Wednesday, September 18, 2024
Home » இயற்கையோடு திரும்புவோம் பழமைக்கு…

இயற்கையோடு திரும்புவோம் பழமைக்கு…

by kannappan

நன்றி குங்குமம் தோழி Ecofemme-ன் பிராண்ட் அம்பாசிடர், HappyMom-ன் நிறுவனர் & இயக்குனர், ஐ.டி. நிறுவனங்களில் பணிச்சூழலியல் ஆலோசகர் என பன்முகம் கொண்ட ஜெயஸ்ரீ  ஜெயகிருஷ்ணனிடம் இத்தனைக்கும் உங்களுக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கிறது என்ற ஆச்சர்யக் கேள்வியை முன் வைத்தோம். சோர்வில்லாத ஃப்ரஷ் புன்னகையோடு தான் செய்துகொண்டிருக்கும் வேலைகளை விவரிக்கிறார்…“சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பிஸியோதெரபி மருத்துவம் பயின்று, பின் பெங்களூரில் பெண்களுக்கான ஃபிட்னஸ் புரொக்ராம் மேனேஜராக என்னுடைய முதல் வேலையைத் தொடங்கினேன். பின்னர் அதே பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் Repetitive Strian  Injuries-க்கான பணிச்சூழலியல் ஆலோசகராக பணியாற்றிய போது, பெண்கள் கர்ப்பகாலத்திலும், குழந்தை பெற்ற பின்பும் படும் துன்பங்களைப் பார்த்து, கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகால பயிற்சிகளை சொல்லித்தரவேண்டும். அறுவை சிகிச்சையில்லா சுகப்பிரசவ கனவை நனவாக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. தற்போது HappyMom நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் பெண்களுக்கு மருந்தில்லா சுகப்பிரசவத்திற்கான ஆலோசனைகளையும், பாலூட்டும் தாய்மார்களின் சந்தேகங்களையும் தீர்க்கும் குழந்தைபிறப்பு கல்வியாளராகவும் (Childbirth  Educator)  தாய்ப்பால் ஆலோசகராகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அதோடு, ‘Ecofemme’ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறேன். முதலில் Ecofemme-ஐப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். பாண்டிச்சேரியின் அழகிய ஆரோவில்லில் உள்ள குக்கிராமமான கோட்டக்கரையில் அமைந்திருக்கும் ‘Eco Femme’  உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு, சுற்றுச்சூழல் சார்ந்த, ஆரோக்கியமான மற்றும் மரியாதைக்குரிய மாதவிடாய் நடைமுறைகளை  எடுத்துச் செல்லும் ஒரு லாபநோக்கமற்ற முயற்சி. ‘Ecofemme’ல் அமையப்பெற்றிருக்கும் துணி நாப்கின் தயாரிக்கும் யூனிட்டில், கோட்டக்கரை கிராமத்தில் வசிக்கும் வசதியற்ற பெண்களே இயற்கை முறையில் தயாரிக்கிறார்கள். இந்திய கிராமங்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள வறுமையில் வாடும் பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் பற்றிய கல்வியை எடுத்துச் செல்லும் ஒரு லாபநோக்கமற்ற முயற்சியில் இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பல மருத்துவர்கள் பிராண்ட் அம்பாசிடர்களாகவும், சமூக ஆர்வலர்களும் இலவச சேவையில் இணைந்துள்ளனர்.  Ecofemme-ன் சேவைகள்…* மாதவிடாய் சுகாதாரக்கல்வி மற்றும் துவைத்து பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை ‘Pad for Pad’ திட்டத்தில் இந்தியாவில் வறுமையிலிருக்கும் பருவம் வந்த பெண்களுக்கு இலவசமாக கொடுப்பது..*  ‘Pad for Sisters’-திட்டத்தின் மூலம் ஓரளவு வாங்கும் திறன் உள்ள பெண்களுக்கு மானிய விலையில் இந்த துணி பேடுகளை கொடுப்பது…* பயிற்சியாளர்கள் மூலம் ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த மாதவிடாய் நடைமுறைகளை தங்கள் சமுதாயத்தில் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த பயிற்சிகளை அளிப்பது…* நிலையான மாதவிடாய் நடைமுறைகளைப்பற்றி உலகெங்கிலும் உள்ள மகளிர்நல அமைப்புகளுக்கு, ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குதல்…* மாதவிடாய் தூய்மைக்கான மேம்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வது…* சுற்றுப்புறத்திற்கு கேடுவிளைவிக்காத மாதவிடாய் நடைமுறைகளை பயன்படுத்தும் வகையில் கட்டுரைகள், ஆவணப்படம் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவது போன்ற இலவச சேவைப்பணிகளை Ecofemme  தன் தொண்டர்கள் மூலம் செய்து வருகிறது.எந்த வகையில் சிறந்தது?இந்தியாவில் நிறைய ஆர்கானிக் மென்சுரல் பேட் கம்பெனிகள் வந்துவிட்டது. ஆனால் Ecofemme வித்தியாசமானது. உலகம் முழுதும் உள்ள வறுமையில் வாடும் பெண்களுக்கு இலவசமாக துணி பேடுகளை வழங்கும் ஒரு லாபநோக்கமற்ற நிறுவனம் (NGO) என்பதால் அதற்காக நான் என் குரலை கொடுக்கிறேன். கிராமத்தில் வாழும் அடித்தட்டு பெண்களை வைத்து இந்த கிளாத் பேட், காடா துணியில் தயாரிக்கிறார்கள். இதில் எந்தவிதமான ரசாயனங்களோ, கலர் சாயங்களோ அல்லது நறுமணமூட்டிகளோ சேர்ப்பதில்லை.அரசுப்பள்ளிகள், அரசுக்கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாகவும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மானிய விலையிலும் கொடுக்கிறார்கள்.மற்ற சானிடரி நாப்கின்களில் சிலிகான் லேயர் மற்றும் டியோடிரன்ட் உபயோகிக்கிறார்கள். இதனால் சிறுநீரகத்தொற்று உண்டாகி எரிச்சல், அரிப்பு  வருகிறது. இவற்றை பல வருடங்களாக உபயோகிக்கும் பெண்களுக்கு பிறப்புறுப்பின் வழியாக ரசாயனங்கள் கர்ப்பப்பை வாய்க்குள் செல்ல வாய்ப்புள்ளது. அதன்காரணமாக பிறப்பு குறைபாடுகள், மலட்டுத்தன்மை, பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. சானிடரி நாப்கின் பயன்படுத்தும் வழக்கம் வந்தபிறகுதான், சமீபகாலமாக பெண்களை கர்ப்பப்பை வாய் பரிசோதனையை (Pop smear test) 3 வருடங்களுக்கு ஒருமுறை செய்யச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். முன்பெல்லாம் நம் நாட்டுப் பெண்கள்  இந்த சோதனையெல்லாம் செய்ததே இல்லை. அவர்களுக்கு புற்றுநோயும் வந்ததில்லை. மறுபடியும் துணியா என்று நாகரீகப் பெண்கள் கேட்கலாம். பழைய காலங்களில் துணி உபயோகத்தில் இருந்தபோது பெண்களுக்கு கர்ப்பப்பை  புற்றுநோயோ, மலட்டுத்தன்மை, PCOD, நீர்க்கட்டிகள் போன்ற  பிரச்னைகள் வந்ததில்லை. இப்போது குழந்தையின்மையை தீர்க்கும் மருத்துவ  மனைகள் (Infertility Centre) அதிகரித்து வருவதைப்பார்த்து, பல ஆய்வுகள் மேற்கொண்டதில், இந்த சானிடரி நாப்கின்கள் முக்கிய காரணியாக  இருப்பதை உணர முடிந்தது. பயன்படுத்த ஏதுவானதா? என்ற கேள்வி கேட்பார்கள். சென்றவாரம் கூட பெண்கள் கல்லூரி ஒன்றில் இதைப்பற்றி பேசினேன்.  எல்லா பெண்களுக்கும் துணி பேட் உபயோகிப்பதை தயக்கமாக உணர்ந்தார்கள். ஆரம்பத்தில் எதுவுமே கம்ஃபர்டாக இருக்காது. முதலில் ரத்தப்போக்கு குறைவாக இருக்கும் 5வது நாளில் உபயோகிக்கத் தொடங்குங்கள்; அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முதல் நாள்வரை உபயோகிக்க ஆரம்பித்தால், பிளாஸ்டிக் கலந்த பேடுக்கும், துணி பேடுக்குமான வித்தியாசத்தை உணர ஆரம்பிப்பீர்கள். சானிடரி நாப்கினின் சொர சொரப்பினால் தொடை இடுக்குகளில் உராய்வு ஏற்பட்டு புண் வரும். வேலைக்கோ அல்லது வெளியில் செல்லும்போது சானிடரி நாப்கின்களின் உபயோகத்தையும், வீட்டிற்கு வந்ததும் துணி நாப்கின் உபயோகிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். சாஃப்ட்டான துணி நாப்கின் நெகிழ்வாக இருப்பதால் மிருதுவாக, கம்ஃபர்ட்டாக உணர்வீர்கள். பிறகு துணி பேடுக்கே மாறிவிடுவீர்கள். துணி நாப்கினை துவைத்து, வெயிலில் காயவைத்து எடுப்பதால் கிருமித்தொற்றும் ஏற்படாது. ஒரு செட் வாங்கி வைத்துக் கொண்டால் 10 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லை. ஒருமுறை பயன்படுத்தி எரியும் செயற்கை பாலிதீன் நாப்கின்களினால்  சுற்றுச்சூழல் பாதிப்பு, அதை கையால் எடுத்து அப்புறப்படுத்தும் துப்புரவு பணியாளர்களுக்கும், மற்ற விலங்குகளுக்கும் நோய் பரவும் அபாயமும்  இருக்கிறது. மென்சுரல் கப், டேம்பூனெல்லாம் வந்துவிட்டதே, அதெல்லாம் பயனற்றவையா?அப்படியெல்லாம் இல்லை. அவை User Friendly -ஆக இருப்பதில்லை. மென்சுரல் கப் உபயோகம் பலருக்கும் கம்ஃபர்ட்டாக இல்லை. நிறைய சின்ன பெண்களுக்கு அதை வஜைனாவிற்குள் வைக்கத் தெரியவில்லை. அதை வெளியில் எடுத்து ஊற்றுவதற்கு சில பெண்கள் அருவெறுப்படைகிறார்கள். ரேயான் இழைகளால் செய்யப்பட்ட டாம்பூனிலும்  நச்சுக்கள் இருக்கக்கூடும் என்பதால், இதை தொடர்ந்து உபயோகிப்பதால் பிறப்புறுப்பில் தொற்றுக்கள் ஏற்பட சாத்தியமுள்ளது. இதனால் நாம் முன்பு உபயோகித்த காட்டன் பேடுகளே உபயோகிக்க எளிதானதும், ஆரோக்கியமானதுமாக நான் சொல்வேன்.‘Happy Mom’ நிறுவனத்தின் மூலம் நீங்கள் செய்யும் பணிகள்…நிறைய பெண்களுக்கு ஏன் கருத்தரிப்பு பிரச்னை வருகிறது என்று பார்த்தபோது, நீண்ட நாள் செயற்கை சானிடரி நாப்கின்கள் உபயோகத்தால் பெண்  மலட்டுத்தன்மை வருவதை கண்டறிந்தோம். 5ல் 2 பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அதன் பயனாக உருவானதே காட்டன் பேட். மேலும், இப்போதுள்ள பெரும்பாலான பெண்கள் சிசேரியன் மூலம்தான் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் எந்த மருந்தும் இல்லாமல், அறுவைசிகிச்சையில்லாமல் இயற்கையான முறையில் பிரசவம் ஏற்படும் வழிமுறைகளை சொல்லித் தருகிறோம். உடற்பயிற்சிகளை செய்தும் சில  பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதில் சிரமம் இருந்தது. அதற்கான தீர்வை யோசித்தபோது, உணவு பெரும் பங்கு வகிப்பதை உணர்ந்தோம். அதனால் இயற்கை உணவு முறைக்கு மாறச் செய்தோம். அதில் நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்தது. தற்போது பெண்கள் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி குனிந்து நிமிர்ந்து செய்யும் தரை வேலைகளை  செய்வதே இல்லை. பாத்திரம் கழுவுவது, சமைப்பது எல்லாம் நின்றுகொண்டேதான். எங்களிடம் வரும் பெண்களுக்கு உடற்பயிற்சி  சொல்லித்தருவதோடு, வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் தரை வேலைகளை செய்யச் சொல்லி பழக்கினோம்.அதனால் இடுப்பு நன்கு விரிவடைந்து சுகப்பிரசவத்திற்கு வழிவகுப்பதை நன்றாகவே பெண்கள் உணர்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் பாருங்கள் மீண்டும் சுகப்பிரசவம் என்ற இனிய செய்தியினை கேட்கத் தொடங்குவோம். பிரசவித்த பெண்களுக்கும் தாய்ப்பாலூட்டுவதற்கான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் கொடுக்கிறோம்.  நிறைய பெண்களுக்கு பால் போதவில்லை, குழந்தை பால் குடிக்கவில்லை என பாலூட்டுவதில் சந்தேகங்கள் வருகிறது. அதற்காக ஒரு சப்போர்ட்டிங் குரூப் வைத்திருக்கிறோம்.அதில் உள்ள உறுப்பினர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அதுதவிர, வாட்ஸ்அப்குரூப் ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களின் சந்தேகங்களை  தீர்க்கிறோம். குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எவ்வளவு நேரம் பால்குடிக்க வேண்டும், எதனால் குழந்தை அழுகிறது, குழந்தையை குளிப்பாட்டுவது, தூங்கவைப்பது, என்ன சாப்பிட வேண்டும் என குழந்தை வளர்ப்பு பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம். வரும் ஆகஸ்ட் மாதம் Breast feeding வாரத்தில் மேலும் இந்த முயற்சியை தீவிரமாக செயல்படுத்த இருக்கிறோம். ‘கத்தியில்லா பிரசவம், நோயில்லா குழந்தை’ இதுவே எங்கள் ஸ்லோகன்” என்கிறார் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்.– மகாலட்சுமி

You may also like

Leave a Comment

eleven + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi