இது இந்தியா தான் ‘ஹிந்தி’யா அல்ல உள்ளூர் மொழிகளை இந்திக்கு இணையாக, ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: இது இந்தியா தான் ‘ஹிந்தி’யா அல்ல. தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக என்று ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: செப்டம்பர் 14ம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கான விழாவில் பேசிய இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்” என்றும், “நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும்.ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால், கலாசாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற பண்பாட்டிற்கு நேர் எதிரானது. இந்தியாவின் வரலாறும் பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. இந்தி என்கிற மொழி உருவாவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழை முதன்மை மொழியாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பமும், அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்திய ஒன்றிய நிலப்பரப்பையும் அதன் எல்லைகளைக் கடந்தும் பரவியிருந்ததை வரலாற்றாசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அப்போதுதான் உண்மையான கலாசாரத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருக் கிறார்கள். இந்தி ஆதிக்க உணர்வை எதிர்த்து தாய்மொழி காத்திடத் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக் கொண்டது எங்கள் தமிழ்நாடு. இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல. இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது. அதுபோலவே, இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர்  இந்தியை உயர்த்திப் பிடிப்பதற்காக, ‘உள்ளூர் மொழி’களையும் தனக்குக் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டு பேசியிருக்கிறார்.அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மை மிக்க மொழிகளைக் காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்கிற ஆங்கிலம். இந்தியாவின் முதல் பிரதமர்  நேரு அளித்த உறுதிமொழியின் காரணமாக அந்த வேலி இன்றளவும் வலுவாக இருப்பதால்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண -இலக்கிய வளத்துடன் செழித்து வளர்ந்து நிற்கும் செம்மொழியாம் தமிழ்மொழியை ஆதிக்க மொழி ஆடுகளால் மேய முடியவில்லை. இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை ‘ஹிந்தி’யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம். உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளை, உங்கள் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் உள்ளூர் மொழிகளை இந்திக்கு இணையாக, ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக விரைவில் அறிவியுங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக்கி, இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்