இன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.50கோடி நிதி ஒதுக்க முடிவு: வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

சென்னை: இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தில் முதல் கட்டமாக ரூ.50 கோடி நிதி  ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவச் சேவைகளை செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில், சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் ‘நம்மைக் காக்கும் 48’ என்ற கட்டணமில்லா மருத்துவ உதவி திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.இந்தநிலையில், இத்திட்டம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அரசாணை: முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள்/இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என அனைவருக்கும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துக்களுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். உத்தரவாத அடிப்படையில் செலவினங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ.50 கோடி நிதி இத்திட்டத்திற்கென ஒதுக்கப்படும். நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். சேத குறைப்பு அடிப்படையில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் வகையில் ஆவன செய்யப்பட்டுள்ளது. 12 மாத காலத்திற்கு இத்திட்டம் உத்தரவாத முறையில் செயல்படுத்தப்பட்டு அதன்பிறகு வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் இத்திட்டத்தினை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிப்பட்ட சிகிச்சை முறைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம். 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது மேலும் தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால் பின்வரும் மூன்று வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளலாம். அதன்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளியாக இருந்தால் நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால் நோயாளியை நிலைப்படுத்தி அம்மருத்துவ மனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால் நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால் நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ, தனியார் காப்பீட்டிலோ அல்லது பணம் செலுத்தியோ சிகிச்சையை பெற விரும்பினால் நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனிநபரே செலுத்தி சிகிச்சையை தொடரலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவகாப்பீட்டு அட்டை உடையவர்கள்/இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என அனைவருக்கும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துக்களுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்