இன்ஜினியர் வீட்டில் 15 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை

 

ஜெயங்கொண்டம்,ஆக.24: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு வெள்ளாழத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் நெய்வேலி என்எல்சியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. நேற்று முன்தினம் இரவு இருவரும் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்னவளையம் கிராமத்தில் உள்ள ரேணுகாவின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
நேற்று அதிகாலை வேலைக்கு மணிகண்டன் சென்றுவிட்டார்.

ரேணுகா தேவி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரேணுகாதேவி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். வீட்டில் அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டும் பீரோ இருந்த அறையின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ரேணுகாதேவி புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது தெரியவந்தது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு மர்ம கொள்ளையர்களின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்