இன்னிங்ஸ், 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

லீட்ஸ்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஹெடிங்லி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா வெறும் 78 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 432 ரன் குவித்து ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து, 354 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 8 ரன், ரோகித் ஷர்மா 59 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். புஜாரா 91 ரன், கேப்டன் கோஹ்லி 45 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஜாரா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் (91 ரன், 189 பந்து, 15 பவுண்டரி) ராபின்சன் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அடுத்து கோஹ்லியுடன் ரகானே இணைந்தார். அரை சதத்தை நிறைவு செய்த கோஹ்லி, 55 ரன் எடுத்து (125 பந்து, 8 பவுண்டரி) ராபின்சன் பந்துவீச்சில் ரூட் வசம் பிடிபட, இந்திய இன்னிங்ஸ் ஆட்டம் கண்டது. ரகானே 10 ரன் எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் பெவிலியன் திரும்ப, ரிஷப் பன்ட் 1 ரன் மட்டுமே எடுத்து ராபின்சனின் துல்லியமான பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷமி 6 ரன், இஷாந்த் 2 ரன்னில் அணிவகுத்து ஏமாற்றமளித்தனர். ஜடேஜா 30 ரன் (25 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஓவர்ட்டன் பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டார். சிராஜ் டக் அவுட்டாகி வெளியேற, இந்தியா 2வது இன்னிங்சில் 278 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 63 ரன்னுக்கு 8 விக்கெட்டை பறிகொடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இங்கிலாந்து பந்துவீச்சில் ராபின்சன் 5, ஓவர்ட்டன் 3, ஆண்டர்சன், மொயீன் அலி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 4வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் செப். 2ம் தேதி தொடங்குகிறது….

Related posts

இன்றைய நாள் எனக்கானது: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி

விம்பிள்டன் டென்னிஸ் நவரோ கால்இறுதிக்கு தகுதி: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா பதிலடி; அடுத்த 3 போட்டியிலும் வெற்றியை தொடர போராடுவோம்: கேப்டன் சுப்மன் கில் பேட்டி