இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாவட்டத்தில் 25,546 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

விருதுநகர், ஏப்.6: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் ஏப்.6 (இன்று) துவங்கி ஏப்.20 வரை நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 116 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 358 பள்ளிகளை சேர்ந்த 25,546 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன. இன்று தமிழ், ஏப்.10ல் ஆங்கிலம், ஏப்.13ல் கணிதம், ஏப்.15ல் விருப்ப மொழி பாடம், ஏப்.17ல் அறிவியில், ஏப்.20ல் சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெற உள்ளன. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 169 பள்ளிகளுக்கு 51 தேர்வு மையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான மையங்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 189 பள்ளிகளுக்கு 61 தேர்வு மையங்களும் 2 தனித்தேர்வர்களுக்கான மையங்களும் என 116 தேர்வு மையங்களில் இன்று பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் 358 பள்ளிகளில் பயிலும் 12,755 மாணவர்கள், 12,791 மாணவிகள் என 25,546 பேர் இத்தேர்வினை எழுத உள்ளனர். 230 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 120 முதன்மை கண்காணிப்பாளர்கள், 120 துறை அலுவலர்கள், 1,536 அறை கண்காணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுவதற்கு 163 ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் 7 அமைக்கப்பட்டு 27 வழித்தட அலுவலர்கள் மூலம் 27 ஆயுதம் ஏந்திய போலீசாருடன் அனைத்து தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள் அனுப்படுகிறது. தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் 5 பறக்கும் படை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் 116 மையங்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களை மாணவர்கள் நலன் கருதி தேர்வு மையங்களுக்கு சென்று உதவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் உள்ள வழித்தடங்களில் செல்லும் அரசு பேருந்துகளில் மாணவர்களை ஏற்றி, இறக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி தெரிவித்தார்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்