இந்திய மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்க 48 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் விரைவில் ஒப்பந்தம்: புதிய கல்விக் கொள்கையின்படி தூதுக்குழுவுடன் யுஜிசி பேச்சுவார்த்தை

புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கையின்படி இந்திய மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்க வசதியாக 48 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் (என்இபி) குறிப்பிட்டுள்ளபடி, மாணவர்கள் பன்முகத் திறனை பெறும் வகையில், ஒரே சமயத்தில் இரண்டு முழு நேர பட்டப் படிப்புகள் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. அதன்படி, இரண்டு பட்டப் படிப்புகளையும் மாணவர்கள் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ மேற்கொள்ள முடியும். ஒரே நிலை படிப்புகளை மட்டுமே இரண்டாக சேர்த்து மேற்கொள்ள முடியும். அதாவது, இரண்டு இளநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு முதுநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு பட்டயப் படிப்புகள் என்ற வகையில் மட்டுமே ஒரே சமயத்தில் படிக்க முடியும். இரண்டு பட்டப் படிப்புகளை, 3 வழிமுறைகளில் மேற்கொள்ள முடியும். முதலாவதாக, ஒரே சமயத்தில் இரண்டு பட்டப் படிப்புகளையும் நேரடி முறையில், கல்லூரிகளுக்குச் சென்று மேற்கொள்ளலாம். ஆனால், இரண்டு பட்டப் படிப்புகளுக்கான வகுப்பு நேரம் மாறுபட்டு இருக்கவேண்டும். அடுத்ததாக, ஒரு பட்டப் படிப்பை நேரடி முறையிலும் மற்றொன்றை இணைய வழி அல்லது தொலைதூர வழியில் மேற்கொள்ள முடியும். மூன்றாவதாக, இரண்டு பட்டப் படிப்புகள் வரை இணைய வழி அல்லது தொலைதூர வழியில் மேற்கொள்ள முடியும். இருந்தாலும் யுஜிசி-யின் இந்த புதிய நடைமுறையை ஏற்பது என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும். அதேநேரம் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியுஇடி) அல்லது அந்தந்த கல்வி நிறுவனங்களின் சேர்க்கை நடைமுறைகளின் அடிப்படையில், இந்த இரட்டை பட்டப் படிப்புகளில் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம். அவ்வாறு, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் பல்கலைக்கழகங்கள்தான், அந்த இரண்டு பட்டப் படிப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் குறுக்கிடாத வகையில் உரிய நடைமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய உயர்கல்வி துறையை சர்வதேசமயமாக்குவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியை ஊக்கமளிக்கும் வகையில், 48 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், இரட்டைப் பட்டப் படிப்புகள் தொடர்பான யுஜிசி-யின் புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குப் பதிலளித்துள்ளன.அந்த பட்டியலில், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம், பிரான்ஸ் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் யுனிவர்சிட்டாட் ஜெனா, தென்னாப்பிரிக்காவின் டர்பன் யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி, மான்செஸ்டர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேற்கண்ட 48 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் தங்களது பல்கலைக் கழங்களுடன் இரட்டைப் பட்டப்படிப்பை இந்திய மாணவர்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளன. அதனால், அந்த பல்கலைக்கழகங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து யுஜிசியின் தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், ‘இரட்டை பட்டப்படிப்பு குறித்து ஆலோசிக்க ஆஸ்திரேலியா பல்கலைக்கழக குழுவினர் அடுத்த வாரம் இந்தியா வருகின்றனர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் இந்த வாரம் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். அப்போது இரட்டைப் பட்டப்படிப்பு தொடர்பாக யுஜிசி வகுத்துள்ள விதிமுறைககள் குறித்து பேசி முடிவு எடுக்கப்படும். இத்திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் இந்திய மாணவர்கள் ஒரே நேரத்தில் இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பையும் படிக்க முடியும்’ என்றார்….

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்