Friday, July 5, 2024
Home » இன்னுயிர் காப்போம் திட்டத்தால் சாலை உயிரிழப்புகள் குறைந்துள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு

இன்னுயிர் காப்போம் திட்டத்தால் சாலை உயிரிழப்புகள் குறைந்துள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு

by kannappan

கும்மிடிப்பூண்டி: இன்னுயிர் காப்போம் திட்டத்தால்  சாலை உயிரிழப்புகள் குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 15 வது வார்டு மேட்டு காலனி பகுதியில் எச். எம். சி தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. முன்னதாக எச்.எம்.சி. தனியார் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பிரவீன் மல்லிகார்ஜுன்,டாக்டர் கௌதமி பிரவீன்  ஆகியோர் வரவேற்றார். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். எச்.எம்.சி. மருத்துவமனையின் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் சி. கே. மல்லிகார்ஜுன், டாக்டர் ராணி மல்லிகார்ஜுன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆவடி நாசர், ஆகியோர்  எச். எம். சி. மருத்துவமனையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்பெல்லாம் சாலை விபத்துகள் நடந்தால் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயக்கம் காட்டினர்.தற்போது தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிப்பவருக்கு தமிழக அரசு ஊக்கத் தொகையாக ₹5000 வழங்கி வருகிறது.  இன்னுயிர் திட்டத்தில் இதுவரையில் 91086பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.  அரசின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து ₹ 82 கோடி 37லட்ச ரூபாய் சிகிச்சைக்காக செலவிடப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தால் தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 80சதவீதமாக குறைந்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் செயல்பாடுகளை வியந்து பாராட்டியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை பிரிவு அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மருத்துவமனைகள் ஏற்படுத்துவது குறித்து வழிமுறைகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ஒன்றியத்திற்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் என 381 நடமாடும் வாகனங்கள் மூலம் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் தேவை இல்லை. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகள் பராமரிப்பு மையம்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தனியார் நிறுவன பங்களிப்பில் அமைக்கப்பட்ட ₹ 15 லட்சம் மதிப்பிலான குழந்தைகள் பராமரிப்பு மையம்,  தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் மூலம் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்,  ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜனகராஜகுப்பம், அய்யனேரி ஆகிய கிராமங்களில் தலா ₹25 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ப.செந்தில் குமார், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.தமிழகத்தில் கானொலி காட்சி மூலம் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கி வைத்ததில்  அதிகமான ஆக்சிஜன் சேமிப்பு வசதி இருக்கிற ஒரே கல்லூரியும் இது தான்.  திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள வசதிகள் போன்று வேறு எந்த கல்லூரியிலும் இல்லை. மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் என 640 பேர் உள்ள நிலையில் அவர்களது குழந்தைகளை பராமரிக்க ஏதுவாக தனியார் அமைப்பு மூலம் பராமரிப்பு மையம் ஏற்படுத்தியது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமாமகேஸ்வரி,  நலப் பணிகள் இணை இயக்குனர் இளங்கோ, சுகாதார துறை துணை இயக்குநர்கள் கு.ரா.ஜவஹர்லால், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi