந்திய முறை மருத்துவம் ஈடுபடுத்தப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வல்லுநர்களோடு அடிக்கடி கலந்து ஆலோசித்து அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த பணிகளை முடுக்கிவிட ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 களப்பணி குழுக்களும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் பதிவாகும் தொற்று எண்ணிக்கையின் அளவு, கோவிட் பராமரிப்பு மையம் தொடங்கப்பட்ட நிலை, அந்த மாவட்டத்தில் தடுப்பூசி போடும் நிலைமை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பணிகள் மற்றும் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தவைர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடன் இணைந்து கண்காணிப்பார்கள்.ஒரு காலவரையறைக்குள், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்குமேல் உள்ள அனைவருக்கும் 100 விழுக்காடு தடுப்பூசி போடும் பணியையும் முடிக்க முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக 14 ஏப்ரல் 16 ஏப்ரல் வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.  அரசு எடுத்து வரும் மேற்கண்ட நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது தமிழ்நாட்டில் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர் என்பதோடு, இறப்பு விகிதம் 1.41 விழுக்காடு என குறைவாக உள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் தமிழ்நாடு அரசு, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு 10.04.2021 முதல் முற்றிலுமாக தடைவிதித்தும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு  8.4.2021 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு (Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்.தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  இந்த கொரோனா தொற்று இரண்டாவது அலையை சமாளிக்க, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi