Sunday, October 6, 2024
Home » இந்த வார ஆன்மீக விசேஷங்கள்

இந்த வார ஆன்மீக விசேஷங்கள்

by kannappan

23.4.2022 – சனிக்கிழமை – சனாதனாஷ்டமி ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கும் சிவபெருமானுக்கும் உகந்த விசேஷமான நாள் ஆகும். அன்றைய தினம் காலபைரவரை வழிபட்டால் தைரியம், தன்னம்பிக்கை முதலிய நற் குணங்கள் விருத்தியடையும். இது கலியுகம் அல்லவா. கலியுகத்துக்கு ‘‘கால பைரவர்” என்றொரு சொல் உண்டு. காலபைரவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், வீட்டில் உள்ள சுபத் தடைகள் நீங்கும். நம் புலன்களுக்கு புலப்படாத சில தீய சக்திகளின் வீரியம் குறைந்து ஒழியும். இந்த அஷ்டமி, சனிக்கிழமை அன்று வருவதாலும், சனிக்கிழமை உரிய சனிபகவானின் குருவாக காலபைரவர் இருப்பதாலும் மிகவும் சிறப்பானது. ஜாதகத்தில் சனியினால் ஏற்படும் அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி முதலிய தொல்லைகள் குறையும். பொது வாகவே ஜாதக தோஷங்கள் கட்டுப்படும். ஜாதகத்தினால் ஏற்படுகின்ற தடைகள் நீங்கி, விரைவில் சுபகாரியங்களும் மங்களங்களும் கூடும். அஷ்டமி நாளில் காலையில் சிவபெருமானையும், மாலையில் அந்தி சாயும் நேரத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படும்.குறிப்பாக, சித்திரை மாதம் வருகின்ற இந்த அஷ்டமியில் கால பைரவரை வழிபட நவகிரக தோஷங்கள் விலகும். வீட்டில் செல்வம் இல்லாத நிலை, அதாவது தரித்திர நிலை நீங்கி சுபிட்சம் பிறக்கும்.24.4.2022 – ஞாயிற்றுக்கிழமை – சிரவண விரதம்ஒவ்வொரு மாதமும் வருகின்ற நட்சத்திரங்களிலேயே திருவோண நட்சத்திரத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அது மகா விஷ்ணுவின் நட்சத்திரம். ‘‘திருவோணத்தான் உலகாளும் என்பார்களே” என்று உலகத்தை அளந்த வாமனன் (மஹாவிஷ்ணு) அவதாரம் செய்த நட்சத்திரம். திருமலையப்பன், ஒப்பிலியப்பன் அவதார நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தில் விரதமிருந்து விஷ்ணு பகவானை வழி பட்டால், அளவற்ற பலன்களும் செல்வங்களும் ஆயுளும் கிடைக்கும். அனேகமாக எல்லா திருமால் ஆலயங்களிலும் சிரவண நட்சத்திரம் என்று சொல்லப்படும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷமான ஆராதனைகள் நடைபெறும். பல கோயில்களில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். அன்றைய தினம் வீட்டில் விரதம் இருந்து பெருமாளை வணங்கலாம். அல்லது மாலை பெருமாள் திருக்கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி பெருமாளை வணங்குவதன் மூலமாக எல்லையற்ற நற்பலனையும் மகாவிஷ்ணுவின் அருளையும் பெறலாம்.சிரவண விரதம் மேற்கொள்பவர்களின் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படாது! வீட்டில் அமைதி ஏற்படும்.24.4.2022 – ஞாயிற்றுக்கிழமை – நடராஜர் அபிஷேகம்பெருமாளுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம். சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. ஆனால், சித்திரை மாதத்திலே திருவோண நட்சத்திரத்தில் சிவபெருமானுக்கு ஒரு விசேஷம் உண்டு. அதுதான் நடராஜர் அபிஷேகம். ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள். பொதுவாக, கோயில்களில் தினமும் ஆறுகால பூஜைநடைபெறும். அதாவது, அதிகாலை 4:00 மணிக்கு திருவனந்தல், காலை 6:00 மணிக்கு காலசந்தி, பகல் 12:00 மணிக்கு உச்சிகாலம், மாலை 4:00 மணிக்கு சாயரட்சை, இரவு 7:00 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை என்று ஆறு கால பூஜை நடைபெறும். தேவர்களும் இதேபோல, ஆறுகால பூஜையை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு உண்டு. தை முதல் ஆனி வரை (காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை) உத்ராயணம். ஆடி முதல் மார்கழி வரை (மாலை 6:00 மணி முதல் அதிகாலை 6:00 மணி வரை) தட்சிணாயணம். அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப் பொழுது, மாசி மாதம் ஆகும். மதியம், சித்திரை (திருவோணம்) அன்று. மாலைப்பொழுது, ஆனி ஆகும். இரவு நேரம், ஆவணி மற்றும் அர்த்தஜாமம், புரட்டாசி என்பது போன்றதாகும். அதன் பொருட்டே நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்.இந்த ஆண்டு திருவோணம் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரத்தில் வருகிறது. பல சிவாலயங்களில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தை கண்குளிர தரிசிப்பவர்களுக்கு அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கும்.26.4.2022 – செவ்வாய்க்கிழமை – பாப விமோசன ஏகாதசிஏகாதசி திதி ஒரு வருடத்தில் சாதாரணமாக 24 வரும். சில வருடங்களில் 25 வரும். ஒவ்வொரு ஏகாதசி திதிக்கும் ஒவ்வொரு சிறப்பும் பலனும் உண்டு. ஏகாதசி விரதம் நமது முற்பிறவியில் செய்த பாவத்தையும் போக்கும் சக்தி கொண்டது. சிவபெருமானே அன்னை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.  சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு “பாப விமோசன ஏகாதசி” என்று பெயர். நாம் தெரியாமல் செய்து விடும் சில பாவங்களால் ஏற்படும் துன்பத்தை நீக்கிக் கொள்ளும் பிராயச்சித்தமாக பாபவிமோசன ஏகாதசி விளங்குகின்றது. ஸ்யவன ரிஷி என்றொரு ரிஷியின் புதல்வன் மேதாவி முனிவர். அவர் இறைவனுடைய திருவருளை வேண்டி மிக கடுமையான தவம் மேற்கொண்டிருந்தார். அவர் தவம் மேற்கொண்ட அழகான காட்டிற்கு வந்த ஒரு தேவலோகப் பெண் இவர் மீது ஆசைப்பட்டாள். மேதாவி முனிவரின் கவனத்தைக் கவர, அவர் தவம் செய்யும் இடத்துக்கு பக்கத்திலேயே ஒரு சின்ன குடிசையை அமைத்து கொண்டு வீணையும் கையுமாக சதா பாட்டு  பாடிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் மேதாவி முனிவர் தவம் கலைந்து இவளுடைய மதுரமான பாட்டைக் கேட்டு மயங்கினார். தவம் கலைந்தது, காமமும் மோகமும் கண் விழித்தது. அதற்குப் பிறகு 57 ஆண்டுகள் இவர்கள் இருவரும் அங்கேயே வாழ்க்கை நடத்தினர். திடீரென்று மேதாவி முனிவருக்கு விழிப்பு நிலை வந்தது. தன்னுடைய தவம் குலைந்ததற்கு பிராயச்சித்தமாக அதே ஏகாதசியை அனுஷ்டிக்க முடிவு செய்தார். ஏகாதசி விரதத்தால் முனிவருக்கு பழைய தவ வலிமை கிடைத்தது. ஏகாதசி அன்று, காலையில் விரதமிருந்து, பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசியால் அர்ச்சனை செய்து, மறுநாள் காலை, சூரிய உதயத்திற்கு முன்னால், துவாதசி பாரணை செய்து, விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும். சுபிட்சமான நல்வாழ்க்கை கிடைக்கும்.28.4.2022 – வியாழக்கிழமை – மத்ஸிய ஜெயந்திஉலக மக்களை காப்பதற்காக பகவான் விஷ்ணு அவதாரங்களை எடுத்தார். அதில், முதல் அவதாரம் மச்சாவதாரம். இந்த அவதாரம் காரணமாக இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. காப்பாற்று வதற்காக எடுக்கப்பட்ட அவதாரம் மச்சாவதாரம். இந்த அவதாரங்களுக்கும், உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகப் பெரியவர்கள் கூறுவார்கள். முதல் முதலில் உயிர்கள் நீர்வாழ்வனவாகவே தோன்றியது. அதனால், அவதாரங்களிலும் முதல் அவதாரமாக மச்சாவதாரத்தை பெருமாள் எடுத்தார்.2) இதற்கு இன்னொரு கதையும் உண்டு. தர்மம் தவறாத, வேதம் கற்ற, அரசரிஷி சத்தியவிரதன் என்னும் மன்னன் தினமும் நீராடி, நீர் நிலைகளில் தன்னுடைய காலை வணக்கத்தை செய்வது வழக்கம். அப்பொழுது அவருடைய கையில் ஒரு மீன் வந்தது. அதை தண்ணீரில் விடுவதற்காக முயன்ற பொழுது, அந்த மீன் தன்னைக் காக்குமாறு சொல்ல, அதை அவர் தன்னுடைய கமண்டலத்தில் விட்டார். ஒவ்வொரு நாளும் அந்த மீன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. கடைசியில் ஒரு ஏரியில் விடப்பட்டது. ஆனால், அந்த ஏரியை விட பெரிதாக மீன் வளர்ந்தது. பிறகு அதனை சத்தியவிரதன் கடலில் கொண்டு போய்ச் சேர்த்தார். அப்பொழுது அந்த மீன் பேசியது. ‘‘இன்னும் 7 நாள்களில் இந்த உலகம் பிரளயத்தில் மூழ்கி விடும். அப்பொழுது நீ ஒரு பெரிய ஓடத்தில் ஒவ்வொரு உயிருக்கும் தேவையான விதைகளைச் சேகரித்துக்கொள். அந்த ஓடத்தில் ஏறி தயாராக இரு. உன்னுடன் சப்தரிஷிகளும் அந்த ஓடத்தில் ஏறிக்கொள்வார்கள். அந்த ஓடத்தை என்னுடைய கொம்பிலே கட்டி விட்டால் பிரளய காலம் முடிகிற வரை உங்களை நான் காப்பாற்றுவேன்” என்று சொல்ல அப்படியே சத்தியவிரதன் செய்தார். எனவே, உலகை பிரளய அழிவிலிருந்து காப்பதற்காக, பகவான் எடுத்த அவதாரம் மச்சாவதாரம் என்பார்கள். வானியல் தத்துவப்படி மச்சம் என்பது மீன ராசியைக் குறிப்பது. மீனராசி காலபுருஷ தத்துவத்தின்படி, பனிரெண்டாவது ராசி. மறை பொருளை மீட்டெடுக்கும் ராசி. வேதத்தை குறிக்கும் ராசி. வேதத்திற்கும் “மறை” என்றுதானே பெயர். அந்த வேதங்களைத் தானே பகவான் மச்சமாக வந்து மீட்டெடுத்தார். அடுத்தது, வேதத்தின் குரு பகவான் தானே. மீனத்தின் அதிபதி குரு தானே. சித்திரை மாத சுக்ல பட்சத்தில் திரயோதசி திதியில் மன் நாராயணன் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவம் எடுத்தார். மச்ச மூர்த்தி ஆலயங்கள் குறைவு. ஊத்துக்கோட்டை, நாகலாபுரத்தில் வேத நாராயண சுவாமி எனும் பெயரில் சேவை சாதிக்கிறார். அற்புதமாக, மச்சாவதாரக் கோலத்தில் அருள்புரியும் திருத்தலம். மூலவராக மச்சாவதார மூர்த்தி வேத நாராயணப் பெருமாளாக, தேவி பூதேவியுடன் தனி சந்நதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே. மூலவர் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. மீனராசியில், சந்திரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் மச்ச ஜெயந்தி காலத்தில், வேதம் படித்தவர்கள் மட்டுமல்ல, கல்வி கற்கின்ற எல்லோரும், கல்வியை சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள், கலைகளை சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எல்லோரும்  அன்றைக்கு (28.4.2022 வியாழன்) அவசியம் பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி, அர்ச்சனை செய்வதன் மூலமாக, அவர்கள் தங்கள் தொழிலில் மிகப்பெரிய ஏற்றத்தை பெறலாம். கல்வியில் முன்னேறலாம்.29.4.2022 – வெள்ளிக்கிழமை – ரங்கம் தேர் திருவிழாகோயில் என்றால் வைணவத்தில், திருவரங்கத்தைத் தான் குறிக்கும். அந்த ரங்கத்தில், விழாக்கள் நடைபெறாத நாட்கள் குறைவு. பன்னிரண்டு மாதங்களிலும் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். அதில், சித்திரைமாதம் ரங்கம் திருத்தேர் விழா மிக முக்கியமான விழா. அதுவும், சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் இந்த தேர் நிகழ்வு நடைபெறும். சித்திரை ரேவதி நட்சத்திரம் என்பது, திருவரங்கம் உற்சவ மூர்த்தியான நம்பெருமாளின் திருநட்சத்திரம்.“சைத்ரே ரேவதி ஸஞ்ஜாதம் சௌம்யா ஜாமாதரம் ப்ரபும்  வந்தே வாத்ஸல்ய நிலையம் கல்யாண குண சாகரம்”  என்பது ஸ்லோகம்.சித்திரை மாதத்தில் “விருப்பன் திருநாள்” எனப்படும் சித்திரை திருவிழா 11 நாள்கள் நடைபெறும். அதில் 9ஆம் நாள் திருவிழா அன்று, வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வருகின்ற கிளி மற்றும் சாற்று மாலையை அணிந்தபடி நம்பெருமாள் சித்திரை தேரில் வீதி வலம் வருவார். பல்லாயிரக்கணக்கான மக்கள் ‘‘திருவரங்கா, ரங்கா” என்ற கோஷத்துடன் வடம் தொட்டு தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தை ஒட்டி வழிநெடுக அன்னதானம், நீர் மோர், போன்ற  பானங்களை பொதுமக்கள் வழங்குவார்கள். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அற்புதமான விழா இந்த திருத்தேர் விழா….

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi