இந்திய கால்பந்து நட்சத்திரம் கமலா தேவி ஓய்வு

புதுடெல்லி: இந்திய மகளிர் கால்பந்து அணி நட்சத்திர வீராங்கனை கமலா தேவி (29) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கமலா தேவி 2010ல் இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கினார். இதுவரை 36 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி  33 கோல் அடித்துள்ளார். தேசிய அணியை தவிர ரயில்வே, ஈஸ்டர்ன் ஸ்போர்ட்டிங் யூனியன், எப்சி கோலாபூர் சிட்டி, கேரளா சிட்டி எப்சி ஆகிய கால்பந்து கிளப்களுக்காகவும் 52 ஆட்டங்களில் விளையாடி 66 கோல் அடித்துள்ளார். 2010, 2012, 2014, 2016ல் நடந்த தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் களமிறங்கி அசத்தியுள்ளார்.  2014 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் களமிறங்கியுள்ளார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) சார்பில் 2017ம் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். பலமுறை ஆட்ட நாயகி விருதும் பெற்றுள்ளார்.ஓய்வு முடிவு குறித்து கமலா தேவி கூறுகையில், ‘இது எனக்கு கடினமான முடிவு. ஆனாலும்  கால்பந்து விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்க விரும்புகிறேன். மீண்டும் சொல்கிறேன் இது எனக்கு கடினமான முடிவு. இந்த தருணத்தில் முதலில் என் பெற்றோருக்கும், அன்பான எடோம்சாவுக்கும், எப்படி விளையாடுவது என எனக்கு கற்றுக் கொடுத்த ஓஜா பிரேனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது வாழ்க்கை முழுவதும் வழி நடத்திய, ஆதரவளித்த  மரியாதைக்குரிய  உள்ளூர் சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி. இந்திய அணி, ரயில்வே உட்பட நான் விளையாடிய எல்லா அணிகளின் பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றார்….

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்