இயற்கை சூழலில் விருந்து படைக்கும் தம்பதியினர்!

நன்றி குங்குமம் தோழி சமையல் மேல் விருப்பம், ஆர்வம் இருந்தாதான் அந்த உணவு சுவையாக இருக்கும். குறிப்பாக நாம் சமைத்து மற்றவர்களுக்கு பரிமாறும் போது அவர்கள் ‘நல்லா இருக்கு’ன்னு சொல்லும் அந்த ஒரு வார்த்தைதான் ஈரோட்டை சேர்ந்த கவிதா மற்றும் சிவானந்தம் தம்பதியினருக்கு எனர்ஜி டிரிங்க்ன்னு சொல்லலாம். இவர்களின் ‘தோட்டத்து விருந்து’ உணவகம் மக்களுக்கு அசைவ உணவில் ஒரு விருந்து படைப்பது மட்டுமில்லாமல் அவர்களின் அன்பான உபசரிப்பும் அந்த உணவிற்கு மேலும் சுவையினை அள்ளித் தருகிறது.‘‘என்னுடைய சொந்த ஊர் ஈரோட்டில் உள்ள சேமபாளையம் என்ற கிராமம். எங்களுடையது விவசாய குடும்பம் தான். நான் +2 வரை தான் படிச்சிருக்கேன். அதன் பிறகு குடும்பச் சூழல் காரணமாக நான் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே சமைக்க பிடிக்கும். அதற்கு என் அப்பா தான் காரணம். அவர் வீட்டில் கறி சாப்பாடு எல்லாம் சமைப்பார். அப்போது நானும் அவருடன் சேர்ந்து என்ன செய்கிறார்ன்னு பார்ப்பேன். அப்படித்தான் எனக்கு சமையல் மேல் ஆர்வம் ஏற்பட்டது. வீட்டில் இருக்கும் போது நானும் அவ்வப்போது சமைக்கவும் செய்வேன். இதற்கிடையில் எனக்கு திருமணம் ஆனது. என் மனைவி கவிதா நல்ல படிப்பாளி. அவங்க ஒரு பள்ளியில் ஆசிரியரா ஒன்பது வருஷம் வேலைப் பார்த்து வந்தாங்க. எனக்கு எப்படி சமைக்க பிடிக்குமோ அதேபோல் நல்ல உணவகங்கள் தேடிப் போய் சாப்பிடவும் பிடிக்கும். நானும் என் நண்பர்களும் பல ஓட்டல்கள் சென்று அங்குள்ள உணவினை சுவைத்திருக்கிறோம். அந்த நேரத்தில் தான் என் நண்பர்கள் எல்லாரும், ‘நீ நல்லா சமைக்கிற. உனக்கு சாப்பாடு மேலேயும் பிரியம் இருக்கு. அப்படி இருக்கும் போது உன்னால் நல்ல தரமான உணவினை கொடுக்க முடியும். நீ ஏன் ஒரு உணவகம் ஆரம்பிக்கக் கூடாது’ன்னு கேட்டாங்க. எனக்கும் அது சரின்னு பட்டது. அப்படித்தான் ‘தோட்டத்து விருந்து’ மக்களுக்கு விருந்து படைக்க ஆரம்பிச்சது’’ என்ற சிவானந்தத்தை தொடர்ந்தார் அவரின் மனைவி கவிதா.‘‘உணவகம் ஒன்றை ஆரம்பிக்க போறதா இவர் சொன்ன போது, எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது. வீட்டில் அசைவ உணவு என்றால் இவர்தான் செய்வார். அவ்வளவு சுவையா இருக்கும். எனக்கு சமைக்க தெரிந்தாலும், இவரின் கைப்பக்குவம் வேற மாதிரி இருக்கும். இந்த உணவகம் ஆரம்பிச்சு 13 வருஷமாகுது. முதலில் ரொம்பவே சிம்பிளா தான் ஆரம்பிச்சோம். அதற்கு முன் ஒரு மாசம் என்ன உணவுகளை கொடுக்கலாம் என்று டிரையல் செய்தோம். வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இதை சமைத்து கொடுத்தேன். அவர்கள் நல்லா இருக்குன்னு சொன்ன பிறகு தான் கடையே ஆரம்பிச்சோம். வீட்டில் நான்கு பேருக்கு சமைக்கும் போது நல்லா வரும். அதுவே 100 பேருக்கு சமைக்கணும்னா… சுவை மாறாமல் கொடுக்கணும். கடையை ஆரம்பித்த போது முதலில் சிம்பிளாதான் கொடுத்தோம். சாப்பாடு, நாட்டுக்கோழி போன்லெஸ், மட்டன் சுக்கான்னு தான் முதலில் போட்டோம். அதன் பிறகு நாட்டுக்கோழி பள்ளிப்பாளையம் போட ஆரம்பிச்சோம். அதைத் தொடர்ந்து மட்டன் சுக்கா கொத்து, ஈரல் ஃபிரை, தலைக்கறி, பிச்சிப்போட்ட சிக்கன் என ஒவ்வொரு உணவாக சேர்க்க ஆரம்பித்தோம். சமையல் பொறுத்தவரை ஆரம்பத்தில் அவர் தான் எல்லாம் செய்தார். நான் மேல் வேலையை பார்த்துக் கொள்வேன். சமையலுக்கு தேவையான மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள் எல்லாம் நான் வீட்டிலேயே அரைச்சு கொடுத்திடுவேன். என்னதான் எனக்கு சமைக்க தெரிந்தாலும், அவரின் கைப்பக்குவம் எனக்கு வராது என்பதால், சமையல் வேலை முழுதும் ஆரம்பத்தில் அவர் மட்டுமே பார்த்துக் கொண்டார். அதன் பிறகு படிப்படியாக எனக்கும் சொல்லிக் கொடுத்தார். அதாவது ஒரு கிலோ கறி என்றால் அதற்கு எவ்வளவு மசாலா எல்லாம் எப்போது சேர்க்கணும்ன்னு சொல்லிக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரிக்க எங்க இருவரால் மட்டுமே சமைக்க முடியல. அதனால் சமையலுக்கு என மாஸ்டரை போட்டோம். மேலும் மேல் வேலையை அங்க கிராமத்தில் இருக்கும் ஆச்சிகள் பார்த்துக்குவாங்க. இப்ப நான் மட்டுமில்லை எங்க மாஸ்டர் கூட இவரின் கைப்பக்குவத்திற்கு பழகிட்டாங்க’’ என்றவர் மதியம் மற்றும் இரவு நேர உணவுகளை வழங்கி வருகிறார்களாம்.‘‘முதலில் மதியம் உணவு மட்டும் தான் கொடுத்த வந்தோம். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் கேட்கவே இரவு நேர உணவும் கொடுக்கிறோம். எங்க உணவகத்தின் சிறப்பே மதியம் மீல்ஸ்தான்’’ என்ற சிவானந்தம் தங்கள் உணவகத்தில் படைக்கப்படும் விருந்துகளைப் பற்றி விவரித்தார். ‘‘இப்போது பெரும்பாலானவர்கள் வீட்டை தவிர்த்து வெளியே போய் சாப்பிட விரும்புகிறார்கள். அப்படி விரும்பும் உணவும் அசைவ உணவாத்தான் இருக்கிறது. அதனால் தான் அசைவ உணவில் நான் அதிக கவனம் செலுத்துகிறேன். அதே சமயம் சைவமும் இருக்கும். இங்கு மீல்ஸ் தான் சிறப்பு. எல்லா நாட்களும் மீல்ஸ் இருக்கும். முதலில் சூப்பில் இருந்து ஆரம்பிப்போம். அதன் பிறகு சாப்பாட்டிற்கு சிக்கன், மட்டன் குழம்பு மற்றும் பச்சை புளி ரசம் தருவோம். இதை தவிர இறால், மீன் வறுவல், மூளை வறுவல், ஈரல், தலைக்கறி, மட்டன் கொத்து, சிக்கன் பிச்சிப்போட்டதுன்னு பல வகை சைட் டிஷ்கள் உள்ளது. அதை அவர்கள் தனியாக ஆர்டர் செய்து கொள்ளலாம். புதன் மற்றும் ஞாயிறு மட்டும் மட்டன் மற்றும் நாட்டுக்கோழி பிரியாணி தருகிறோம். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சாம்பார், ஒரு பொரியல், காலிஃபிளவர் ஃபிரை, கோபி மஞ்சூரியன், மஷ்ரூம் மசாலா உண்டு.ஃபிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் தருவதில்லை. அதில் அஜினோமோட்டோ சேர்ப்பதால், அந்த உணவினை நாங்க முற்றிலும் தவிர்த்துவிடுகிறோம். இரவு நேரம் டிஃபன் உணவுகள் தான் என்பதால், இட்லி, தோசை, சப்பாத்தி, புல்கா ரொட்டி, கறி தோசை, சிக்கன் கொத்து தோசை என பல வெரைட்டி உண்டு. இதற்கு தேங்காய் சட்னி, சிக்கன் மற்றும் மட்டன் கிரேவி தருகிறோம். எங்க கடையில் பரோட்டா கிடையவே கிடையாது. பரோட்டா மட்டுமில்லை எந்த வகையான மைதா சார்ந்த உணவுகளும் கிடையாது. மதிய உணவு பகல் 12 மணி முதல் 4 மணி வரை இருக்கும். இரவு நேர உணவு ஏழு மணிக்கு துவங்கும். காலை 5.30 மணிக்கு கடைக்கு தேவையான எல்லா உணவுகளும் நான் வாங்கிக் கொடுத்திடுவேன். ஒன்பது மணிக்கு சமையல் வேலை ஆரம்பிச்சா மதியம் 12 மணிக்கு சாப்பாடு தயாராயிடும். அதே போல் குறிப்பிட்ட அளவு தான் உணவுகளை தயாரிப்போம். அதிக அளவு தயாரிச்சு அதை வீணாக்குவதற்கு குறைந்த அளவு தயாரிப்பது சரின்னு ேதாணுச்சு. சில சமயம் அந்த உணவு தீர்ந்து விட்டால் மறுபடியும் சமைக்க மாட்டோம். மேலும் ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் வருவாங்கன்னு ஓரளவிற்கு கணித்து வைத்திருப்பதால், பெரிய அளவில் உணவுகள் வீணாவதில்லை. எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது… எந்த உணவும் நாம் மறுநாள் வரை வைத்திருக்க மாட்டோம். ஒவ்வொரு நாளும் புதிதாகத்தான் சமைக்கிறோம்.  தீர்ந்துவிட்டதுன்னு சொல்லிடுவோம்’’ என்றவர் உணவகம் திறந்த சில காலங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுள்ளார்.‘‘உணவுப் பொறுத்தவரை அந்த சுவை பிடிச்சிருந்தால் தான் மக்கள் ஆதரவு தருவாங்க. முதலில் நான் ஆரம்பித்த போது இப்படி ஒரு கடை இருக்குன்னு பலருக்கு தெரியாது. வாய்வார்த்தையாக பலர் சொல்லித்தான் வர ஆரம்பிச்சாங்க. இப்ப ஈரோடு வழியாக செல்பவர்கள் எல்லாரும் இங்க தான் சாப்பிட வராங்க. சிலர் எனக்கு போன் செய்து பத்து பேர் வருவதாகவும்… சாப்பாடு எடுத்து வைக்க சொல்வாங்க. வீடு, கடை எல்லாம் பக்கத்தில் இருப்பதால், காலை கடைக்கு நானும் என் மனைவியும் வந்தா இரவு 11.30 மணிக்கு தான் திரும்புவோம்.காரணம் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் உபசரிப்பு மிகவும் அவசியம்ன்னு நாங்க நம்புறோம். சில சமயம் கூட்டமா இருக்கும். உணவு சாப்பிட காத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் நாம செய்ற உபசரிப்பு தான் அவர்களை களைப்பாக்காமல் காத்திருந்து சாப்பிட வைக்கும். அதே சமயம் காத்திருக்கும் போது பசியின் உணர்வு அதிகமா இருக்கும். அதனால் அவங்க சாப்பிட உட்கார்ந்தவுடன் சாப்பாட்டினை சூடாக பரிமாறிடுவோம். இந்த உபசரிப்பு அவங்க மனசு மட்டுமில்ல வயிறையும் நிரப்பிடும்’’ என்றனர் கவிதா மற்றும் சிவானந்தம் தம்பதியினர். செய்தி: ஷம்ரிதிபடங்கள்: ராஜா

Related posts

சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்!

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!