இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 80%பாதிப்பு பதிவானதாக பிரதமர் மோடி வேதனை!

டெல்லி : கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் 3வது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அலட்சியப்படுத்தி வருவதால், மூன்றாம் அலை தாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். நிலைமையை எதிர்கொள்வது குறித்து, 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் கடந்த செவ்வாய் கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று கொரோனா நிலவரம் தொடர்பாக டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளுதல், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துதல், கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துதல், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். மாநில முதல்வர்களின் தரப்பில், தடுப்பூசி பற்றாக்குறை தவிர்க்க அதன் விநியோகத்தை தீவிரப்படுத்த வேண்டும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 80%பாதிப்பு பதிவானதாக குறிப்பிட்டார். மராட்டியம், கேரளா, ஒடிசா கர்நாடகா , தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கொரோனா 2வது அலையில் பெரும் பாதிப்பை சந்தித்ததாக பிரதமர் மோடி கூறினார்.எனவே 3வது அலையை தடுப்பது 6 மாநில அரசுகளின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தி உள்ளார். கொரோனா நிவாரண பணிகளுக்கு ஒன்றிய அரசு ரூ.23,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக கூறிய பிரதமர் மோடி,சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த மாநில அரசுகள் நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் இதில் தேக்கம் ஏற்படாமல் மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார். …

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு