இந்தி திணிப்பு

இந்தியா என்பது பல்வேறு இனங்களின், மொழிகளின் கூட்டு தொகுப்பாகும். ஒரு மொழியோ அல்லது ஒரு மதமோ அல்லது ஒரு இனமோ இந்தியாவை எக்காலக்கட்டத்திலும் இணைத்ததில்லை. இந்தியாவில் 22 மொழிகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இவை அனைத்தும் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் இந்தியை பல்வேறு மாநிலங்களில் கட்டாயமாக்க ஒன்றிய அரசு முயன்று, தொடர்ந்து தோல்வியும் அடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் ஆட்சி மாற்றத்தையே உருவாக்கியுள்ளன. தமிழகத்தில் 1938ம் ஆண்டு இந்தி கட்டாயமாக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் இந்தி ஒழிக்கப்பட்டது.இந்தியாவில் மும்மொழி கொள்கை பேசப்படும்போதெல்லாம், ஏதாவது ஒரு வகையில் இந்தியை கட்டாயமாக திணிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் மும்மொழி கொள்கை கைவிடப்பட்டது. தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டபோதும் இந்தியை கட்டாய மொழியாக கற்பிக்க பரிந்துரை செய்யப்பட்டது. தமிழகம் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பால் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதை மாற்றியமைத்தது.பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாள் தொடங்கி, பல்வேறு மாநிலங்களில் இந்தியை புகுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஒரே நாடு, ஒரே மொழி என்கிற போக்கில் இந்தியை, இந்தியாவின் தேசிய மொழியாக்க மறைமுக திட்டங்கள் தீட்டப்பட்டன. அதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் ஒன்றிய அரசு தனது முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டே இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில், ‘‘ஜிப்மர் அலுவலக கோப்புகள் அனைத்தையும், எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும்’’ என ஆணை பிறப்பித்துள்ளார். ஜிப்மர் மருத்துவம் ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி நிறுவனமாக்கும் இம்முயற்சிக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவல் ரீதியாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டில் இந்தியை அதிகரிக்க ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பு மறைமுகமாக நடந்து வருகிறது. ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் களம் இறக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கல்வித்துறையில் இந்தி திணிப்பு தொடங்கிவிட்ட நிலையில், ஜிப்மர் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இந்தி திணிப்பை ஆரம்பத்திலேயே நாம் களைவது நல்லதாகும். ஒன்றிய அரசும் கூட்டாட்சி தத்துவத்தை கடைப்பிடித்து மற்ற மொழிகளுக்கு மதிப்பளிக்க முன்வர வேண்டும்….

Related posts

பாஜ அரசின் அவலம்

அனல்பறந்த விவாதம்

முதல் எப்ஐஆர்