இந்திரா நகர் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, செப். 26: 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி இந்திராநகர் பகுதியில் உள்ள இந்திராகாந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் ரங்கசாமி, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினர். அப்போது முதல்வர் ரங்கசாமி பேசுகையில், இப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நடுத்தர பள்ளியாக இருந்த இப்பள்ளியை உயர்த்திய ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். மேலும் பொதுத்தேர்வுகளில் 90 சதவீதம் வெற்றி பெற செய்துள்ளனர். பல்வேறு போட்டிகளில் இப்பள்ளி வெற்றி பெற்றுள்ளது.

ஆசிரியர்கள் முயற்சி செய்தால் மாணவர்களை கல்வியாளர்களாகவும், படைப்பாளராகவும், சாதனையாளராகவும் உருவாக்க முடியும். அரசு பள்ளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் கல்லூரிகளில் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பெற்ற தகுதியான ஆசிரியர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். புதிய தொழில்நுட்பம் மூலமாக கல்வி கற்பிக்க 8, 9ம் வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு டேப்லெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விரைவில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும். இந்த ஆண்டு தேர்வில் 90 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர பத்து சதவீதம் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்த என்ன செய்யலாம் என்று அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆகையால் மாணவர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவ. மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா