இந்தியா முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சூழலை நமது எம்பிக்கள் ஏற்படுத்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை – திருவான்மியூரில் நடைபெற்ற,  தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களது மகள் டாக்டர் நித்திலா – கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் டாக்டர் ஆர்.மகேந்திரன் அவர்களது மகன் டாக்டர் கீர்த்தன் ஆகியோரது திருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தார்.அதுபோது அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:இது கழக குடும்பத்தில் நடைபெறும் திருமணம்; நம்முடைய குடும்பத்தில் நடைபெறும் திருமணம் என்கிற உணர்வோடு நாம் எல்லாம் இதில் கலந்துகொண்டு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்கிறோம்.நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்று அந்த அமைச்சரவைக்கு பெருமை சேர்த்த நம்முடைய நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் தங்கபாண்டியன் – ராஜாமணி பாப்பாத்தி அவர்களுடைய மகள் வழி பேத்தியும், முன்னாள் ஐ.ஜி. சந்திரசேகர் – திருமதி. சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடைய புதல்வியுமான மருத்துவர் நித்திலா சந்திரசேகர் எம்.பி.பி.எஸ்., எம்.டி., அவர்களுக்கும் – திரு. வி.எஸ்.ஆர். ராஜராம் – திருமதி. விஜயலட்சுமி ஆகியோரின் பேரனும், மருத்துவர் ஆர். மகேந்திரன் – அபிராமி மகேந்திரன் அவர்களது புதல்வனுமான மருத்துவர் கீர்த்தன் மகேந்திரன் அவர்களுக்கும் நடைபெறும் இந்த இனிய திருமண விழாவில் கலந்துகொண்டு- இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன்.இங்கு நம்முடைய பொதுச் செயலாளர் – அண்ணன் துரைமுருகள் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்; நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், அவருடைய இயற்பெயர் சுமதி அவர்கள். அவர்  சுமதியாக இருந்தபோது, கல்லூரியில் ஒரு பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவர்.நம்முடைய மா.சுப்ரமணியன் அவர்கள் சுட்டிக்காட்டியது போல, இளைஞர் அணியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடத்திய நேரத்தில், அந்த மாநாட்டிற்கு யார் தலைமை வகிப்பது? அந்த மாநாட்டை திறந்து வைப்பது? அதில் யார் யார் பங்கேற்பது? என்பதையெல்லாம் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அடையாளம் காட்டி எங்களுக்கு குறித்து கொடுத்தார்கள்.அப்போது அந்த மாநாட்டின் கொடியேற்று விழா நிகழ்ச்சியை தங்கபாண்டியனின் மகள் சுமதியை அவர்களை அழைத்து நடத்துங்கள் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்கள்.அதற்கு அடுத்த நாள் எங்களை அழைத்து, “சுமதி என்று பெயர் போட வேண்டாம். நான் பெயர் சொல்கிறேன், அந்தப் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்துங்கள் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு அவர்களை அழைத்து அனுமதி கேட்கச் சொன்னார்கள் தகவலை தெரிவிக்கச் சொன்னார்கள்”.அப்போது அவர்களை அழைத்து, “தலைவர் இவ்வாறு விரும்புகிறார். நீங்கள் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பணிக்கு ஏதேனும் இடையூறு வந்து விடுமா?” என்ற கேள்வியை கேட்டபோது, “நான் எந்த இடையூறைப் பற்றியும் கவலைப்படவில்லை. தலைவர் சொன்னதை அவ்வாறே நான் ஏற்றுக்கொள்கிறேன். உடனடியாக என்னுடைய பெயரைப் போடுங்கள். நான் மகிழ்ச்சியுடன் வந்து கலந்து கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.அதற்குப் பிறகு அவர் ஒப்புக்கொண்டார் என்று தலைவரிடத்தில் சொன்னபோது, “நான் மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக சந்தோஷப்படுகிறேன். அதே நேரத்தில் அவருடைய பெயரை மாற்றி தமிழச்சி தங்கபாண்டியன் என்று வெளியிடுங்கள்” என்று விளம்பரப்படுத்தச் சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் அவர் தமிழச்சி தங்கபாண்டியனாக மாறினார்.அந்த அளவிற்கு தலைவர் கலைஞர் அவர்களுடைய உள்ளத்தில் அந்த குடும்பம் எந்த அளவிற்கு இடம் பெற்றிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.அது மட்டுமல்ல நான் சென்னை மாநகரத்தின் மேயராகப் பொறுப்பேற்றிருந்தபோது அண்ணன் தங்கபாண்டியன் அவர்கள் நம்முடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள்.அப்போது ஒரு மாநாட்டிற்காக அமெரிக்காவிற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அண்ணன் தங்கபாண்டியன் அவர்கள் என்னை வாழ்த்துவதற்காக நேரடியாக ரிப்பன் மாளிகைக்கே வந்து, என்னுடைய அறைக்கு வந்து, என்னை வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.அது மட்டுமல்ல, அவர் வாழ்த்திவிட்டு சென்றார். நான் அமெரிக்காவில் அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் உடல் நலிவுற்று மறைந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. நான் அதிர்ச்சி அடைந்தேன்.முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு துணை அமைப்பாக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை தொடங்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு செய்து அதை தொடங்கி வைத்தார்கள்.அவ்வாறு தொடங்கி வைத்த நேரத்தில் அதற்கு யாரை பொறுப்பாளர்களாக, தலைவர்களாக நியமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, நம்முடைய கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் திருச்சியில் கூட்டினார்கள்.அதில் பல மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அப்படிப்பட்ட கருத்துகளை எடுத்துச் சொல்லுகிறபோது, அண்ணன் தங்கபாண்டியன் அவர்கள் அந்த இளைஞர் அணிக்கு ஸ்டாலினைத்தான் தலைவராக நீங்கள் நியமிக்க வேண்டும் என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னார்கள்.அன்றைக்கு இளைஞரணிச் செயலாளராக நான் பொறுப்பேற்றிருந்தேன் என்று சொன்னால், அதற்கு முதல் குரல் கொடுத்தவர் அண்ணன் தங்கபாண்டியன் என்பதை எண்ணி நான் இன்றைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.இன்னொரு செய்தியையும் நான் சொல்லியாக வேண்டும். நம்முடைய சந்திரசேகர் அவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்று நான் கருதுகிறேன்.தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அப்போது நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தேன். நாமக்கல் மாவட்டம் – எலச்சிபாளையம் பகுதியில் கழகத்தின் கொடியேற்று விழா நிகழ்ச்சி. அங்கு இருக்கும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள், நான் அந்த கொடியை ஏற்றக்கூடாது என்று ஒரு பிரச்சினையை கிளப்பி தகராறு செய்து கொண்டிருந்தார்கள். என்னை அந்தப் பகுதிக்கு வரக்கூடாது என்று காவல்துறை உத்தரவிட்டு இருந்தது.அந்த உத்தரவையும் மீறி நான் அங்கே சென்றேன். கொடியேற்றிவிட்டுத்தான் நான் போவேன் என்று அங்கு கொடி ஏற்றி வைத்தேன்.கொடியேற்ற போகிறபோது காவல்துறை என்னைச் சுற்றி வளைத்தது. என்னைக் கைது செய்தார்கள். அப்போது என்னைக் கைது செய்தவர்தான் இங்கிருக்கும் சந்திரசேகர் அவர்கள். அவர் மறந்திருக்க மாட்டார். நான் அதை நிச்சயமாக மறக்கமாட்டேன்.அப்போதுகூட சொன்னார், “வேறு வழியில்லை அண்ணே, கைது செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை. தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னார். கடமையை செய்யுங்கள் அதுதான் காவல்துறையின் கட்டுப்பாடு என்று அதில் நான் தலையிடமாட்டேன் என்று சொல்லிவிட்டுச் சென்றேன்.எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்கு இந்த குடும்பத்தோடு நாங்கள் ஒட்டி உறவாடி, அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் இன்றைக்கு எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் அவருடைய வீட்டுச் செல்வங்களுக்கு இன்றைக்குத் திருமணம் நடக்கிறது.இங்கே சகோதரர் மகேந்திரன் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறபோது சொன்னார். அவர் இந்த இயக்கத்திற்கு வந்து சேர்ந்ததற்கு பிறகு, ஐ.டி. என்ற அந்தப் பிரிவில் பொறுப்பேற்றுக் கொண்டு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அவரே சொன்னார், பெரும் வெற்றியை நாம் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். நான் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிறகு, அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், இனி வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நாம் தான் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.எனவே இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்தச் சீர்திருத்தத் திருமணம்; இதனைச் சீர்திருத்தத் திருமணம் என்று சொல்லக்கூடாது – இப்போது இதை திராவிடத் திருமணம் என்றே சொல்லலாம்.ஏனென்றால் திராவிட மாடலில்தான் நம்முடைய ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. எனவே இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று முதன்முதலில் தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா தலைமையில் 1967-இல் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றித் தந்தார்கள்.அந்தத் தீர்மானம் இன்றைக்கு எந்த அளவிற்கு மக்களிடத்தில் பரவலாகி, விரிவாகி, பிரபலமாகி இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.அதைத்தான் தொடர்ந்து தலைவர் கலைஞர் சொன்னார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் இந்தச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.எனவே இங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம், நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எவ்வாறு தமிழ்நாட்டில் இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்ற நிலை இருக்கிறதோ, அதேபோல இந்தியா முழுமைக்கும் இந்தத் திருத்ததை கொண்டுவர, நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தருவதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும்.புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” மணமக்கள் வாழ்க… வாழ்க… வாழ்க… என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.இவ்வாறு அவர் உரையாற்றினார்….

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்