இரட்டை டீசல் விலை கொள்கை: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: இரட்டை டீசல் விலைக் கொள்கை குறித்த நிலைப்பாட்டினை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குறைந்த கட்டணத்தில் வசதியாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்வதில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.  இப்படிப்பட்ட இன்றியமையாப் பணியை மேற்கொள்ளும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கெனவே நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மொத்தக் கொள்முதல் டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியிருக்கிறது.இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே சமயத்தில் டீசலை மொத்தமாக கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களான இந்திய ரயில்வே, அனல் மின் நிலையங்கள், இரும்பு ஆலைகள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றிற்கான டீசல் விலை ரூ.97.49 காசு என்றும், சில்லறை விற்பனைக்கும் மொத்த கொள்முதலுக்கும் இடையேயான வித்தியாசம் கிட்டத்தட்ட ரூ.6 என்றும், இந்த விலை உயர்வு காரணமாக, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ஓய்வூதிய பலன்களுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்ற சூழ்நிலையில், இந்த விலை உயர்வு, காத்திருப்புக் காலத்தை மேலும் அதிகரிக்கச் செய்யுமோ என்ற அச்சம் ஊழியர்களிடையே நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, இரட்டை டீசல் விலைக் கொள்கை குறித்த தி.மு.க.வின் நிலைப்பாட்டினை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டி, அவற்றில் பணிபுரியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் அச்சத்தை போக்க வேண்டுமென்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்