இந்திய பெண்ணை கரம்பிடித்த வாலிபர்; காதல் மனைவியிடம் இருந்து என்னை பிரித்துவிட்டார்கள்: தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நியூசிலாந்து யூடியூபர்

புதுடெல்லி: அரியானாவை சேர்ந்த பெண்ணை நியூசிலாந்து யூடியூபர் திருமணம் செய்த நிலையில், தற்போது அவரது பெயர் தடுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. அதனால், அவரது மனைவி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நியூசிலாந்த் நாட்டின் புகழ்பெற்ற யூடியூபர் கார்ல் ரோக், கடந்த 2019ல் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த போது அரியானாவை சேர்ந்த மனீஷா மாலிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நியூசிலாந்தில் உள்ள கார்ல் ரோக், மீண்டும் இந்தியா வருவதற்காக முயன்று வருகிறார். ஆனால், அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி தடுப்புப் பட்டியலில் ஒன்றிய அரசு வைத்துள்ளது. மேலும், அடுத்தாண்டு வரை அவர் இந்தியாவுக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி மனீஷா மாலிக், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கடந்த 2013ம் ஆண்டு முதல் கார்ல் ரோக் இந்தியாவுக்கு வந்து செல்கிறார். அவருக்கு நியூசிலாந்து மற்றும் இந்தியாவில் குடியுரிமை உள்ளது. அவர் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர். அவரது பெயரை தடுப்பு பட்டியலில் சேர்க்கும் முன், அவருடன் இந்திய ஒன்றிய அரசு பேசவில்லை. அவருக்கு வாய்மொழியாக மட்டுமே அறிவிக்கப்பட்டது. என் கணவரை, ஒன்றிய அரசு என்னிடம் இருந்து பிரித்துவிட்டது. எனவே, கார்ல் ரோக் இந்தியா வருவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிகா ஆர்டனிடம், ஆன்லைன் மூலம் தனது பிரச்னையை கார்ல் ரோக் தெரிவித்தார். அதில், ‘இந்திய அரசு என்னை இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுத்துள்ளது. என் மனைவியிடமிருந்து என்னைப் பிரித்து விட்டது. அரியானாவை சேர்ந்த அவரை நான் கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டேன். டெல்லியில் இருந்தபோது எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. அதிலிருந்து மீண்ட பிறகு, மற்ற நோயாளிகளுக்கு உதவ இரண்டு பிளாஸ்மா தானம் செய்துள்ளேன்’ என்று கூறினார். மறுபுறம், கார்ல் ரோக் விவகாரத்தில், அவர் சுற்றுலா விசா நிபந்தனைகளை மீறியதாகவும், வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் வெளியுறவு துறை வட்டாரங்கள் கூறின. …

Related posts

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மதுபான கொள்கை விவகாரத்தில் கவிதா ஜாமீன் வழக்கில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ்

நீட் தேர்வு மோசடி: மேலும் ஒருவர் கைது