இந்தாண்டு இதுவரை 142 கிலோ பறிமுதல் – 123 பேர் கைது போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்க நடவடிக்கை

தூத்துக்குடி, ஜூன் 27: போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தாண்டு இதுவரை 142 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், 123 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் நடந்தது. எஸ்பி பாலாஜி சரவணன் கையெழுத்திட்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். வியாபார ரீதியாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டம் அல்லாமலேயே ஓராண்டு ஜாமீன் வழங்காமல் சிறையில் அடைக்க சட்டத்தில் வழிவகை உண்டு. அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக 66 வழக்குகள் பதிந்து 123 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 142 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தருவதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் செல்போன் 83000 14567 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும், என்றார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் கார்த்திகேயன், கோடிலிங்கம், டிஎஸ்பிக்கள் சத்யராஜ், சுரேஷ், போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், எஸ்ஐக்கள் உட்பட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு