இரண்டு குழந்தை கொள்கை?

நன்றி குங்குமம் தோழி அசாம் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் இரண்டு குழந்தைகள் திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அந்த பெற்றோரால் அரசு வேலைகளில் விண்ணப்பிக்க முடியாது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், மேலும் சில அரசாங்க சலுகைகள் கிடைக்காது என்ற திட்டத்தை அம்மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ளன. ராஜஸ்தான், குஜராத், மகாராஸ்டிரா, உத்தரகாண்ட், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்தியா முழுக்க இந்த திட்டங்கள் அமலாகுமா என்ற கேள்வி மக்களிடையே இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என அரசு சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் இதை இந்தியா முழுக்க அமல்படுத்தினால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை முன்னரே யூகித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சீனாவில் ஏற்பட்ட நிலைமையை ஆராய வேண்டும். சீனாவில் ஒரு குழந்தை கொள்கையைத் தளர்த்தி, இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதித்திருந்த அந்நாட்டு அரசு, இப்போது மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் எனும் புதிய திட்டத்தை மே 31 ஆம் தேதி அறிவித்தது.சீனாவில் ஒரு குழந்தை கொள்கை செப்டம்பர் 1980 முதல் 2016 ஜனவரி வரை 36 ஆண்டுகள் நடைமுறையிலிருந்தது. சீனாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட இந்த கொள்கையால் நன்மைகளை விட நஷ்டங்களே அதிகமாக இருந்தன. அதில் பெண் சிசுக்கொலை முக்கிய பிரச்சனையாக இருந்து வந்தது. சீனாவின் இந்த கொள்கையால் ஏற்பட்ட விளைவுகளைக் கண்ட உலக நாடுகள் பல பாடங்களை கற்றுக் கொண்டனர். இந்த ஒரு குழந்தை கொள்கையை சீனா நடைமுறைபடுத்திய காலகட்டத்தில், அனைவருமே ஆண் குழந்தைகளையே விரும்பினர். இதனால் பெண் சிசுக்கொலை பலமடங்கு அதிகரித்தது. சுகாதாரமற்ற கருக்கலைப்புகளும் அதிகரித்தன. பெண் குழந்தைகள் பிறந்தாலும் அவர்கள் அனாதை இல்லங்களிலும் சிலர் தெருக்களிலும் விடப்பட்டனர். பல வீடுகளில் ஆண் குழந்தை பிறக்கும் வரை குழந்தைகளைப் பெற்று, மற்ற குழந்தைகளை எல்லாம் பல நாடுகளுக்கு தத்து கொடுக்க அனுப்பிவிட்டனர். சில வீடுகளில் குடும்பத்தினரே பெண் குழந்தைகளைக் கொலை செய்யும் வழக்கமும் இருந்தது. ஒரு பெண், இரண்டாவது முறை கர்ப்பம் தரித்தால், மருத்துவர்கள் அதை உடனே அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவார்கள். அவர்கள் அப்பெண்ணிற்கு கட்டாய கருக்கலைப்பு செய்வார்கள். அதையும் மீறி இரண்டாவது குழந்தையை பெறும் பெற்றோர்கள், பெரும் அபராத தொகையுடன் தங்கள் வேலையைக் கூட இழக்கும் நிலை இருந்தது. இப்போது சுமார் 30 ஆண்டுகள் கழித்து அந்த கொள்கையின் விளைவாக, பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை சீனாவில் பல மடங்கு அதிகமாக உள்ளது. இதுதவிர, சில சமயம் ஒரு குழந்தை இறக்கும் பட்சத்தில், பெற்றோர்கள் இறுதி நாட்களில் தனித்து நின்று அடுத்த தலைமுறையே இல்லாமல் போன கதைகளும் அங்கு உண்டு. இந்த சூழலில், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை சீனாவில் குறைந்துள்ளது. குடும்பங்கள் சுருங்கி, உறவினர்கள் குறைந்து, தனிமையும் அதிகரித்தது. இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களை திருமணம் செய்ய பெண்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு குழந்தை கொள்கையை மக்களுக்கு தீவிரமாக பரப்பிய சீன அரசு, தொலைக்காட்சிகள், பள்ளிகள், பொது இடங்கள் என எங்கு திரும்பினாலும் ஒரு குழந்தைக்கு மேல் இருப்பது சரியில்லை என்ற ரீதியில் விளம்பரம் செய்தனர். இதனால் ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதே சிறந்தது என நினைக்கும் சமுதாயமாக சீன மக்கள்  மாறிவிட்டனர். சுமார் முப்பது ஆண்டுகள் உடன் பிறந்தவர்கள் யாருமே இல்லாமல் கோடிக்கணக்கான குழந்தைகள் வளர்ந்தனர். இதனால் பல குழந்தைகள் வளர்ந்த பின் தனிமையில் மன அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறி அதை அரசாங்கம் இப்போது இரண்டு குழந்தைகளை அனுமதித்து சமீபத்தில் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. ஆனால் சீன மக்களின் மனநிலை வேறு விதமாக இருக்கிறது. அதிகரித்து வரும் பொருளாதார சுமையால் பல சீன இளைஞர்கள் திருமணமும் வேண்டாம், குழந்தைகளும் வேண்டாம் என்ற முடிவில் உள்ளனர்.மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று, பெண்களுக்கு அவர்கள் உடல் மீதான உரிமையை பறிக்க முடியாது. போதுமான விழிப்புணர்வுகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி மக்கள் சுயமாக சிந்தித்து செயல்படும் சூழலை உருவாக்கினாலே, நாடு வளர்ச்சியடையும்.தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

Related posts

நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்!

உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள்

தொகுப்பாளர் முதல் பெண் தொழில்முனைவோர் வரை!