இது நிஜம்மாவே மினி பஸ்!

வித்தியாசமான திறமைகள் நம்மூரில் எவ்வளவோ கொட்டிக் கிடக்கிறது.கன்னியாகுமரியில் நட்டாலம் என்கிற ஊரில் வசிக்கும் வெங்கடேஷ், மினி பஸ் செய்வதில் கில்லாடி.மினி பஸ் என்றால் அதில் யாரும் பயணிக்க முடியாது. கையில் தூக்கிச் செல்லும் அளவுக்கு மினியேச்சர் பஸ்.ஹெட்லைட், நம்பர் போர்ட், பெயர் பலகை, சீட் என அச்சு அசலாக பஸ்ஸை குட்டியூண்டாக செய்வதில் இவர் கில்லி.செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்க, ஓர் ஆள் ஏன் மெனக்கெட்டு இந்த மினியேச்சர் பஸ்களை உருவாக்க வேண்டும்? வெங்கடேஷே சொல்கிறார்.‘‘சின்ன வயசுல இருந்தே பஸ்சுலே போறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ஸ்கூலுக்கே பஸ்சில்தான் போயிட்டு வரணும். அப்போ இருந்தே என்னவோ பஸ் மீது ஈர்ப்பு. சின்ன வயசுலே விளம்பர நோட்டீஸ்களில் இருக்கும் பஸ்சை அப்படியே கட் பண்ணி வச்சிட்டு, தெர்மாக்கோலில் நானா குட்டி பஸ் செய்வேன். ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போது தான் தத்ரூபமா செய்ய ஆரம்பிச்சேன். காயிலான் கடையில் கிடைக்கும் பழைய பொம்மை கார்களில் இருக்கும் டயரை எல்லாம் வாங்கிட்டு வந்து சும்மா ஏனோ தானோனு செய்திட்டு இருப்பேன். பாக்குறதுக்கு அவ்ளோ நல்லாயிருக்காது. ஆனாலும், எனக்கு ரொம்பச் சந்தோஷத்தை கொடுக்கும். எம்.எஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் முடிச்சிட்டு, வேலையும் ஏதும் பெரியளவில் தேடாமல் பக்கத்திலேயே வேன் டிரைவராகப் போயிட்டு இருந்தேன். அதுபோக, கூலி வேலைகளும் பார்ப்பேன். இந்த லாக்டவுனில் மொத்தமா எந்த வேலையும் இல்லாமல் வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழல். அப்போ தான், பழைய ஞாபகம் வந்து மினியேச்சர் பஸ் செய்யலாம்னு தோணுச்சு.அதப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கும் போது, ஃபோம் போர்ட்டுனு ஒரு கைவினை பொருட்கள் செய்ற மெட்டீரியல் இருப்பதைப் பத்தி தெரிச்சுக் கிட்டேன். ஃபோம் போர்ட் வாங்கி, அதில் பஸ் வரைந்து கட் பண்ணி செஞ்சப்போ பாக்குறதுக்கு ஒரிஜினல் பஸ் போலவே தத்ரூபமாக இருந்தது.முதன் முதலில் எனக்குப் பிடிச்ச கவர்மென்ட் பஸ்தான் பண்ணேன். அந்த லுக்கை அப்படியே மினியேச்சர் வெர்ஷனலில் கொண்டு வரணும்னு, பல நாள் ரோட்டில நின்னு பஸ்சையே வேடிக்கை பாத்திட்டு இருந்திருக்கேன். லாக்டவுன்ல பஸ்ஸையும் பார்க்க முடியாம சிரமபட்டேன். லைட்டிங், சீட், பெயர் பலகை எல்லாம் செஞ்சு ஒட்டின அப்புறம் ரொம்ப நல்லா இருந்தது. ஆனா, நிறைய சொதப்பி, அதிலிருந்து கத்துகிட்டு தான் ஃபைனல் லுக் கொண்டு வந்தேன்.அப்போ ஒரு அண்ணன் இதைச் சோஷியல் மீடியாவிலே போஸ்ட் பண்ணாங்க. அதைப் பாத்துட்டு நிறையப் பேரு போன் பண்ணி பாராட்டினாங்க. வெளிநாட்டில் இருந்துலாம் கால் பண்ணாங்க. அதோடு, இந்தமாதிரி செய்து கொடுக்கச் சொல்லி ஆர்டர்  கொடுத்தாங்க. செய்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். வீட்டில் இருக்கிறவங்களும் ஏதோ செய்யுறான்னு நம்பினாங்க.ஒரு மினியேச்சர் பஸ் செய்து முடிக்கிறதுக்கு முழுசா 2 வாரம் ஆகிரும். ரொம்பப் பொறுமை தேவை. சின்ன மிஸ்டேக் பண்ணினாகூட பாக்குறதுக்கு நல்லாயிருக்காது. அதனாலே ரொம்பக் கவனமாக டைம் எடுத்து பண்ணுவேன்.எனக்கு வந்த முதல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பாக்கிற ஒருத்தர் ஞாபகார்த்தமாக இருக்கணும்னு ஆர்டர் பண்ணாரு. அதன் பிறகு, டிராவல்ஸ் உரிமையாளர் ஒருத்தர் அவர் முதன்முதலா வாங்கிய வேன் மாதிரியே வேணும்னு கேட்டாங்க. அப்படியே தொடர்ச்சியா, நம்மூர் கவர்மென்ட் பஸ், கேரளா கவர்மென்ட் பஸ், மினி வேன், லாரி, ஜீப்னு நிறைய ஆர்டர் கிடைச்சது.நான் செஞ்ச ஒரு பஸ் 2.5 அடி நீளம் உடையது. குறைவான உயரத்துல வேணும்னு கேட்பாங்க. அதுக்கு ஏத்தமாதிரியும் செய்து தருவேன். பஸ்சோட வெளிப்பகுதிய செய்யறது விட உட்புறம் செய்யறது தான் கஷ்டம் குறிப்பா சீட் ஒரே வகைல சரியான அளவு இருக்கணும். லைட் செட் பண்ணுறது, போர்ட், பெயர்ப்பலகை, சீரியல் பல்பு, கைப்பிடி கம்பினு ஒவ்வொன்னும் முழுமையா இருக்கும். அசலுக்கும் இந்த மினியேச்சர் பஸ்ஸுக்கும் ஒரு துளி கூட வித்தியாசம் இருக்காது.என்னிடம் பஸ் வாங்கிய ஓய்வு பெற்ற ஓட்டுனர் ஒருவர் அடிக்கடி போனில் அழைத்து நெகிழ்ச்சியாகப் பேசுவார். ‘தினமும் எழும்போது என் பஸ் முகத்துலேதான் முழிக்கிறேன். ரொம்ப நன்றிப்பா’ எனக் கலங்குவார்.மனசுக்கு பிடித்த வேலையாக இருந்தாலும், முழுநேரமாகச் செய்கிற அளவுக்கு வருவாய் கிடைக்கிறதில்லை. அந்தமாதிரி கிடைச்சதுனா, ரொம்பச் சந்தோஷமாகச் செய்யலாம். வீட்டிலேயுமே சப்போர்ட் பண்றாங்க. ஃப்ரெண்ட்ஸ்லாம் போர் அடிச்சா நான் செய்யுறதை வேடிக்கை பாக்கிறதுக்காகவே வீட்டுக்கு வருவாங்க.சின்ன வயசுலே கார் பொம்மைலாம் வாங்கி விளையாடுற அளவு குடும்பச் சூழல் இல்லை. உடைஞ்சு போயி தூக்கி போடுற பொம்மை கார்களைப் பிரிச்சு பார்த்துதான் எப்படி பண்ணியிருக்காங்கன்னு பார்ப்பேன். குழந்தையா இருந்தப்போ விளையாட முடியாதது, இப்போ நிறைவேறி இருக்கு.நான் செய்ததிலே எனக்குக் கேரளா பஸ்தான் ரொம்பப் பிடிக்கும். கலர்ஃபுல்லா இருக்கும். வால்வோ கார் செய்யணும்னு ரொம்ப நாள் ஆசை. அதேபோலப் பைக் பிரியர்களுக்குப் பிடித்த மாதிரி புல்லட், எல்லா வகையான டூவீலரும் செய்து தரணும்னு ஆசை. பொழுதுபோக்கா தான் இதைச் செய்றேன் .இதுவே என் முழு வேலையாக மாறினாலும், மகிழ்ச்சிதான்’’ என்றார் வெங்கடேஷ்.- திலீபன் புகழேந்தி…

Related posts

ஆமை வேகத்தில் சென்னை ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயம்: கடந்த 10 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை; ரயில் பயணிகள், ஊழியர்களுக்கு காப்பீடு கிடைப்பதில் சிக்கல்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐபிசி, பிஎன்எஸ் சட்டமாக மாறியது? சாதக, பாதகங்கள் என்ன? சட்ட வல்லுநர்கள் கருத்து

தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?