இபிஎஸ், ஓபிஎஸ் கடித விவகாரம்: நியாயமான முடிவு எடுக்கப்படும்.! சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: வரும் 17ம்தேதி சட்டப்பேரவை கூடும் நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் கடித விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் பிரிந்து, தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இபிஎஸ், அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி, ஓபிஎஸ்சை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். மேலும் ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருக்கு அளித்துள்ளார். அதே நேரத்தில் ஓபிஎஸ், தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருகிறார்.இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை வரும் 17ம் தேதி கூடும் நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான தன்னை கேட்டுத்தான் முடிவுகள் எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் சட்டப்பேரவையில் கடிதம் அளித்துள்ளார். அதேபோன்று இபிஎஸ், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும், சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் கடிதம் அளித்துள்ளார்.இந்நிலையில் நெல்லை மாவட்டம், களக்காட்டில் ரூ.6.25 கோடி மதிப்பில் வாழை ஏலம் மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார். அப்போது, இபிஎஸ், ஓபிஎஸ் அளித்துள்ள கடிதங்கள் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அப்பாவு, ‘அவர்கள் கடிதத்தை இன்னும் படித்து பார்க்கவில்லை. சென்னை சென்ற பிறகு படித்து பார்த்து நியாயமான முடிவு எடுக்கப்படும்’ என்றார். சட்டசபை கூடுவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு, அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை

திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.